அமைச்சர் உத்தரவை மீறி பணி ஒதுக்கீடு உள்ளாட்சி தணிக்கைத்துறையினர் குமுறல்
அமைச்சர் உத்தரவை மீறி பணி ஒதுக்கீடு உள்ளாட்சி தணிக்கைத்துறையினர் குமுறல்
ADDED : ஜூலை 01, 2026 01:23 AM
மதுரை: அமைச்சர் உத்தரவை மீறி உள்ளாட்சித் தணிக்கைத் துறையில் பணிஒதுக்கீடு செய்வதால் போராட்டம் நடத்த உள்ளதாக ஊழியர்கள் மனம் குமுறுகின்றனர்
அரசின் நிதித்துறையின் அங்கமாக உள்ளாட்சி நிதித்தணிக்கை, மாநில அரசு தணிக்கைத் துறைகள் உள்ளன.
இதில் பணியாற்றும் தணிக்கையாளர்களுக்கு காலாண்டு பணித்திட்டம் வகுத்து பணி ஒதுக்கப்படும். தலைமை தணிக்கை இயக்குனர் அருண்சுந்தர் தயாளன், 'தணிக்கையாளர்கள் பணிநியமனம் பெற்ற இடங்களில் பணிசெய்யாமல் பணி ஒதுக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டும்' என கறாராக கூறி உள்ளார்.
இதனால் தணிக்கையாளர்கள் 100 கி.மீ., முதல் 150 கி.மீ., க்கு அப்பால் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்று பணியாற்றுகின்றனர்.
இவர்களில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு பணியிடம் அருகே பணிஒதுக்க வேண்டும் என முந்தைய தி.மு.க., அரசில் முறையிட்டனர். அதற்கு நடவடிக்கை இல்லை.
தற்போது த.வெ.க., அரசின் நிதி அமைச்சர் மரியவில்சனிடமும் முறையிட்டனர். இதையடுத்து பெண்களுக்கு 50 கி.மீ.,க்குள், மற்றவர்களுக்கு 100 கி.மீ.,க்குள் பணித்திட்டம் ஒதுக்க அமைச்சர் உத்தரவிட்டார். ஆனால் அமைச்சரின் உத்தரவை மீறி பெண்களுக்கு 100 கி.மீ.,க்கும் அப்பால் பணிஒதுக்கீடு செய்துள்ளனர். இதனால் அவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஒட்டுமொத்த விடுப்பு தமிழ்நாடு உள்ளாட்சி நிதிதணிக்கை ஊழியர் சங்க மாநில தலைவர் பாபு கூறியதாவது:
அமைச்சர் உத்தரவிட்டும் பெண்களுக்கு தொலைவில் பணிஒதுக்கி உள்ளனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணியே ஒதுக்கவில்லை. இதனால் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக மனம் வெதும்புகின்றனர். இதில் பாதித்தவர்கள் நிதியமைச்சர், செயலருக்கு மனு அனுப்பி உள்ளனர். பணிஒதுக்கீடு வரும்வரை ஒட்டுமொத்த விடுப்பில் செல்ல இருப்பதாக வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் தணிக்கையாளர்கள் முடிவெடுத்துள்ளனர் என்றார்.
