விளம்பர நாடகங்களை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
விளம்பர நாடகங்களை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா? நயினார் நாகேந்திரன் கேள்வி
UPDATED : டிச 07, 2025 05:06 PM
ADDED : டிச 07, 2025 04:29 PM

சென்னை: நாடு போற்றும் நல்லாட்சி என்று நாற்திசையிலும் விளம்பர நாடகங்களை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா? தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: திமுக ஆட்சி அமைத்ததும் குறைந்தபட்சம் 100 நாட்கள் சட்டசபை நடத்தப்படும் என்று 2021 தேர்தல் வாக்குறுதி எண் 376ல் சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் ஸ்டாலின். தமிழக மக்களின் குறைகளைத் தீர்க்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 40 நாட்கள் கூட சட்டசபை கூட்டம் நடைபெறாத நிலையில், நாடு போற்றும் நல்லாட்சி என்று நாற்திசையிலும் விளம்பர நாடகங்களை நடத்துவது தான் திமுக அரசின் சாதனையா?
பார்லி அவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படுவது போல் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும் என்று தேர்தல் வாக்குறுதி எண் 375ல் கூறிவிட்டு, எதிர்கட்சியினர் பேசுவதை மறந்தும் கூட ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு செய்யும் இந்த சர்வாதிகார ஆட்சி எப்படி பாகுபாடின்றி மக்களுக்கு சேவை செய்யும்?
தமிழகத்தில் தினமும் தலைவிரித்தாடும் பிரச்னைகளை சட்டசபையில் எதிர்கொள்ளத் திராணியின்றி, எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை எதிர்கொள்ள பயந்து, சட்டசபையை சரிவர கூட்டாத திமுக அரசை மீண்டுமொருமுறை, சட்டசபைக்கு தமிழக மக்கள் அனுப்பமாட்டார்கள். இது உறுதி. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

