கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
கட்சி தலைவர்களின் கூட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
UPDATED : நவ 02, 2025 02:43 AM
ADDED : நவ 02, 2025 12:54 AM

சென்னை: அரசியல் தலைவர்களின், 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கு, நிபந்தனைகளுடன் அனுமதி அளிப்பது என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
கடந்த செப்டம்பர், 27ம் தேதி, கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.
கெடு இச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், அரசியல் கட்சி தலைவர்களின் இதுபோன்ற ரோடு ஷோக்களுக்கு, தமிழக காவல் துறை அனுமதி மறுத்தது.
அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை, கடந்த அக்டோபர், 27ம் தேதி விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், 'அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும்' என, கெடு விதித்தது.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு குறித்து, சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும். அது இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இருக்கும்' என்று, தெரிவித்திருந்தார்.
கழிப்பறை வசதி இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைமை செயலர் முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ, பொதுக்கூட்டங்களில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
எவ்வளவு கூட்டம் வரும் என கணக்கிட்டு, அதற்கேற்ற இடத்தில் கூட்டங்களை நடத்த வேண்டும்
கூட்டத்திற்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பறை அடிப்படை மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
குழந்தைகள், வயதானவர்கள் வருவதை தடுக்க வேண்டும்
கூட்டத்திற்கு வருபவர்கள் எந்த வகையிலும் அத்துமீறாமல் இருப்பதையும், மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்
காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
இதுபோன்ற நிபந்தனைகளுடன், ரோடு ஷோவுக்கு அனுமதி அளிப்பது என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், விரைவில் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு, பொது மக்கள், பல்துறை நிபுணர்கள்,டாக்டர்களின் கருத்துகளை அறிந்து, வழிகாட்டி நெறிமுறைகள் இறுதி செய்யப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

