சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்திய விவகாரம்: அமெரிக்கா மீது பிரேசில் அதிருப்தி
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்திய விவகாரம்: அமெரிக்கா மீது பிரேசில் அதிருப்தி
ADDED : ஜன 26, 2025 10:33 PM

ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை மோசமாக நடத்தியதாக பிரேசில் அதிருப்தி தெரிவித்து உள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும், டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. இதனையடுத்து அந்த விமானம் கவுதமாலாவுக்கு சென்றதாக கூறப்படுகிறது.இந்நிலையில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். அப்படி அழைத்து வரப்பட்டவர்களை கைகளில் விலங்கு போட்டு அழைத்து வரப்பட்டதாக அந்நாடு குற்றம்சாட்டி உள்ளது.
பிரேசிலின் மானஸ் நகரில் அந்த விமானம் தரையிறங்கியதும், அந்நாட்டு அதிகாரிகள் கைவிலங்கை அவிழ்க்கும்படி உத்தரவிட்டனர்.விமானத்தில் செல்லும் போது குடிக்க தண்ணீரும், உணவும் தரப்படவில்லை என பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். விமானத்தின் உட்பகுதி சூடாக இருந்ததால் சிலர் மயக்கம் அடைந்ததாகவும் கூறினர்.
இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள பிரேசில் வெளியுறவு அமைச்சகம், இது எங்கள் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய செயல் எனவும், இது குறித்து அமெரிக்க அரசிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் கூறியுள்ளது.

