திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்
ADDED : நவ 14, 2025 11:20 PM
சென்னை: 'திருச்சி எஸ்.ஆர்.எம்., ஹோட்டல் மற்றும் அதன் உடைமைகளை காவல் துறை உதவியுடன் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்' என தெரிவித்துள்ள எஸ்.ஆர்.எம்., குழுமம், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
திருச்சி காஜாமலை பகுதியில், தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான இடத்தில், எஸ்.ஆர்.எம்., குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. இந்த இடத்துக்கான குத்தகை காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது.
இதனால், அந்த இடத்தை கையகப்படுத்தும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, எஸ்.ஆர்.எம்., குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'நிலுவை தொகையை செலுத்தாததால், எஸ்.ஆர்.எம்., குழுமம் நடத்தி வந்த ஹோட்டல் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்தது.
வலுக்கட்டாயம் அத்துடன், எஸ்.ஆர்.எம்., குழுமத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, கடந்த அக்., 27ல் உத்தரவிட்டது.
வழக்கு நிலுவையில் உள்ள போது, உச்ச நீதிமன்ற அனுமதியின்றி நிலத்தை வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியது, அரசியலமைப்பு சட்டத்தை மீறியது என எஸ்.ஆர்.எம்., குழுமம் தெரிவித்துள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றம் அக்., 27ம் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்பாக, எஸ்.ஆர்.எம்., குழுமம் சீராய்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சையத் அகமது சவுத் அளித்துள்ள விளக்கம்:
நியாயமான நடைமுறை மற்றும் சட்டத்துக்கு உட்பட்ட செயல்முறைக்கு, ஆக்கிரமிப்பாளர் உட்பட அனைவரும் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில், எஸ்.ஆர்.எம்., குழுமம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
இதன் அடிப்படையில், அக்., 27ம் தேதி உத்தரவுக்கு பின், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளோம்.
விசாரணையில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அக்., 22ல் உச்ச நீதிமன்ற அனுமதியின்றி, தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம், ஹோட்டல் மற்றும் பொருட்களை காவல் துறை உதவியுடன் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி உள்ளது. இது, அரசியலமைப்பு சட்டத்தை மீறிய செயல்.
விளக்கம் குத்தகை ஒப்பந்தத்தின்படி, ஹோட்டலில் உள்ள பொருட்களை வெளியே எடுக்க அனுமதிக்கவில்லை. மேலும், அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பை மீறி உள்ளனர். இது, அரசியலமைப்பை மதிக்கவில்லை என்பதை காட்டுகிறது.
ஹோட்டலில் விருந்தினர்கள் தங்கி இருக்கும் போதே கையகப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இவற்றை கருத்தில் வைத்தே, அக்., 27 உத்தரவு தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்து உள்ளோம். விரைவில் இம்மனு விசாரணைக்கு வர உள்ளது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

