ADDED : டிச 09, 2025 07:23 AM

சென்னை: 'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சேலம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முரளி. சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில், பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை.
இதையடுத்து, தன் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட ஓய்வூதிய பணப்பலன்களை விடுவிக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 2023ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, 'மனுதாரரின் ஓய்வூதிய பலன்களை, 4 சதவீத வட்டியுடன், இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும்' என, அதே ஆண்டு ஜூலை 21ல் உத்தரவிட்டார்.
அதை நிறைவேற்றாததால், சேலம் அரசு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன், தர்மபுரி மண்டலப் பொது மேலாளர் செல்வம், ஊழியர்களின் ஓய்வூதிய நலத்திட்ட நிர்வாக அதிகாரி பாமா ஆகியோருக்கு எதிராக, முரளி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி என்.சதீஷ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும், ஓய்வூதிய பலன்கள் இன்னும் வழங்கப்படவில்லை' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, 'சேலம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், தர்மபுரி மண்டல பொது மேலாளர் ஆகியோர், வரும் ஜன., 19ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.
'உத்தரவை அதற்குள் நிறைவேற்றி விட்டால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது' என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

