| தி.மு.க., கேட்பதை காங்., ஏற்றுக் கொள்ளும்: முதல்வர் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., கேட்பதை காங்., ஏற்றுக் கொள்ளும்: முதல்வர் பேச்சு

Updated : ஜன 17, 2011 | Added : ஜன 16, 2011 | கருத்துகள் (40)

சென்னை :""தி.மு.க., சார்பாக கேட்டுக் கொண்டவற்றை காங்கிரஸ் முதலில் தயங்கினாலும், பின்னர் ஏற்றுக் கொள்ளும்,'' என, முதல்வர் கருணாநிதி பேசினார்.

தமிழக அரசின் சார்பில், இந்த ஆண்டிற்கான, திருவள்ளுவர் விருது - வளனரசு, பெரியார் விருது - சாமிதுரை, அம்பேத்கர் விருது - யசோதா எம்.எல்.ஏ., அண்ணா விருது - ரவிக்குமார் எம்.எல்.ஏ., காமராஜர் விருது - ஜெயந்தி நடராஜன், பாரதியார் விருது - மம்மத், பாரதிதாசன் விருது - இளவரசு, திரு.வி.க., விருது - ஐயாசாமி, கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது - மதிவாணனுக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த விழாவில் வழங்கப்பட்டது.


விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது:இவ்விழாவில், என்னை திருவள்ளுவரின் மறுஉருவம், வாழும் வள்ளுவர் என, மிகைப்படுத்தி சொன்னதற்கு மிகவும் வருந்துகிறேன். வள்ளுவர் எழுதிய இரண்டடி குறளில் ஒரு அடிகூட எழுதத் தெரியாத நான் எங்கே? அவர் எங்கே? எனவே, என்னை வள்ளுவரின் அவதாரம் என புகழ்வதை தவிர்க்க வேண்டும். வள்ளுவரை என்னோடு ஒப்பிட்டால், இவர் என்ன வள்ளுவரா எனக் கேட்டு, அதை சிலர் அரசியல் ஆக்கிவிட எண்ணுவர். அரசியல்வாதிகளிடமிருந்து வள்ளுவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் இதை சொல்கிறேன். இந்த ஒப்பீடு தேவையில்லாத பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.வள்ளுவத்தை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மூலம் தான், சமூகம் சமத்துவம் பெறமுடியும் என, எண்ணினேன். வள்ளுவர் வாழ்ந்ததாக கூறப்படும் மயிலாப்பூரில் அவருக்கு மண்டபம் அமைக்க வேண்டும் என, அப்போது முதல்வராக இருந்த பக்தவத்சலத்திடம் பேசினேன். இதற்காக, ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் ஆராய்ச்சிக்கு முடிவில்லாமல், மண்டபம் கட்டும் எண்ணம் கைவிடப்பட்டது.


அதன்பின், சென்னையில் வள்ளுவருக்கு மண்டபம் அமைத்தே தீரவேண்டுமென விரும்பினேன். அதற்கு முன்னதாக, நான் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்தபோது, திருவள்ளுவர் படத்தை சட்டசபையில் வைக்க வேண்டுமென கேட்டேன். அதற்கு முதல்வர் பக்தவத்சலம், "அந்த படத்தை நீங்களே கொண்டுவாருங்கள்' என்றார்.வேணுகோபால் சர்மா என்ற ஓவியர், திருவள்ளுவர் படத்தை வரைந்தார். அதை அண்ணாதுரை, காமராஜர் உட்பட அனைவரும் பார்த்து, அந்த படத்தையே வள்ளுவர் படமாக அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம். ஆனால், அதிலும் சிலருக்கு குறை இருந்தது.வள்ளுவர் பிராமணராக இருந்ததால் தான் அவரால் இத்தகைய திருக்குறளை இயற்ற முடிந்தது. அவர் சாதாரணமாக இருந்திருக்க முடியாது என, சிலர் பேசிக் கொண்டனர். திருவள்ளுவர் உடலில் பூணூல் இருக்க வேண்டுமென அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், பிரச்னை ஏற்படாமல் இருக்க, ஓவியர் வேணுகோபால் சர்மா, திருவள்ளுவர் சால்வையை போர்த்தியிருப்பது போல, வள்ளுவர் படத்தை வரைந்து கொடுத்தார்.


சட்டசபையில் இந்த படத்தை வைக்கவேண்டுமென கேட்டபோது, தி.மு.க.,காரர்கள் இந்த படத்தை வைத்தால், நாங்கள் வைத்தது என அடிக்கடி கூறிக்கொள்வர் என நினைத்து, நாங்களே இந்த படத்தை வைக்கிறோம் என பக்தவத்சலம் கூறினார். அப்போதிலிருந்தே, தி.மு.க., சார்பாக கேட்டு கொண்டவற்றை, காங்கிரஸ் முதலில் தயங்கினாலும், பின்னர் ஏற்றுக்கொள்ளும்.நமது மொழி, இனம், கலை, கலாசாரத்தை, வருங்கால தலைமுறையினர் தெரிந்துக் கொள்ளவதற்காக, சென்னையில் வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும், என்னுடைய பார்வையில் தான் வைக்கப்பட்டது.அங்கு குடிசை அமைத்து, திருப்பணிகளை கண்டுகளித்தவன் நான். ஆனால், வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவுக்கு என்னை அனுமதிக்கவில்லை. இதுபோன்ற விழாக்களில் ஆண்டுதோறும் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும்.இன்றுமுதல், சிறந்த நூலாசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும், 20 ஆயிரம் ரூபாயுடன், 10 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். பதிப்பகத்தாரர்களுக்கு தற்போது வழங்கப்படும், 5,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தரப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.


சிறந்த சிறுகதைக்கு விருது : இந்த ஆண்டிற்கான சிறந்த படைப்பாளிக்கான விருது வழங்கும் பிரிவில், ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறுகதை தொகுப்புக்கு விருது வழங்கப்பட்டது. தங்க பதக்கமும், 20 ஆயிரம் ரூபாயும் இந்த விருதில் அடங்கும்.விருதைபெற்ற ஆண்டாள் பிரியதர்ஷினி, நிருபர்களிடம் கூறும்போது, "நான், 20 ஆண்டுகளாக எழுத்துத்துறையில் உள்ளேன். இந்த விருதை, என் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். முதல்வர் கையால் விருது வாங்கியது, மனநிறைவு தருகிறது. இதன்மூலம் நிறைய எழுதவேண்டும் என்ற ஆவலும் கூடுகிறது,'' என்றார்.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X