திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க கோரி மனு
திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க கோரி மனு
ADDED : டிச 07, 2025 01:55 AM
: திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதையும் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள, 'ரிட்' மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் என்பது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறி உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மற்றும் அப்பகுதியில் உள்ள மசூதி உள்ளிட்ட முழு இடத்தையும் உடனடியாக மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள பழங்கால தீபத்துாணில், 24 மணி நேரமும் நிரந்தரமாக விளக்கை ஏற்றவும், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இந்த குறிப்பிட்ட இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட முருக பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே தீபத்துாணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
- டில்லி சிறப்பு நிருபர் -

