'நல்லாத்தான் இருக்கு... ஆனா செட் ஆகலயே'... வாடகை இ-ஸ்கூட்டருக்கு தடை விதித்த 2வது மிகப்பெரிய நகரம்
'நல்லாத்தான் இருக்கு... ஆனா செட் ஆகலயே'... வாடகை இ-ஸ்கூட்டருக்கு தடை விதித்த 2வது மிகப்பெரிய நகரம்
ADDED : ஆக 26, 2024 11:40 AM

மெல்போர்ன்: தொடர் விபத்துக்கள் உள்ளிட்ட காரணங்களால் வாடகை இ-ஸ்கூட்டர் பயன்பாட்டுக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இ- ஸ்கூட்டர்
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் முன்னேறிய நாட்டு மக்கள், 'இ-ஸ்கூட்டர்' எனப்படும் பேட்டரியில் இயங்கும் சிறிய ரக வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். மக்கள் மத்தியிலும் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு பகுதிகளில் மட்டுமே காணப்பட்டு வந்த இ- ஸ்கூட்டர், இப்போது எல்லா நகரங்களுக்கும் வந்து விட்டது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரமான மெல்போர்னில், இ- ஸ்கூட்டர் வாடகைக்கு விடப்படுகிறது. இது அப்பகுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், மூலை முடுக்கில் எல்லாம் இந்த இ- ஸ்கூட்டர்கள் தான் தென்படுகின்றன.
தடை
இந்த நிலையில், வாடகை பேட்டரி வாகனங்களின் சேவைகளை வழங்கி வரும், லைம், நியூரான் உள்ளிட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தை மெல்போர்ன் நகர கவுன்சில் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதற்காக, 30 நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்களுக்கு கூட இந்த இ- ஸ்கூட்டர் வாடகைக்கு வழங்கப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த முடிவை மெல்போர்ன் நிர்வாகம் எடுத்துள்ளது.
விளக்கம்
பாதசாரிகளுக்கு தொந்தரவு, இ- ஸ்கூட்டர் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்வது உள்ளிட்ட தொடர் புகார்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெல்போர்ன் மேயர் நிகோலஸ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இ- ஸ்கூட்டர்களின் பயன்பாட்டினால், மாசுபாடு பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் அறிக்கை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
2வது நகரம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ஏற்கனவே இ-ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோபன்ஹேகன் நகரம் ஏற்கனவே ஒரு முறை தடை விதித்து விட்டு, இப்போது கடும் விதிமுறைகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. பார்சிலோனா நகரம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இ-ஸ்கூட்டர் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. லண்டன் மாநகரிலும், தனியார் இ-ஸ்கூட்டர்கள் பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

