அதிகாரிகள் அறைகளில் 'சிசிடிவி கேமரா' : காவல் ஆணையத்தில் போலீசார் மனு
அதிகாரிகள் அறைகளில் 'சிசிடிவி கேமரா' : காவல் ஆணையத்தில் போலீசார் மனு
ADDED : டிச 22, 2023 02:30 AM

சென்னை: 'உயர் நீதிமன்ற உத்தர வின்படி, காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளின் அறைகளிலும், 'சிசிடிவி கேமரா' பொருத்த வேண்டும்' என, போலீசார் சார்பில், காவல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, அசோக் நகரில், காவலர் பயிற்சி கல்லுாரியில், 5வது காவல் ஆணையம் செயல்படுகிறது. அங்கு போலீசார் சார்பில், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்.ஐ., வீரமணி நேற்று அளித்துள்ள மனு:
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து உயர் அதிகாரிகளின் அலுவலக அறைகளின் உள்ளேயும், வெளியேயும் 'சிசிடிவி கேமரா' பொருத்த வேண்டும்
இன்ஸ்பெக்டர்கள் - டி.ஜி.பி., வரை, அரசால் தரப்படும், 'பர்சனல் அமவுன்ட்' என்ற தொகை எந்த விதமான செலவினங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் அறியும் வண்ணம் டிஜிட்டல் மையமாக்க வேண்டும்
கான்ஸ்டபிள் - டி.எஸ்.பி., வரையிலானவர்களுக்கு இடர்படி 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும்
போலீசாருக்கு தற்செயல் விடுப்பு, 12 நாள் என்பதை, 22 நாளாகவும், ஆண்டுக்கு, 15 நாட்கள் இரு வழி பயண சலுகையுடன் விடுப்பு வழங்க வேண்டும்
காவல் துறையில், பொது மக்கள் அளிக்கும் புகார்கள் ஏற்கப்பட்டது என்பதற்கு, 'ஒ.டி.பி., அனுப்பும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்
காவல் நிலையத்தின் உயிர் நாடியான தினசரி பொது நாட் குறிப்பு மற்றும் பாரா புத்தகத்தை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்
போலீசாருக்கு உரிய நேரத்தில் சலுகைகள், உரிமைகளை கிடைக்க விடாமல் செய்யும் அமைச்சுப்பணியாளர்கள், அவர்களை கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடக்கை எடுக்க வேண்டும்
காவல் நிலைய செயல்பாடுகள், கடித போக்குவரத்து என, அலுவல் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும், 'இ - ஆபீஸ்' முறைக்கு கொண்டு வர வேண்டும்
தற்செயல் விடுப்பு கோரி மனுக்கள் மீது, இரண்டு நாட்கள், ஈட்டிய விடுப்பு, லோன் கோரிய மனுக்களுக்கு, ஏழு நாள், மருத்துவ செலவு திரும்பக்கோரிய மனுக்கள் மீது, 10 நாட்களுக்குள் அனுமதி அளிக்க வேண்டும்
காவல் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு வாகனம் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பான தினசரி நாட்குறிப்பில் அதிகாரிகளே கையெழுத்திட வேண்டும்
காவல் துறையில் அயல் பணி என்ற பேச்சே இருக்கக்கூடாது. அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பணிபுரிய வேண்டும். மீறினால், அவர்களுக்கு எவ்வித பணபலனும் வழங்கக்கூடாது
விளம்பரம், பந்தாவிற்காக, மெய்க்காப்பாளர்களை நியமித்துக் கொள்ளும் நடைமுறைக்கு முடிவு கட்ட வேண்டும். தேவையென கருதினால், காவல் துறை அதிகாரிகள் அரசுக்கு கட்டணம் செலுத்தி, மெய்க்காப்பாளர்களை வைத்துக்கொள்ளலாம்
கைதிகளை எப்போதும், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் ஆஜர்படுத்தும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, 45 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுஉள்ளன.

