நாட்டை காக்கும் வீரர்களை பாருங்க... கிரிக்கெட்டில் பணிச்சுமையை மறந்துடுங்க: கவாஸ்கர் 'அட்வைஸ்'
நாட்டை காக்கும் வீரர்களை பாருங்க... கிரிக்கெட்டில் பணிச்சுமையை மறந்துடுங்க: கவாஸ்கர் 'அட்வைஸ்'
UPDATED : ஆக 06, 2025 02:02 PM
ADDED : ஆக 06, 2025 07:11 AM

லண்டன்: ''எல்லையில் கடும் குளிரிலும் ராணுவ வீரர்கள் நாட்டை காக்கின்றனர். இவர்களை போல நாட்டுக்காக விளையாடும் போது வலியை மறந்துவிட வேண்டும். இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தையை நீக்க வேண்டும்,'' என கவாஸ்கர் தெரிவித்தார்.
இந்தியா-இங்கிலாந்து மோதிய டெஸ்ட் தொடர் 2-2 என சமன் ஆனது. இந்திய 'வேகப்புயல்' சிராஜ், 5 டெஸ்டிலும் முழுமையாக பங்கேற்றார். 185.3 ஓவர் பந்துவீசி, 23 விக்கெட் வீழ்த்தினார். ஓவலில் நடந்த கடைசி டெஸ்டில் துடிப்பாக செயல்பட்டு, வெற்றிக்கு கைகொடுத்தார். போட்டிகளில் 'பீல்டிங்' செய்தது, பயிற்சியில் பந்துவீசியது என அனைத்தையும் சேர்த்தால், சிராஜின் கடின உழைப்பு தெரிய வரும். அதே நேரம் பும்ரா முதுகுப்பகுதி காயம் காரணமாக 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார்.
காம்பிர் செய்த மாற்றம்
இந்திய அணியில் முன்பு சில நட்சத்திர வீரர்கள் தேவைப்பட்டால் பங்கேற்பர். சில போட்டிகளில் 'ரெஸ்ட்' எடுத்துக் கொள்வர். இந்த 'மெகா-ஸ்டார்' கலாசாரத்தை பயிற்சியாளர் காம்பிர், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் சேர்ந்து தகர்த்தனர். அனைத்து வீரர்களும் சமம் என்ற நிலையை உருவாக்கினர். இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் அனைத்து இந்திய வீரர்களும் களமிறங்க தயாராக இருந்தனர். காயம் அடைந்த ரிஷாப் பன்ட் கூட துணிச்சலாக விளையாடினார். ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா அசராமல் பந்துவீசினர்.
பும்ரா விதிவிலக்கு
இது பற்றி இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில்,''நீங்கள் நாட்டுக்காக விளையாடும் போது உடல் வலியை மறந்துவிடுங்கள். எல்லையில் நாட்டை காக்கும் நம் ராணுவ வீரர்களை பாருங்கள். அவர்கள் எப்போதாவது குளிர்கிறது என புகார் சொல்லியிருக்கிறார்களா? மான்செஸ்டர் போட்டியில், வலது கால் பாத விரல் முறிவுடன் ரிஷாப் பன்ட் பேட் செய்ய களமிறங்கினார். இதே போன்ற அணுகுமுறையை தான் ஒவ்வொரு வீரர்களிடமும் எதிர்பார்க்கிறோம்.
இந்தியாவுக்காக விளையாடுவது மிகப் பெரும் கவுரவம். 140 கோடி மக்களின் பிரதிநிதிகளாக களமிறங்குகிறீர்கள். சிராஜிடம் இந்த உணர்வை பார்க்க முடிந்தது. முழு அர்ப்பணிப்புடன் பந்துவீசினார். பணிச்சுமையை பற்றி கண்டுகொள்ளவில்லை. 5 டெஸ்டில் பங்கேற்றார். சில நேரங்களில் 7-8 ஓவர் தொடர்ந்து பந்துவீசினார். இவர் பந்துவீச வேண்டுமென கேப்டன் விரும்பினார். இந்த நாடே எதிர்பார்த்தது. பணிச்சுமை என்ற வட்டத்திற்குள் சிக்கினால், நாட்டுக்காக விளையாட சிறந்த வீரர்களை களமிறக்க முடியாது.
இந்திய கிரிக்கெட் அகராதியில் இருந்து பணிச்சுமை என்ற வார்த்தை நீக்கப்படும் என நம்புகிறேன். பணிச்சுமை என்பது உடல்ரீதியானது அல்ல; மன ரீதியானது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். எனது விமர்சனம் பும்ரா மீது கிடையாது. அவர் காயம் காரணமாக தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை,''என்றார்.

