தமிழிசை டிபாசிட் வாங்க போராடணும் சட்டத்துறை அமைச்சர் தகவல்
தமிழிசை டிபாசிட் வாங்க போராடணும் சட்டத்துறை அமைச்சர் தகவல்
ADDED : மார் 20, 2024 12:31 AM
புதுக்கோட்டை:''தமிழிசை சவுந்தர்ராஜன் துாத்துக்குடி இல்லை, எங்கே போட்டியிட்டாலும் டிபாசிட் வாங்க போராட வேண்டி இருக்கும். அ.தி.மு.க.வின் நிலையை காணும்போது பரிதாபமாக உள்ளது,'' என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டைக்கு நேற்று வந்த கார்த்தி சிதம்பரம். சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
தமிழிசை சவுந்தர் ராஜன் துாத்துக்குடி இல்லை, எங்கே போட்டியிட்டாலும் டிபாசிட் வாங்க போராட வேண்டி இருக்கும். கவர்னர் ரவி தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பீஹாரில் நிதீஷ்குமாருக்கு போட்டியாக தேர்தலில் போட்டியிட போவதாகவும் தகவல் வந்துள்ளது.
நாங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, அரசியல் ரீதியாக தான் விமர்சனம் செய்துள்ளோமே தவிர, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து, இழிவுபடுத்தவில்லை. ஜெயல லிதாவை யார் இழிவு படுத்தினர் என்பது அவர்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கார்த்தி சிதம்பரம் கூறியதாவது: பா.ஜ., வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று எங்களை கூறிவிட்டு தற்போது மேடையில் பிரதமர் மோடியுடன் வாரிசு அரசியல்காரர்கள் தான் இருந்தனர். அவர்களோடு சேர்ந்தால் புனிதர்கள்; அவர்களை எதிர்த்தால் ஊழல்வாதிகள் என்று பா.ஜ.க.வினர் கூறி வருகின்றனர்.
இவ்வாறு கூறினார்.

