ADDED : டிச 03, 2025 03:05 AM

மாஸ்கோ: உக்ரைனின் முக்கிய போக்குவரத்து நகரமான, டோனெட்ஸ்க் மாகாணத்தின் போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்து உள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022, பிப்., முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன.
போரை நிறுத்த ரஷ்யாவுக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுத்ததுடன் பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஆனால் கடும் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா, உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனின் முக்கிய போக்குவரத்து நகரமான போக்ரோவ்ஸ்க்கை முழுமையாக கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்து உள்ளது. இதேபோல், கார்கிவ் பகுதியில் உள்ள வோவ்சான்ஸ்க் நகரமும் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவின் சிறப்பு துாதர் ஸ்டீவ் விட்காப், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதற்கு முன்னதாக ரஷ்யாவின் ராணுவ தளபதி வலேரி கெராசிமோவ், அதிபர் புடினிடம் இந்த தகவலை பகிர்ந்துகொண்டார்.
இந்நகரகத்தை கைப்பற்ற ரஷ்யா கடந்த ஆண்டு முதல் முயன்று வந்தது. ஆனால் இந்த தகவலை உக்ரைன் ராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

