தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது எப்படி? செந்தில்பாலாஜி தானாக திடீர் விளக்கம்

மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது எப்படி? செந்தில்பாலாஜி தானாக திடீர் விளக்கம்

மின்வாரிய ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போனது எப்படி? செந்தில்பாலாஜி தானாக திடீர் விளக்கம்

43


UPDATED : ஜூன் 05, 2026 12:05 AM

ADDED : ஜூன் 04, 2026 11:46 PM

Follow on GoogleFavourite on Google

43

UPDATED : ஜூன் 05, 2026 12:05 AM ADDED : ஜூன் 04, 2026 11:46 PM


43
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -



தமிழக மின் வாரியத்தில், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ள நிலையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில், டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற, 20க்கும் மேற்பட்ட, 'ஹார்டு டிஸ்க்'குகள் திருடப்பட்டு உள்ளன. இந்நிலையில், ''இந்த விவகாரத்தை பூதாகரமாக்கும் முயற்சி எடுபடாது,'' என, மின்துறையின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திடீர் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., ஆட்சி அமைந்த பின், 2021 - 2023 வரை, மின் வாரியத்திற்கு, 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஒவ்வொன்றும், 50 சதவீதம் வரை கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டதில், மின் வாரியத்திற்கு, 397 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.

இதில், 500 கிலோ வோல்ட்ஸ் ஆம்பியர் திறன் உடைய, 800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய கோரப்பட்ட டெண்டர்கள், 2021 நவ, 23ல் திறக்கப்பட்டன. அப்போது, அதில் பங்கேற்ற, 26 ஒப்பந்ததாரர்கள் சொல்லி வைத்தது போல, ஒரு டிரான்ஸ்பார்மருக்கு, 13 லட்சத்து, 72,930 ரூபாய் என, விலை குறிப்பிட்டு இருந்தனர்.

இதனால், ஒப்பந்ததாரர்களுடன் பேச்சு நடத்தி, விலையை குறைத்து, 12 லட்சத்து, 49,800 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததாக, மின் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசால் நடத்தப்படும் மின்னணு சந்தை தளத்தில், ஒரு டிரான்ஸ்பார்மரின் விலை, 8 லட்சத்து, 91,000 ரூபாய் தான் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.

மின் வாரிய பொறியாளர் சங்கத்தினர், ஒரு டிரான்ஸ்பார்மரை, 7 லட்சத்து, 89,753 ரூபாய்க்கு வாங்கி விடலாம் என்று தெரிவித்து வந்தனர். ஆனால், அதை விடவும் குறைவாக, ராஜஸ்தான் அரசு, 7 லட்சத்து, 87,311 ரூபாய்க்கு கொள்முதல் செய்துள்ளது.

இதனால், அப்போதைய ஆட்சியாளர்களின் ஆசி பெற்ற ஒப்பந்ததாரர்கள், திட்டமிட்டு சந்தை விலையை விட, 50 சதவீதம் கூடுதலாக விலையை நிர்ணயம் செய்துள்ளனர்.

அதன்பின், மின் வாரியம் கேட்டுக் கொண்டதால், சிறிதளவு விலையை குறைத்துள்ளனர். தி.மு.க., ஆட்சியாளர்களும், ஒப்பந்ததாரர்களும் திட்டமிட்டு, ஊழல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர் என, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி வந்தது.

அந்த இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., சார்பில், இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்த தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசில் புகார்


இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின் வாரிய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அறையில் உள்ள கணிணியில் இருந்த ஹார்டு டிஸ்க் மற்றும் டெண்டர்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் அடங்கிய, 20 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.

கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மே, 16 மற்றும், 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவு ஊழியர்கள் பணியில் இருந்த போது, ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

யார் திருடியது என்பதை கண்டறிய முடியாமல் அதிகாரிகள் திணறினர். பின், வேறு வழியின்றி, ஜூன் 1ம் தேதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில், மலர்விழி புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட, 4, 5, 7 மற்றும் 9வது தளங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கணினி பராமரிப்பாளர்


இதில், பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்து உள்ளதால், கிடைத்த காட்சிகளை வைத்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கணிணி பராமரிப்பாளர்களை தவிர, வேறு வெளியாட்கள் யாரும் வரவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, 'ஆர்ம்டேக் கம்யூட்டர்ஸ்' என்ற நிறுவனத்தை சேர்ந்த கணிணி பராமரிப்பாளர் கோபிநாத், 31 என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, ஹார்டு டிஸ்க்குகளை திருடி, அவற்றை கர்நாடக மாநிலம் பெங்களூரில் பணத்திற்கு விற்று விட்டதாக, அவர் கூறினார்.

அவரை கைது செய்த போலீசார், ஹார்டு டிஸ்க்குகளை பறிமுதல் செய்வதற்காக நேற்று அவரை பெங்களூரு அழைத்துச் சென்றனர். யாருக்காக திருடினார்; யார் பணம் கொடுத்தது; எவ்வளவு பணம் கொடுத்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மிரட்டுகின்றனர்


இதற்கிடையே, மின்துறையின் முன்னாள் அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான செந்தில் பாலாஜி அளித்த பேட்டி: மின் வாரியத்தில் முக்கியமான, 'ஹார்ட் டிஸ்க்'கள் தொலைந்துள்ளதாகவும், தனிப்பட்ட முறையில் தன்னையே சிலர் மிரட்டுவதாகவும், மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். அமைச்சரையே மிரட்டுகின்றனர் என்றால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது?

மின் வெட்டு காரணமாக, பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மின் வினியோகம் குறித்து, அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டமே நடத்தவில்லை.

