இணைப்பு அங்கீகாரம் பெறாத கல்வியியல் கல்லுாரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை
இணைப்பு அங்கீகாரம் பெறாத கல்வியியல் கல்லுாரிகளுக்கு ஆசிரியர் பல்கலை எச்சரிக்கை
ADDED : ஜூலை 29, 2026 11:07 PM
சென்னை: 'இணைப்பு அங்கீகாரம் பெறவில்லை எனில், 2027 - 28ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்படாது' என, கல்வியியல் கல்லுாரிகளுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், மாநிலம் முழுதும், 690 கல்வியியல் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இக்கல்லுாரிகள், ஒவ்வொரு ஆண்டும் பல்கலையின் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும்.
அந்த வகையில், 2027 - 28ம் கல்வியாண்டுக்கான இணைப்பு அங்கீகாரம் பெற, கல்வியியல் கல்லுாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவுறுத்தி உள்ளது. வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள், 75,500 ரூபாய் கட்டணம் செலுத்தி, இணைப்பு அங்கீகாரம் பெறலாம்.
கால அவகாசத்துக்குள், அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை எனில், டிசம்பர் 1க்குள் அபராத கட்டணத்துடன், 1 லட்சத்து, 25,500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அங்கீகாரத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் பெற விண்ணப்பிக்காத கல்லுாரிகள், 2027 - 28ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என, பல்கலை எச்சரித்துள்ளது.
