பொறுப்பு அமைச்சர்கள்; முதல்வர் விஜய் புது 'பார்முலா'
பொறுப்பு அமைச்சர்கள்; முதல்வர் விஜய் புது 'பார்முலா'
ADDED : ஜூன் 08, 2026 07:17 AM

- நமது நிருபர் -
தி.மு.க., - அ.தி.மு.க. பாணியில் த.வெ.க.வும் மாவட்ட வாரியாகப் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துத் தமிழக அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது.
யாரும் எதிர்பாராத திருப்பமாக, நீலகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகஅவிநாசி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான கமலி நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் திருப்பூர் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான சவால்கள் என்ன?
அமைச்சர் அருண்ராஜூக்கு சவாலான பொறுப்பு
திருப்பூர் மாவட்டத் தொழில்முனைவோர் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் விரைந்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கோடிக்கணக்கில் அன்னியச்செலாவணியை ஈட்டினாலும், திருப்பூரின் மோசமான சாலைகள், போக்குவரத்து நெருக்கடி, குப்பைகள் மற்றும் ஆமை வேக அரசு இயந்திரம் போன்ற உட்கட்டமைப்பு குறைபாடுகளை நவீனமயமாக்குவது இவரது கடமையாக உள்ளது.
அரசியல் ரீதியாக தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - கம்யூனிஸ்ட் கட்சிகள் வலுவாக உள்ள திருப்பூர் மாவட்டத்தின் நான்கு முனை களத்தில், த.வெ.க.,வுக்கு ஆதரவு அலையை உருவாக்குவது இவருக்குப் பெரும் சவாலாகும். மேலும், உள்ளூர் அமைச்சரையே நியமிக்கும் பாரம்பரிய விதியை மாற்றி, நாமக்கல்லைச் சேர்ந்த அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளதால் அவரைத் தொடர்பு கொள்வதில் நடைமுறைச் சிக்கல்இருப்பதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது.
கோரிக்கைகளை எளிதாகக் கொண்டு செல்ல திருப்பூரில் தனி அலுவலகம் அமைக்க வேண்டும் என உள்ளூர் அமைப்புகள் எதிர்பார்க்கின்றன.
அமைச்சர் கமலிக்கு விஜய் தந்த ஆச்சர்யம்
கொங்கு மண்டலத்தை மூத்த தலைவர் செங்கோட்டையன் கவனித்து வந்த நிலையில், நீலகிரிக்கு கமலி நியமிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை தி.மு.க., - காங்கிரஸ் கோட்டையாக இருந்த நீலகிரியின் மலைப்பகுதிகளில் சட்டசபை தேர்தலில் த.வெ.க., வெல்லாவிட்டாலும் சமவெளித் தொகுதி களில் வென்றது. எனவே, வரும் தேர்தலில் மலைப்பகுதியிலும் கட்சியின் செல்வாக்கை உயர்த்த வேண்டிய சவால் கமலிக்கு உள்ளது.
சமவெளிப் பகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் அருந்ததியர் சமூக மக்களின் ஓட்டு வங்கியைத் த.வெ.க. குறிவைத்துள்ளது; அவிநாசி தொகுதியிலிருந்து இதுவரை யாரும் அமைச்சரானதில்லை என்ற வரலாற்றைக் கமலி உடைத்துள்ளதால் இதன் தாக்கம் அன்னுார், மேட்டுப்பாளையம் பகுதிகளில் எதிரொலிக்கும்.
சமூக சமன்பாட்டின்படி இவருக்குப் பொறுப்பு வழங்கப்பட்டாலும், நீலகிரியின் அனுமதியற்ற கட்டட விவகாரம், சிதைந்த உட்கட்டமைப்பு போன்ற அரசு நிர்வாகப் பிரச்னைகளையும் சரி செய்ய வேண்டிய பொறுப்பு இவருக்கு உண்டு.