துறையில் ஒரு சதவீதம் கருப்பு ஆடுகள் இருக்கின்றன என்றால், மீதமுள்ள, 99 சதவீதம் பேரை கொண்டு அவர்களை கண்டுபிடிக்கலாம் அல்லவா? ஆட தெரியாதவர்கள், மேடை கோணல் என்பர். துறையை புரிந்து கொள்வதற்கு எந்த தகுதியும் இல்லை.

தவறு நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இவர்கள் தவறை பூதாகரமாக்குகின்றனர்; அந்த முயற்சி எடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

'ஹார்ட் டிஸ்க்' திருடியவர்கள் தப்ப முடியாது: நிர்மல் குமார்
த.வெ.க.,வைச் சேர்ந்த மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில், கணினி 'ஹார்டு டிஸ்க்'குகள் காணாமல் போனதாக, கடந்த மாதம் தகவல் தரப்பட்டது. அங்குள்ள விஜிலன்ஸ் பிரிவு விசாரணை செய்த நிலையில், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டு உள்ளனர்; என்ன உள்நோக்கத்துடன் செய்துள்ளனர்; எதனால் செய்தனர் என்பது குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணை முடிந்ததும், காவல் துறை சார்பில் அறிக்கை அளிக்கப்படும். மின் வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை, பாதுகாப்பாக வைக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.
கணினியில் உள்ள அனைத்து தரவுகளையும் சேமித்து வைக்கவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் விடப்பட்ட, 'டெண்டர்' ஆவணங்களும், நிலக்கரி கொள்முதல் தொடர்பான ஆவணங்களும், கணினியில் இருந்து, 'பேக் அப்' எடுக்கப்பட்டு, சேமித்து வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மின் வாரியத்தின் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் நடந்த ஊழல் குறித்த ஆவணங்கள், சி.பி.ஐ.,க்கு வழங்கப்பட்டுள்ளன. வாரியத்தில் சில நபர்கள் கடந்த மாதம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின், இதுபோன்ற வேலைகள் நடந்திருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
எந்த ஒரு நபரும், அரசையோ, அரசு சார்ந்த நிறுவனங்களையோ மிரட்டி பார்க்க முடியாது. யார் தவறான நபர்களோ, உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த தனி நபரும், அரசு நிறுவனத்தை நிர்வகிக்க முடியாது. 'ஹார்ட் டிஸ்க்' உட்பட முக்கிய ஆவணங்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதை எல்லாம் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. எந்த இடத்திலும் யாரும் தப்பிக்க முடியாது.
இந்த விவகாரத்தில், சில பணியாளர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது; ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த உள்நோக்கத்துடன் திருடப்பட்டது; யார் சொல்லி திருடினர்; பின்னணியில் யார் உள்ளனர்; என்ன மாதிரியான தரவுகளுக்காக திருடினர்; அனைத்தும் விசாரணை முடிவில் தெரியவரும். தி.மு.க., ஆட்சியில் மின் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பின், என்ன நடந்தது என, அனைவருக்கும் தெரியும்.
டெண்டருக்கு, மின் வாரிய இயக்குநர்கள் குழு தான் ஒப்புதல் அளித்ததாக, செந்தில் பாலாஜி கூறுகிறார். அப்புறம் ஏன் சி.பி.ஐ., விசாரணை வந்தது? அவர் அமைச்சராக இருக்கும் போது தான், டிரான்ஸ்பார்மர் வாங்க டெண்டர் விடப்பட்டது.
இயக்குநர் குழுவில், அவரே நான்கு பேரை உட்கார வைத்து விட்டு, ஒப்புதல் அளிக்க சொன்னால், ஒப்புதல் தர மாட்டார்களா? சூரியசக்தி மின் திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், மெகா வாட்டிற்கு, 25 லட்சம் முதல், 30 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும் பலரும் புகார் கூறினர். அப்போது, செந்தில் பாலாஜி தான் அமைச்சராக இருந்தார். விஞ்ஞான முறையில் தவறு செய்வது, செந்தில் பாலாஜிக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.



'துார சக்தி, ஓர சக்தியை காப்பாற்ற நடந்த சதியா?'
* அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என, உறுதியாக சொல்லலாம். 'துார சக்தி, ஓர சக்தி' என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயற்சி செய்கிறதா இந்த பேர சக்தி?
* தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்: முக்கிய ஆதாரங்களை களவு போக விட்டு, முந்தைய தி.மு.க., ஆட்சியில் நடந்த ஊழல்களையும், முறைகேடுகளையும் மூடி மறைக்கவும், அவர்களை காப்பாற்றவும், த.வெ.க., அரசு முயற்சிக்கிறதா என்ற நியாயமான கேள்வி எழுகிறது. எனவே, இந்த விவகாரத்தில் பின்னணியில் இருக்கும் அதிகாரிகளையும், அரசியல் நபர்களையும் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
* பா.ம.க., தலைவர் அன்புமணி: மின் வாரியத்தில் நடந்த ஊழல்களுக்கான ஆதாரங்களை அழிப்பதற்கான சதியாக இருக்கக்கூடும் என்று, சந்தேகம் எழுந்துள்ளது. அதிகாரிகளின் துணையில்லாமல், இந்தத் திருட்டு நடந்திருக்க முடியாது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த அலுவகத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளாக கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை என்பது, அதிர்ச்சியாக இருக்கிறது.



' ஹார்டு டிஸ்க்' பறிமுதல்
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட 'ஹார்டு டிஸ்க்' குகள் திருடு போனது தொடர்பாக கைதான கோபிநாத்திடம் இருந்து, 12 'ஹார்டு டிஸ்க்' குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இத்திருட்டு சம்பம் தொடர்பாக மேலும் ஒருவரிடம் விசாரித்து வருகின்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us