ஜி20 போர்க்களமாக மாறியது; டிஜிட்டலிலும் தென்ஆப்ரிக்காவின் பெயரை நீக்கினார் டிரம்ப்
ஜி20 போர்க்களமாக மாறியது; டிஜிட்டலிலும் தென்ஆப்ரிக்காவின் பெயரை நீக்கினார் டிரம்ப்
ADDED : டிச 02, 2025 10:53 AM

வாஷிங்டன்: 2026ம் ஆண்டில் ஜி20 மாநாடு நடத்த உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தென்ஆப்ரிக்காவுக்கு அழைப்பில்லை என்பதை தெளிவாக கூறிவிட்டார். தற்போது அவர் வெப்சைட் உள்ளிட்ட டிஜிட்டலிலும் கூட தென்ஆப்ரிக்காவின் பெயரை நீக்கிவிட்டார்.
ஜி - 20 நாடுகள் என்பது பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு சர்வதேச அமைப்பு. இதில், இந்தியா, அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன. நடப்பாண்டுக்கான ஜி - 20 நாடுகளின் தலைமை பொறுப்பை தென் ஆப்ரிக்கா வகித்தது. அடுத்தாண்டுக்கான பொறுப்பு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், நேற்று டிச., 1ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30ம் தேதி வரை, அடுத்தாண்டுக்கான ஜி - 20 தலைமை பொறுப்பை அமெரிக்கா ஏற்றது.
அடுத்தாண்டு புளோரிடா மாகாணம் மியாமியில் நடைபெறும் ஜி - 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க, தென் ஆப்ரிக்காவுக்கு அழைப்பு விடுக்கப்படாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். உலகின் எந்தவொரு அமைப்பிலும் உறுப்பினராக இருக்க தகுதியற்ற நாடு என்பதை தென் ஆப்ரிக்கா நிரூபித்துவிட்டதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
தற்போது ஜி20 சமூக வலைதளத்தில் டிரம்பின் கருப்பு, வெள்ளை நிறப்படம் இடம்பெற்றுள்ளது. அதில் மியாமி 2026, சிறந்தது இன்னும் வரவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது. டிஜிட்டலிலும் கூட தென்ஆப்ரிக்கா பெயர் நீக்கப்பட்டுள்ளதால், ஜி -20 அமைப்பு போர்க்களமாக மாறி உள்ளது. புதிய ஜி20 வலைத்தளம் படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், வெள்ளை இன மக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் கூறி, தென் ஆப்ரிக்காவில் சமீபத்தில் நடந்த உச்சி மாநாட்டை, அமெரிக்க அதிபர் டிரம்ப் புறக்கணித்தார். ஜி - 20 மாநாட்டின் முடிவில், தலைமை பொறுப்பை அமெரிக்க துாதரகத்தின் மூத்த பிரதிநிதியிடம் ஒப்படைக்க தென் ஆப்ரிக்கா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

