ரூ.69 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்: முதல்வர் அடிக்கல்
ரூ.69 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்: முதல்வர் அடிக்கல்
ADDED : டிச 09, 2025 07:30 AM

சென்னை: தமிழகத்தில், 23 சட்டசபை தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், 3 கோடி ரூபாய் செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, பர்கூர், தளி, பேராவூரணி, திருவையாறு, ஒரத்தநாடு, கிணத்துக்கடவு, மணப்பாறை, செஞ்சி, திண்டிவனம், திருக்கோவிலுார்.
மதுரவாயல், திரு.வி.க., நகர், பெரம்பூர், திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீபெரும்புதுார், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குளித்தலை, ஆலந்துார், கிள்ளியூர், சங்ககிரி, எடப்பாடி ஆகிய 23 சட்டசபை தொகுதிகளில், 69 கோடி ரூபாய் செலவில், சிறு விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட உள்ளன.
இவற்றுக்கு, நேற்று தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி உட்பட பல்வேறு நீராதார மேம்பாட்டு பணிகள் குறித்த விழிப்புணர்வு முயற்சிகளை ஊக்குவிக்க, மத்திய அரசு சார்பில், தேசிய நீர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நடப்பாண்டிற்கான விருதுகளை, சமீபத்தில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.
விருதுகளை, சம்பந்தப் பட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள் முதல்வர் ஸ்டாலினிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகம், 60 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதை, முதல்வர் ஸ்டாலின் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, திறந்து வைத்தார்.

