விளைச்சல் சரிவு; ஏற்றுமதி அதிகரிப்பு அரிசி விலையை கேட்டு அலறுகிறது தமிழகம்!
விளைச்சல் சரிவு; ஏற்றுமதி அதிகரிப்பு அரிசி விலையை கேட்டு அலறுகிறது தமிழகம்!
UPDATED : அக் 04, 2026 11:11 AM
ADDED : அக் 04, 2026 04:27 AM

சென்னை: தமிழகத்தில், 26 கிலோ அரிசி மூட்டை விலை, 2,100 ரூபாயாக அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நாட்டில் தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிகளவில் நெல் விளைகிறது. இதைத்தொடர்ந்து, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் அதிகளவில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆனாலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு நெல் உற்பத்தி இல்லை. இதனால், பி.பி.டி., - எச்.எம்.டி., போன்ற சன்ன ரக அரிசி தேவைக்காக, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யாததால், நெல் உற்பத்தியாகும் மாநிலங்களில் சாகுபடி கணிசமாக குறைந்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலங்களில், இப்போது தான் சாகுபடி நடந்து வருகிறது.
தமிழகத்தில், குறுவை பருவ சாகுபடி இயல்பான அளவில் நடக்கவில்லை. அதேநேரத்தில், நாடு முழுதும் இருந்து அரிசி ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், நம் நாட்டிற்கு தேவையான அரிசியை வினியோகம் செய்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
வெளிநாட்டிற்கான அரிசி தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. நடப்பாண்டு ஜனவரி துவக்கத்தில், 26 கிலோ எடை உள்ள சன்ன ரக அரிசி மூட்டை, மொத்த விற்பனையில், 1,100 முதல், 1,350 ரூபாய் வரை விற்கப்பட்டது. இது, படிப்படியாக அதிகரித்து தற்போது, 1,400 முதல் 1,900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மாநிலம் முழுதும் சில்லறை விற்பனை கடைகளில், 26 கிலோ அரிசி மூட்டை, 1,800 ரூபாயில் இருந்து 2,100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சில குறிப்பிட்ட, 'பிராண்ட்' அரிசி மூட்டைகள், 2,250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
மொத்த விலையில், ஒரு கிலோ அரிசி, இரண்டு ரூபாயில் இருந்து மூன்று ரூபாய் வரை அதிகரித்து உள்ளது. இதன் தாக்கம், சில்லரை விலையிலும் எதிரொலிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான தேவையான அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மாத உணவு செலவு தொகை கணிசமாக அதிகரித்துள்ளதால், இல்லத்தரசிகள் கவலையடைந்து உள்ளனர்.
தமிழகத்தின் வழியாக அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தினால் மட்டுமே, விலை நிலையாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், மேலும், 10 சதவீதம் வரை அரிசி விலை உயர வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழக அரசின் வேளாண் வணிகப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உற்பத்தி குறைவு காரணமாக, அனைத்து உணவு பொருட்களின் விலையும் கூடியுள்ளது. 'எல் நினோ' எனும் காலநிலை தாக்கத்தால் வெப்ப சலனம் அதிகரித்துள்ளதே, இதற்கு காரணம். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் விலை உயர்ந்துள்ளது.
இதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசால் நடவடிக்கை எடுக்க முடியாது. பதுக்கலை வேண்டுமானால் தடுக்கலாம். மத்திய அரசு தான் ஏற்றுமதியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏற்றுமதிக்கு தடை விதிக்கும்பட்சத்தில், அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. பண்டிகை காலம் என்பதால், பல உணவு பொருட்களின் விலை மேலும் அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
