மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக 50,000 பேருக்கு தொழில் பயிற்சி
மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக 50,000 பேருக்கு தொழில் பயிற்சி
ADDED : நவ 13, 2025 02:01 AM
சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின், சமுதாய திறன் பயிற்சி பள்ளி வழியாக, 50,000 கிராமப்புற இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பு பயிற்சி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அந் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், உள்ளூர் பகுதியில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களை வைத்து, சமூதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வழியாக, இளைஞர்களுக்கு நேரடி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளின் வாயிலாக, எலக்ட்ரீஷியன், இருசக்கர வாகன பழுதுபார்ப்பு, 'ஏசி மெக்கானிக்' உட்பட, 30 பிரிவுகளில் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, தற்போது 25 கோடி ரூபாய் செலவில், தமிழகம் முழுதும் 2,500 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றின் வாயிலாக, நடப்பாண்டு, 50,000 இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிவழங்கப்பட உள்ளன.
இப்பயிற்சி பெற, கிராமப்புற இளைஞர்கள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள்.
கல்லுாரி மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், மாவட்டங்களில் உள்ள ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்புக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

