வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகம் கேட்டால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் எரிச்சல்
வாக்காளர் படிவம் பூர்த்தி செய்வதில் சந்தேகம் கேட்டால் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் எரிச்சல்
ADDED : நவ 14, 2025 11:40 PM
சென்னை, நவ. 15-
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த பணி நடந்து வருகிறது. இதற்காக, வீடு, வீடாக கணக்கீட்டு படிவம் வழங்கப்படுகிறது. அதேநேரம், சிறப்பு திருத்தம் தொடர்பாக, வாக்காளர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
கண்காணிப்பு இதுகுறித்து விபரம் கேட்க, விண்ணப்பப் படிவத்தில், அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலரின் பெயர் மற்றும் மொபைல் போன் எண் இடம் பெறுள்ளது.
மேலும், தொகுதி வாரியான, கண்காணிப்பு அலுவலர் எண்கள், உதவி மைய எண்கள், மாவட்டத்திற்கான பொதுவான எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 1950 என்ற தேர்தல் கமிஷன் எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வளவு எண்கள் வெளியிடப்பட்டாலும், வாக்காளர்களுக்கு முறையாக பதில் அளிக்க, உதவி மைய அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்படவில்லை.
பயிற்சி பெற்ற ஓட்டுச்சாவடி அலுவலர்களோ, ஒரே நாளில் நுாற்றுக்கணக்கான அழைப்புகள் வாயிலாக மக்கள் சந்தேகம் கேட்பதால், பதில் அளிக்க எரிச்சல் அடைகின்றனர். இதனால், வாக்காளர்கள் முறையாக, பதில் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து, வாக்காளர் ஒருவர் கூறியதாவது:
வாக்காளர் கணக்கீட்டு படிவத்தை, ஒருவர் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போதே படிவத்தை படித்து பார்த்து, சில சந்தேகங்களை கேட்டேன்.
அதில், ஓட்டுச்சாவடி அலுவலரின் மொபைல் எண் மற்றும் உதவி மைய எண்கள் உள்ளன. அதில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.
துண்டிப்பு முதலில், உதவி மைய எண்ணில் தொடர்பு கொண்டேன். மறுமுனையில் எடுத்தவர், 'படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக, எங்களுக்கு எந்த பதிலும் தெரியாது. வீட்டிற்கு வந்த நபர் அல்லது படிவத்தில் உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களை தொடர்பு கொள்ளுங்கள்' எனக் கூறி, அழைப்பை துண்டித்தார்.
ஓட்டுச்சாவடி அலுவலரை அழைத்தேன். அவர், 'எல்லோருக்கும் நானே மொபைல் போனில் தெரிவிக்க முடியுமா' என, கோபமாக பேசி, 'வீட்டிற்கு படிவம் வாங்க வருவோரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்' என, அழைப்பை துண்டித்தார்.
இதனால், இணையதளம் மற்றும் நாளிதழில் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை பார்த்து, பூர்த்தி செய்து வைத்துள்ளேன். அதில், 2005ம் ஆண்டில் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆகியவை தெரியாமல், அப்படியே வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தொடர் பணியில் இருப்பதால், சிலர் எரிச்சல் அடைந்திருக்கலாம். உதவி மைய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது' என்றனர்.

