நம் பிரதமர் மோடிக்கு இலங்கையில் மிக உயரிய விருது!
நம் பிரதமர் மோடிக்கு இலங்கையில் மிக உயரிய விருது!
UPDATED : ஏப் 05, 2025 11:58 PM
ADDED : ஏப் 05, 2025 11:56 PM

கொழும்பு நட்பை அலங்கரித்தவர் என்று பொருள்படும், 'மித்ர விபூஷணா' என்ற இலங்கையின் உயரிய விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா - இலங்கை இடையேயான உறவை வலுப்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவித்த இலங்கை அதிபர் அநுரா குமார திசநாயகே, இந்தியாவை குறிப்பாக பிரதமர் மோடியை நட்புக்கு இலக்கணம் என்று பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய நாடான தாய்லாந்தின் பாங்காக்கில் நடந்த, 'பிம்ஸ்டெக்' எனப்படும், வங்கக் கடல் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான முயற்சி அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு இலங்கைக்குச் சென்றார்.
வரவேற்பு
விமான நிலையத்தில், இதுவரை இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு தனிச் சிறப்பு வரவேற்பு அவருக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கொழும்பில் நடந்த நிகழ்ச்சியில், அதிபர் அநுரா குமார திசநாயகே, அந்த நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான, மித்ர விபூஷணா விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை வலுப்படுத்தியதில் ஆற்றிய பங்குக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடி பெறும், 22வது சர்வதேச கவுரவ விருதாகும்.
இலங்கையின் முந்தைய அதிபர் மஹிந்த ராஜபக்சேவால், 2008ல் நிறுவப்பட்டது இந்த விருது. சர்வதேச தலைவர்களை கவுரவிக்கும் வகையில், இந்த விருது சிலருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகள் முன்னாள் அதிபர் அப்துல் கயூம், மறைந்த பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியத் தலைவர் பிரதமர் மோடி.
''இந்த விருதைப் பெறுவதில் பெருமிதம் அடைகிறேன். இது எனக்கு கிடைத்த கவுரவம் அல்ல; 140 கோடி இந்தியர்களுக்கானது. இரு நாட்டுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை மதிக்கும் இந்த விருதைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என, பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறள்
மேலும், 'செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு' என்ற திருக்குறளையும் கூறி, பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
அதாவது, 'நட்பு கொள்வது போன்று மிக அருமையான செயல் எதுவும் இல்லை. அதுபோல, நட்பை போன்று பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறெதுவும் இல்லை' என்பதே இந்த குறளின் பொருள்.
இது குறித்து நம் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் இருந்தபோது, இந்தியா உடனடியாகஉதவிக்கரம் நீட்டியது. மேலும், இரு நாட்டுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவதில், பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளை கவரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளியிலான விருதின் நடுவில், அரிசி நிரம்பி வழியும் கும்பம் உள்ளது. இது செழுமை மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.
அதைச் சுற்றி, இலங்கையில் கிடைக்கும் ஒன்பது வகையான ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அதைச் சுற்றி, தாமரை இதழ்களால் சூழப்பட்ட உலக உருண்டை இடம்பெற்றுள்ளது. அதைச் சுற்றி, தர்ம சக்கரம் இடம்பெற்றுள்ளது.
இவை இரு நாடுகளுக்கு இடையேயான புத்த மதத் தொடர்பையும், கலாசார பாரம்பரியத்தையும் உணர்த்துவதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
விருதை வழங்கிய இலங்கை அதிபர் திசநாயகே, இந்தியாவை, குறிப்பாக பிரதமர் மோடியை, நட்புக்கு இலக்கணம் என, பாராட்டினார்.

