பா.ஜ.,வை நம்பி நட்டாற்றில் நிற்கிறாரா செங்கோட்டையன்
பா.ஜ.,வை நம்பி நட்டாற்றில் நிற்கிறாரா செங்கோட்டையன்
ADDED : நவ 02, 2025 01:49 AM

''பா.ஜ.,வை நம்பியதால், நட்டாற்றில் செங்கோட்டையன் நிற்கிறார்; அடுத்து என்ன செய்வது என்ற புரியாத நிலையில் துாக்கமின்றி தவித்து வருகிறார்,'' என, அ.தி.மு.க.,வில் இருக்கும் செங்கோட்டையன் நலன் விரும்பிகள் கூறுகின்றனர்.
இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:
அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்குமாறு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 'கெடு' விதித்தபோது, அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சேர்த்து பறித்தார். ஆனால், கட்சியில் இருந்து செங்கோட்டையனை நீக்கவில்லை.
அதே நேரத்தில், டில்லி சென்ற செங்கோட்டையன், அங்கு பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இதனால், அவருக்கு பா.ஜ., மேலிட ஆதரவு இருக்கலாம் என பழனிசாமியும் நம்பினார். அதற்கேற்பவே அரசியல் சூழல்களும் அப்போது இருந்தன.
இதனால், பழனிசாமியும் செங்கோட்டையன் விஷயத்தில் அதிரடி நடவடிக்கை எதையும் மேற்கொள்ளாமல், பொறுமையாகவே நடந்து கொண்டார். கட்சியில் இருந்து அவரை நீக்குவதில் அவசரம் காட்டவில்லை.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்காக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்ற செங்கோட்டையன், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், சசிகலா, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் ஆகியோரை சந்தித்தார். தனக்கு எதிராக செயல்படும் அவர்களுடன் செங்கோட்டையன் கைகோர்த்ததை, பழனிசாமி ரசிக்கவில்லை; கடும் ஆத்திரம் அடைந்தார்.
இனியும் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், செங்கோட்டையன் போலவே, கட்சி தலைமைக்கு எதிராக பலரும் குரல் எழுப்பக்கூடும் என அச்சப்பட்டார்.
இதையடுத்து, டில்லியில் இருக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் வாயிலாக, பா.ஜ., தலைமையிடம் சில தகவல்களை கொண்டு சென்றார்.
அதன்படி, 'செங்கோட்டையன் விஷயத்தில் பா.ஜ., பின்னணியில் இருப்பதாக பழனிசாமிக்கு சந்தேகம் இருக்கிறது. அதனாலேயே, இது நாள் வரை கட்சியில் இருந்து அவரை நீக்கும் முடிவை எடுக்காமல் இருந்தார்; இதே நிலை இனியும் தொடர்ந்தால், அது அ.தி.மு.க., செயல்பாடுகளை முழுமையாக பாதிக்கும்.
'செங்கோட்டையனை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கும் முடிவை பழனிசாமி எடுத்து விட்டார். இந்த விஷயத்தில் பா.ஜ.,வின் பின்புலம் இருக்குமானால், அது கூட்டணிக்கே நெருக்கடியை ஏற்படுத்தலாம். அதனாலேயே, இதுவரை பொறுமையாக அணுகிய பழனிசாமி, பா.ஜ., நிலைப்பாட்டை அறிந்த பின், அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள முடிவெடுத்து இருக்கிறார்.
'அதனால், பா.ஜ.,வின் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறோம்' என, பா.ஜ., மேலிடத் தலைவர்களிடம் அ.தி.மு.க., தலைவர்கள் எடுத்துச் சொன்னார்கள்.
இதற்கு பதிலளித்த பா.ஜ., மேலிடத் தலைவர்கள், 'மூத்த அரசியல் தலைவர் மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் என்ற முறையில் தான் செங்கோட்டையனை, பா.ஜ., டில்லி தலைவர்கள் சிலர் சந்தித்தனர். அவர் விஷயம், முழுக்க முழுக்க அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னை சம்பந்தப்பட்டது. அதில், பா.ஜ., தலையிட விரும்பவில்லை. அவர் விஷயத்தில், பழனிசாமி என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்' என சட்டென கூறிவிட்டனர்.
இப்படி பா.ஜ., தரப்பில் இருந்து பதில் வரும் என அ.தி.மு.க., தலைவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், சந்தோஷத்தின் உச்சத்துக்குப் போன அவர்கள், உடனே அந்த தகவலை பழனிசாமிக்கு கொண்டு சென்றனர். அதையடுத்தே, செங்கோட்டையன் மீது பழனிசாமி அதிரடியாக நடவடிக்கை எடுத்து, கட்சியில் இருந்து நீக்கி விட்டார்.
தன் விஷயத்தில் பா.ஜ., இப்படியொரு நிலைப்பாட்டை எடுக்கும் என செங்கோட்டையன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை; அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் உள்ளார். தன்னை கட்சியில் இருந்து நீக்கிய நாளில், இரவு முழுதும் தனக்கு துாக்கமே இல்லை என செங்கோட்டையன் கூறியிருப்பதன் பின்னணி இது தான். இனி செங்கோட்டையன் அரசியல் எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

