ரூ. 1,000 பிச்சை போட்டால் வாங்குவதா? மகளிர் உரிமை தொகையை விமர்சித்த சவுமியா
ரூ. 1,000 பிச்சை போட்டால் வாங்குவதா? மகளிர் உரிமை தொகையை விமர்சித்த சவுமியா
ADDED : டிச 07, 2025 02:20 AM

காஞ்சிபுரம்: “யாராவது, 1,000 ரூபாயை பிச்சை போட்டால் வாங்கி கொள்வதா,” என தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை குறித்து, 'பசுமை தாயகம்' தலைவர் சவுமியா கடுமையாக விமர்சித்தார்.
பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவியும் 'பசுமை தாயகம்' தலைவருமான சவுமியா, கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில், பா.ம.க., சார்பாக தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில், 'சிங்கப்பெண்ணே எழுந்து வா - மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும், சவுமியா பயணம் மேற்கொள்கிறார்.
அவர், தன் சுற்றுப்பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று துவக்கினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
காஞ்சிபுரத்தில், நெசவு தொழில் பிரதானமாக உள்ளது. ஆனால், நெசவாளர்கள் சிரமப்படுகின்றனர். நெசவாளர் ஆணையம் அமைப்பது, பட்டு பூங்காவை வலுப்படுத்துவது போன்ற தீர்வுகள் பா.ம.க., தலைவர் அன்புமணியிடம் உள்ளன.
காஞ்சிபுரம் அருகே, 450 ஏக்கர் பரப்பளவிலான நத்தப்பேட்டை ஏரி, மோசமாக உள்ளது. அங்கு, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டபடி, பறவைகள் சரணாலயமாக மாற்றினால், ஏரி பாதுகாக்கப்படும்.
ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் போன்ற இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கு, இடம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு, அந்த தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு வழங்கவில்லை.
டாஸ்மாக் மதுக்கடைகளில் கொடுக்கப்படும் 1,000 ரூபாய் தான், உங்களுக்கு மீண்டும் வழங்கப்படுகிறது. அதுவும் கூட பலருக்கு கிடைக்கவில்லை. அந்த பணம் எல்லாம் தேவையில்லை. பெண்களே, சுயமாக சம்பாதிக்கும் வகையில், நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும்.
யாராவது 500 ரூபாய், ௧,௦௦௦ ரூபாய் என பிச்சை போட்டால் வாங்கிக் கொள்வதா அசிங்கமாக இல்லையா? ஓட்டு வாங்குவதற்காக, உங்களை ஏமாற்ற பணம் கொடுக்கின்றனர்.
மதுக்கடையை ஒழித்ததால் தான் பீஹாரில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் வெற்றி பெற்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.

