பாகிஸ்தானில் வலுக்கும் தனி நாடு கோரிக்கை: சிந்தி மக்கள் பேரணியில் வெடித்தது வன்முறை
பாகிஸ்தானில் வலுக்கும் தனி நாடு கோரிக்கை: சிந்தி மக்கள் பேரணியில் வெடித்தது வன்முறை
ADDED : டிச 10, 2025 12:51 AM

கராச்சி: பாகிஸ்தானில் சிந்தி கலாசார தினத்தை கொண்டாடுவதற்காக பேரணியாக சென்றவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைத்தனர்.
போராட்டம்
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் சிந்து நதியை ஒட்டி அமைந்துள்ளது சிந்து மாகாணம். சிந்து சமவெளி நாகரிகத்தின் பழமையான மற்றும் தனித்துவமான கலா சாரத்தை கொண்டுள்ளது.
இப்பகுதி, பாகிஸ்தானுடன் சேருவதற்கு முன் சிந்து தேசம் என அழைக்கப்பட்டது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு தனித்துவமான சிந்தி தேசிய அடையாளம் இருப்பதாக நம்புகின்றனர்.
மேலும், சிந்து மாகாணத்தை பிரித்து ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என கோரி நீண்ட நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் அரசியல், ராணுவம் மற்றும் பொருளாதார அமைப்புகளில் பஞ்சாபி இன மக்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும், சிந்தி மக்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் புறக்கணிப்படுவதாகவும் இங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், தங்கள் மாகாணத்தில் உள்ள சிந்து நதி நீர் வளங்கள் பிற மாகாணங்களுக்கு திசை திருப்பப்படுவதாகவும், இதனால் உள்ளூர் மாகாண விவசாயிகள் பாதிக்கப் படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை இதுபோன்று சிந்து மாகாண மக்கள் பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்பட்டு வருவதால், சிந்து மாகாணத்தை பிரித்து சிந்துதேஷ் என்ற ஒரு தனி நாடாக உருவாக்க வேண்டும் என நீண்ட நாட்களாக சிந்து மாகாணத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, ஆண்டு தோறும், டிசம்பர் முதல் ஞாயிறு கொண்டாடப்படும் சிந்தி கலாசார தினத்தையொட்டி, கராச்சியில் பேரணி ஒன்றை சிந்துதேஷ் ஆதரவு குழுக்கள் நடத்தின.
இப்பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதுடன், சுதந்திரம் வேண்டும் என்றும், பாகிஸ்தான் ஒழிக என்றும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
இதையடுத்து, பேரணி செல்ல வேண்டிய வழித்தடத்தை அதிகாரிகள் மாற்றியதால், போராட்டக்காரர்கள் கோபமடைந்தனர்.
ஆத்திரத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை எரிந்தனர். மேலும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
இச்சம்பவத்தில் 5 போலீசார் காயமடைந்ததாகவும், 45க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சவால் ஏற்கனவே, பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் தனி நாடு கோரி போராட்டங்களும், வன்முறைகளும் வலுத்து வரும் நிலையில், தற்போது சிந்து மாகாணத்திலும் பிரிவினைவாதப் போராட்டங்கள் வலுப்பெற்று வருவது பாகிஸ்தான் அரசுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது-.

