கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது நம் தொழில்!
கைக்கு எட்டும் துாரத்தில் தான் உள்ளது நம் தொழில்!
ADDED : நவ 12, 2025 11:37 PM

பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வரும், திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூரை அடுத்த அய்யாவூரை சேர்ந்த திலகவதி: நடுத்தர குடும்பம் என்னுடையது. பி.காம்., பட்டப்படிப்பை முடித்த உடன், பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். கணவர், மோட்டார் மெக்கானிக்காக உள்ளார்.
குழந்தை பிறந்து வளர வளர, விலைவாசியு ம் உயர்ந்ததால், குடும்பத்தை சமாளிக்க முடியவில்லை. அப்போது, 'படித்த படிப்பு வீணாகிறதே...' என்று கணவரிடம் வருத்தப்பட்டேன். 'உனக்கு பிடித்த வேலையைச் செய்' என, தைரியத்தை கொடுத்து, உறுது ணையாக இருந்தார்.
எங்கள் ஊர் மக்களுக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி, அதை உள்ளூரில் விற்கலாம் என்று முடிவெடுத்தேன். ஆராய்ந்து பார்த்ததில், எங்கள் பகுதியில் பலரும் செய்யும் தொழில், பட்டுப்பூச்சி வளர்த்து, பட்டு எடுப்பது என்பதை அறிந்தேன்.
பட்டுப்பூச்சிகளுக்கு தேவையான உணவு, மருந்து, பட்டுப்பூச்சிக்கு உணவளிக்கும் மல்பெரி செடிகள் வளர்க்க உரம் ஆகியவற்றை வாங்கி விற்பனை செய்யலாம் எனத் தோன்றியது.
பட்டுப்புழு வளர்ப்பிற்குத் தேவையானவற்றை, தருமபுரியில் இருந்து பலரும் வாங்கி விற்பனை செய்வதாக, அக்காவின் கணவர் கூறினார். அதனால், தேவையான கிருமிநாசினி உட்பட மருந்து, உர பொருட்களை வாங்கி, குறைந்த லாபத்திற்கு விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.
நாளடைவில், வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். வாய்வழி விளம்பரம் வாயிலாக, பலரும் என்னிடம் பொருளை வாங்குகின்றனர்.
குறைந்த லாபத்தில் பொருட்களை விற்பனை செய்வதையும், பட்டுப்பூச்சி வளர்ப்பவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் என்னுடைய சிறு முயற்சி குறித்தும், பட்டுப்பூச்சி உற்பத்தியாளர்கள், தமிழக அரசு பட்டுப்பூச்சி வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.
அதிகாரிகள், நான் விற்பனை செய்யும் இடத்திற்கே வந்து பார்வையிட்டு, பாராட்டவும் செய்தனர்; ஒரு லட்சம் ரூபாய் மானிய உதவித்தொகையுடன் கடனும் வழங்கினர்.
இந்த மானிய தொகை வாயிலாக பட்டுப்புழு வளர்ப்பு தொழிலுக்கு தேவைப்படும் அனைத்து பண்ணை உபகரணம், கிருமி நாசினி, மருந்து பொருள் மற்றும் தளவாட பொருட்கள் என, அதிக அளவில் கொள்முதல் செய்து, குறைந்த லாபத்திற்கு வழங்கி வருகிறேன்.
உங்கள் கண்களுக்கும், கைக்கும் எட்டும் துாரத்தில் இருக்கும் தொழில் என்ன, உங்கள் குடும்பத்தை பிரியாமல் உங்கள் ஊரிலேயே என்ன தொழில் செய்யலாம் என யோசித்து செயல்பட்டால், நிச்சயம் நீங்களும் வெற்றியாளர்தான்!

