UPDATED : ஏப் 16, 2023 12:58 PM
ADDED : ஏப் 16, 2023 01:01 AM

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே, காதல் கலப்பு திருமணம் செய்த மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை, தடுக்க வந்த தன் தாயையும் கொன்று தலைமறைவானார். வெட்டுக்காயங்களுடன் தப்பிய மருமகள், மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, காரப்பட்டு அடுத்த அருணபதியைச் சேர்ந்தவர் தண்டபாணி, 47. இவரது மனைவி சுந்தரி, 40. இவர்களது மகன் சுபாஷ், 25.
தண்டபாணி குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பணியாற்றி வந்துள்ளார். எம்.பி.ஏ., பட்டதாரியான சுபாஷ், திருப்பூரிலுள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கு, உடன் பணிபுரிந்த அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த, வேறு சமூகத்தைச் சேர்ந்த எம்.எஸ்சி., பட்டதாரியான அனுசுயா, 25, என்பவரை சுபாஷ் காதலித்து உள்ளார்.
இதற்கு, தண்டபாணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதையும் மீறி, அனுசுயா வீட்டினர் சம்மதத்தோடு, மார்ச் 27ல் அவரை சுபாஷ் திருமணம் செய்துள்ளார்.
விருந்துக்கு அழைப்பு
திருமணத்திற்கு பின், புதுமண தம்பதி, திருப்பத்துார் மாவட்டத்தில் குடியேறினர். அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் சுபாஷ் பணியாற்றி வந்தார்.
அருணபதியிலுள்ள சுபாஷின் பாட்டி கண்ணம்மாள், புதுமண தம்பதியை விருந்துக்கு அழைத்துஉள்ளார்.
தமிழ் புத்தாண்டன்று வீட்டிற்கு வந்த சுபாஷ் - அனுசுயாவுக்கு, பாட்டி கண்ணம்மாள் விருந்து கொடுத்துள்ளார். இதுபற்றி தன் மகன் தண்டபாணிக்கும் அவர் தகவல் கூறியதால், அவரும் அங்கு வந்துள்ளார்.
தாக்குதல்
நேற்று முன்தினம் இரவு மகன் சுபாஷிடம், தண்டபாணி நன்றாக பேசினார். ஆனால், மகன் தன் எதிர்ப்பை மீறி, வேறு சமூக பெண்ணை திருமணம் செய்த உறுத்தல், தண்டபாணிக்கு இருந்து உள்ளது.
நேற்று அதிகாலை 5:00 மணியளவில் அரிவாளுடன் தன் தாய் வீட்டிற்கு வந்த தண்டபாணி, மகன் சுபாஷை சரமாரியாக வெட்டினார். பதறி தடுக்க வந்த தாய் கண்ணம்மாளின் கழுத்தையும் தண்டபாணி வெட்டினார்.
இருவரின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த மருமகள் அனுசுயா, அங்கிருந்து தப்பியோட முயன்றார். அப்போது, 'உன்னால் தான் என் குடும்பத்திற்கு இந்த நிலை' எனக்கூறிய தண்டபாணி, அவரையும் வெட்ட முயன்றார்.
தடுத்த அனுசுயாவின் விரல்கள் உட்பட பல்வேறு இடங்களில், வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அனுசுயா மயங்கி விழுந்ததும், அவர் இறந்து விட்டதாக கருதிய தண்டபாணி, அங்கிருந்து தப்பினார்.
சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்த அனுசுயா, உள்ளே சென்று பார்த்த போது, ரத்த வெள்ளத்தில் தன் காதல் கணவர், பாட்டி கண்ணம்மாள் இறந்து கிடந்ததை பார்த்து கதறினார்.
கிழிந்த தன் ஆடைகளை மறைக்க, கணவரின் சட்டையை எடுத்து அணிந்தபடி சிறிது துாரம் சென்றவர், மேலும் நடக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அவ்வழியாக சென்ற கிராம மக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுசுயாவிடம் விசாரித்தபோது, நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஊத்தங்கரை போலீசார், அனுசுயாவை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தனிப்படை அமைப்பு
ஊத்தங்கரை டி.எஸ்.பி., அமல அட்வின் மற்றும் போலீசார், கொலையான இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தண்டபாணி மீது கொலை, கொலை முயற்சி உட்பட மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். இரு தனிப்படைகள் அமைத்து, தப்பியோடிய தண்டபாணியை தேடி வருகின்றனர்.
அனுசுயாவிடம், ஊத்தங்கரை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அமர் ஆனந்த், நேரில் வாக்குமூலம் பெற்றார். பின், அனுசுயா மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

