தவணை காலத்தில் கைமாறிய வீடுகளுக்கு பத்திரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை
தவணை காலத்தில் கைமாறிய வீடுகளுக்கு பத்திரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் நடவடிக்கை
ADDED : நவ 14, 2025 12:49 AM
சென்னை: தவணை காலம் முடியும் முன், விற்பனை செய்யப்பட்ட வீடுகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதிகளில், 2.25 லட்சம் வீடு, மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தவணை தொகையை மாதந்தோறும் செலுத்த வேண்டும்.
தவணை காலம் முடிந்த நிலையில், ஒதுக்கீட்டாளர்கள் தங்கள் பெயருக்கு விற்பனை பத்திரம் பெறலாம்.
ஆனால், பெரும்பா லான ஒதுக்கீட்டாளர்கள் விற்பனை பத்திரம் பெறுவதில்லை. இதனால், சென்னை உள்ளிட்ட பல இடங்களில், வாரியத்திடம் இருந்து ஒதுக்கீடு பெற்றவர்கள், ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று, வீட்டை நபர்களுக்கு கொடுத்து விடுகின்றனர்.
இவ்வாறு வாங்கியவர்கள் விற்பனை பத்திரம் பெற முடியாமல் தவிக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன், வாரிய வீடு, மனைகளில், தற்போது யார் வசிக்கின்றனர் என்று பார்த்து, அவர்கள் பெயருக்கு ஒதுக்கீட்டு ஆணையை மாற்ற வாரியம் முன்வந்தது.
இதனால், பலரும் விற்பனை பத்திரம் பெற்றனர். இருப்பினும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், இதுவரை, 35,000 பேர் மட்டுமே விற்பனை பத்திரம் பெற்றுள்ளனர்.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், சில மாற்றங்களை செய்ய வாரியம் முடிவு செய்துஉள்ளது.
இதன்படி, மாத தவணை முடியும் முன், மூன்றாம் நபருக்கு விற்கப்பட்ட வீடுகளுக்கு விற்பனை பத்திரம் வழங்க வாரியம் முன்வந்துஉள்ளது. இதன் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான ஒதுக்கீட்டாளர்கள் தங்கள் பெயருக்கு விற்பனை பத்திரம் பெற வாய்ப்பு ஏற்படும் என, அதிகாரிகள் கூறினர்.
சிக்கல் என்ன? வீட்டுவசதி வாரியத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களில் பெரும்பாலானோருக்கு, விற்பனை பத்திரம் பெறுவதில் போதிய விழிப்புணர்வு இருப்பதுஇல்லை.
இதில் வறுமை காரணமாக, ஒரு சில மாதங்கள் தவணை தொகை செலுத்த தவறினால், அதற்கான அபராதம் என, நிலுவை தொகை வெகுவாக அதிகரித்து விடும்.
நிலுவை தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்பதை, வாரிய அதிகாரிகள் ஒதுக்கீட்டாளர்களுக்கு புரிய வைப்பதில்லை.
அதே நேரம், தவணையை முடித்தாலும், இறுதியாக வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே விற்பனை பத்திரம் பெற முடியும்.
இதற்கான முயற்சியில், ஒவ்வொரு கட்டத்திலும் அதிகாரிகளை, 'கவனி'ப்பதற்கு ஆகும் செலவை பார்த்தும் மக்கள் ஒதுங்கி விடுகின்றனர்.
தருவது சரியா? நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஏழை மக்களை உள்ளாட்சிகள் வாயிலாக தேர்வு செய்து, அவர்களுக்கு வீடுகளை ஒதுக்குகிறது.
இவ்வாறு வீடு ஒதுக்கீடு பெற்றவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, வசதி படைத்தவர்கள், அந்த வீட்டை முறையான ஆவணம் இன்றி, விலைக்கு வாங்குகின்றனர்.
இதற்கு முறையான பத்திரப்பதிவு நடக்காது, இரு தரப்பினரும் தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் எழுதி கைமாற்றுகின்றனர். இவ்வாறு வீட்டை வாங்கும் நபர், அடுத்தடுத்து விற்பனை செய்கிறார்.
வாரியத்தின் வீட்டை பயன்படுத்தி, பல இடங்களில் இப்படி ஒரு முறையற்ற வர்த்தகம் தொடர்ந்து நடக்கிறது.
இந்நிலையில், முறையற்ற வகையில் விலைக்கு வாங்கிய நபருக்கு, விற்பனை பத்திரம் தருவது என்றால், தவறுகளை வாரியம் அங்கீகரிப்பதாக ஆகாதா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, இந்த விஷயத்தில், வாரியம் சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

