தாய்லாந்துக்கு பதிலடி தருவோம்: வரிந்துகட்டி களமிறங்கும் கம்போடியா
தாய்லாந்துக்கு பதிலடி தருவோம்: வரிந்துகட்டி களமிறங்கும் கம்போடியா
ADDED : டிச 10, 2025 12:49 AM

சுரின்: தாய்லாந்துக்கு எதிராக சண்டையிடப் போவதாக கம்போடியா உறுதிப்பட தெரிவித்துள்ளதால், இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து - கம்போடியா இடையே நுாறாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.
அமைதி ஒப்பந்தம்
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை, பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியில், 1907ல் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த வரைபடம் துல்லியமற்றது என தாய்லாந்து கூறி வருகிறது.
நீண்ட காலமாக நீடித்த இந்த எல்லை பிரச்னை, ஜூலையில் மோதலாக வெடித்தது. ஐந்து நாட்கள் நீடித்த மோதலில், 10க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மலேஷிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும், எல்லையில் பதற்றம் தொடர்ந்து நீடித்து வந்தது.
சமீபத்தில், தாய்லாந்து வீரர்கள் கண்ணி வெடியில் சிக்கி காயமடைந்ததை அடுத்து, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த தாய்லாந்து, அமைதி ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் தாய்லாந்து வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு வீரர்கள் காயமடைந்தனர். கம்போடியாவுக்கு பதிலடி கொடுக்க, அந்நாட்டின் ராணுவ இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை தாய்லாந்து நடத்தியது.
குற்றச்சாட்டு
இதனால் இரு நாடு களுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் எல்லையில் பீரங்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை நிலைநிறுத்தி உள்ளன.
தாய்லாந்து படைகளே முதலில் தாக்குதலில் ஈடுபட்டதாக கம்போடியாவும், தங்கள் நாட்டு இறையாண்மையை பாதுகாக்கவே தாக்குதலில் ஈடுபட்டதாக தாய்லாந்தும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி உள்ளன.
இந்நிலையில், கம்போடியா முன்னாள் பிரதமரும், செனட் தலைவருமான ஹுன் சென், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், 'தாய்லாந்தின் தாக்குதலுக்கு இரவோடு இரவாக பதிலடி வழங்கப்பட்டது.
' அந்நாட்டின் படைகளை பலவீனப்படுத்தி அழிப்போம். இதில் சமரசத்துக்கு இடமில்லை. நாட்டை பாதுகாக்க போராட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம்' எ ன, குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் கூறுகையில், “பேச்சுக்காக எங்களை இதுவரை கம்போடியா அணுகவில்லை. அந்நாடு சண்டையை விரும்புகிறது. அதனால், அந்நாட்டின் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளுக்கும் தாய்லாந்து உரிய பதிலடி கொடுக்கும்,'' என்றார்.
எல்லையில் மோதல் நடக்கும் பகுதிகளில் இருந்து, தாய்லாந்தைச் சேர்ந்த 1.30 லட்சம் பேர், கம்போடியாவைச் சேர்ந்த 60,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

