காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பனி பொழிவிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பனி பொழிவிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : டிச 09, 2025 06:21 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம், 19 ஆண்டுகளுக்கு பின் நேற்று கோலாகலமாக நடந்தது. பனி பொழிவிலும் ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் விழாவில் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், கடைசியாக 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கும்பாபிஷேகம் முடிந்து, 17 ஆண்டுகள் கடந்துவிட்டதால், கோவிலில் பல்வேறு திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஏகாம்பரநாதர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, அரசு நிதி, ஆணையர் பொதுநல நிதி, திருக்கோவில் நிதி, உபயதாரர் நிதி என, மொத்தம் 29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2023 ஜூன் 28ல் பாலாலயம் நடந்தது. திருப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன.
இதையடுத்து, 19 ஆண்டுகளுக்கு பின் நேற்று காலை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. இதில், அதிகாலை 3:00 மணிக்கு யாக பூஜை, பூர்ணாஹூதி, யாத்ராதான சங்கல்பம், கடங்கள் புறப்பாடு நடந்தன.
காலை 6:10 மணிக்கு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது.
மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, ராஜகோபுரம், மூலவர் விமான கோபுரம், பல்லவ கோபுரம் உள்ளிட்ட அனைத்து சன்னிதி கோபுர விமானங்களுக்கும், பரிவார தெய்வ திருமேனிகளுக்கும் புனித நீர் ஊற்றி, மடாதிபதிகள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி கும்பாபிஷேகத்தை நேர்முக வர்ணனை செய்தார். பனி பொழி விலும் ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மதியம் 12:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவத்தை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, உதவி ஆணையர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

