போலி புத்தகங்கள் விற்பனை என்.சி.இ.ஆர்.டி., எச்சரிக்கை
போலி புத்தகங்கள் விற்பனை என்.சி.இ.ஆர்.டி., எச்சரிக்கை
ADDED : நவ 14, 2025 11:29 PM

சென்னை: 'அங்கீகரிக்கப்படாத போலி நபர்களால் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகங்கள் கவன மாக செயல்பட வேண்டும்' என, என்.சி.இ.ஆர்.டி., எச்சரித்துள்ளது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.,டி., இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை வடிவமைத்து, அச்சிட்டு வினியோகித்து வருகிறது. இந்நிலையில், சில போலி நிறுவனங்கள், என்.சி.இ.ஆர்.டி., பாடப் புத்தகங்களின் உள்ளடக்கத்தை திருடி, அதே போன்ற பாடப் புத்தகங்களை வடிவமைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, சி.பிஎஸ்.இ., பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, என்.சி.இ.ஆர்.டி., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
நாட்டில் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளை குறி வைத்து, போலி பாடப் புத்தகங்களை போலி கும்பல்கள் விற்பனை செய்கின்றன. இந்த புத்தகங்களில் எழுத்துப்பிழை, கருத்துப்பிழை, பழைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை படிக்கும் மாணவ -- மாணவியர் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். இது போன்ற தவறு நடக்காதவாறு, பள்ளி நிர்வாகத்தினர் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும். அசல் புத்தகங்கள் வாங்குவது குறித்த தகவலுக்கு, என்.சி.இ.ஆர்.டி., இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

