பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ரூ.500 கோடி மானியம் தமிழகம் எதிர்பார்ப்பு
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் ரூ.500 கோடி மானியம் தமிழகம் எதிர்பார்ப்பு
ADDED : நவ 02, 2025 12:44 AM
சென்னை: தமிழகத்தில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று சுயதொழில் துவங்க, பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், மானியத்திற்கு ஆண்டுக்கு, 170 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்படுவதால், 7,000 பேர் தான் பயனடையும் நிலை உள்ளது.
அதை விட மூன்று மடங்கு விண்ணப்பங்கள் வருவதால், மத்திய அரசு, 500 கோடி ரூபாய் ஒதுக்குமா என்ற எதிர்பார்ப்பு, தொழில் முனைவோரிடம் எழுந்துள்ளது.
கடனுதவி நாட்டில் உள்ள இளைஞர்கள் சுயதொழில் துவங்குவதற்காக, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சேவை சார்ந்த தொழில் துவங்க அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய், உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க, 50 லட்சம் ரூபாய் வரை, வங்கிகளில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க உதவி செய்யப்படுகிறது.
அதன்படி, நகரங்களில் கடனுக்கு மானியமாக, 15 சதவீதமும், கிராமங்களில், 25 சதவீதமும் வழங்கப்படுகிறது.
நகரங்களில் எஸ்.சி., -- எஸ்.டி., உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு மானியம், 25 சதவீதமும், கிராமங்களில், 35 சதவீதமும் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில், கடன் பெறும் பயனாளிகளுக்கு மானியம் வழங்க, ஆண்டுக்கு, 170 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இதனால், ஆண்டுக்கு சராசரியாக, 20,000 பேர் விண்ணப்பிக்கும் நிலையில், 7,000 பேருக்கு தான் கடனுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கூறியதாவது:
தமிழகத்தில் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை, மத்திய மற்றும் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறைகள் செயல்படுத்துகின்றன. உரிய ஆவணங்களுடன் கடன் பெற, இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தில் கடன் பெற பயனாளிக்கு வயது வரம்பு மற்றும் அதிகபட்ச கல்வி தகுதி கிடையாது. இதனால், பலரும் கடன் பெற விண்ணப்பம் செய்கின்றனர்.
கிடைப்பதில்லை பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தில், கடந்த ஆண்டில், ஆடு, மாடு வளர்ப்புக்கும் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப, அதிக மானியம் ஒதுக்கப்படுவதில்லை. ஆண்டுக்கு, 170 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதால், 7,000 பேர் வரை தான் பயன் பெறுகின்றனர். விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தகுதி இருந்தும் கடனுதவி கிடைப்பதில்லை.
எனவே, அதிகம் பேர் பயனடைய மானியத்திற்காக ஆண்டுக்கு, 500 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இதை, தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

