"மேட்டுப்பாளையம் போயிருக்கிறதா, அம்மா சொன்னாங்களே. ஏதாவது, விஷேசமா,'' என, கேள்வி கேட்டவாறு, ஷோபாவில் வந்தமர்ந்தாள் சித்ரா.
"அதுவாக்கா, வீட்டுக்கு காலேஜ் பிரண்ட்ஸ்ங்க வந்திருந்தாங்க. லீவுக்கு எங்கேயாவது கூட்டிட்டு போன்னு கேட்டாங்க. தண்ணீர் விளையாட்டுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம்னு ஒங்களுக்குத் தெரியாதா என்ன? அதான், பிளாக் தண்டருக்கு கூட்டிட்டு போனேன். ஆனா, ஏண்டா போனோம்னு ஆயிடுச்சு,'' என, அலுத்துக் கொண்டாள் மித்ரா.
"ஏன்? என்னாச்சு? ரொம்ப ஜாலியா இருக்குமே. நாங்கூட போயிருக்கேன்,'' என சித்ரா முடிப்பதற்குள், "நாங்க போன சமயத்துல, கட்சி கரைவேட்டிக்காரங்க ஏகப்பட்ட பேரு வந்திறங்கிட்டாங்க. எங்களால நிம்மதியா "என்ஜாய்' பண்ண முடியலை,'' என ஏகத்துக்கும் வருத்தப்பட்டாள் மித்ரா.
""எலக்ஷன் முடிஞ்சு போச்சுல்ல. இப்ப, கரைவேட்டிகளுக்கு என்ன கொண்டாட்டம்,'' என சித்ரா, விடாப்பிடியாக, திருப்பித்திருப்பி கேட்க, "எல்லாம் நம்மூர்க்காரங்க தான். முதல்வர் பிறந்த நாள் வந்தா, 31வது வார்டுல கோலப்போட்டி, விளையாட்டு போட்டி நடத்துவாங்க. அதுல ஜெயிச்சவங்கள,"டூர்' கூட்டிட்டு போவாங்க. இந்த வருஷம் பிறந்த நாள் போட்டி நடத்தி முடிச்சதும், "எலக்ஷன்' வந்ததால, "டூர்' போக முடியலையாம். இப்ப, ரிலாக்ஸ் டைம்னு, போட்டியில ஜெயிச்சவங்க, கட்சிக்காரங்கன்னு, ஏழு பஸ், ஆறு வேனுல, அவ்வளவு பேரையும் அள்ளிட்டு வந்து இறங்கிட்டாங்க. வந்தவங்களுக்கு தடபுடலா விருந்தும் வச்சாங்க.
ஆனா, காலங்காத்தாலேயே, பலரும் "தண்ணீ'ல தாங்க மிதந்தாங்க. ஒரு நாள் முழுக்க வேஸ்ட் ஆகிடுச்சு,'' என்று சொன்னவாறு, முந்திரி பக்கோடா, இஞ்சி டீ கொடுத்து உபசரித்தாள் மித்ரா.
""ஓ... நல்ல டெக்னிக்கா இருக்கே. இப்படி, "கவனிச்சா'தானே... மறுபடியும் தைரியமா போயி ஓட்டுக்கேட்க முடியும்,'' என்று சித்ரா உசுப்பேத்தினாள்.
""டூர் கூட்டிட்டுப்போன, துணை மேயருக்கும், மேயருக்கும் ஏகத்துக்கும் சண்டை வந்துருச்சு. அந்தக்கதை தெரியுமா,'' என மித்ரா கேட்க, சித்ராவோ, தெரியாது என கையை விரித்தாள்.
""மேட்டுப்பாளையம், நடூர் கிட்ட திருப்பூருக்கு வர்ற குழாய் ரெண்டு இடத்துல உடைஞ்சு, குடிதண்ணீ வேஸ்ட் ஆச்சு. திருப்பூருக்கு தண்ணீ வராததால, "டெபுடி' இங்கிருந்து போயி, "டுவாடு' அதிகாரிங்ககிட்ட பேசி, குழாயை அடைக்கிற வேலையை முடிச்சிட்டு வந்தாரு. இதை கேள்விப்பட்டதும், மேட்டுப்பாளையம் போனது பத்தி கேள்விப்பட்டேன்... நீங்க எதுக்கு போறீங்க...? நான் பார்க்க மாட்டேனா? இப்படி, ஆய்வு பண்ண, உங்களுக்கு அதிகாரம் இல்லைன்னு, ஏகத்துக்கும் சண்டை போட்டாங்களாம். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முத்தி, ஒருமையில திட்டுற அளவுக்கு எல்லை கடந்து போயிருச்சாம். இதைப்பத்தி தான் ஆளுங்கட்சி வட்டாரத்துல பெரிசா பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
""அவுங்க ரெண்டு பேருக்குள்ள ஈகோ பிரச்னை இருக்கலாம்; அதை, அவுங்களுக்குள்ள வச்சுக்கிடட்டும். ஜனங்களுக்கு தண்ணீர் கொடுக்கிற வேலையை ஒழுங்கா செஞ்சா, நல்லாயிருக்குமே,'' என்ற சித்ரா, ""தி.மு.க.,காரங்க, அறுவர் குழுவை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்காங்க,'' என, பொடி வைத்தாள்.
""தேர்தல் தோல்வியை பத்தி, அலசி ஆராயப் போறாங்களா?,'' என மித்ரா நக்கலாக கேட்க, ""தி.மு.க., கட்சியிலயும் திருப்பூரை வடக்கு, தெற்குன்னு ரெண்டா பிரிக்கப் போறாங்க. தெற்கு மாவட்ட செயலாளரா "மாஜி' மேயரை நியமிப்பாங்கன்னு பேச்சு இருக்கு. அதனால, மாநகர் மாவட்ட பதவிக்கு பெரிசா போட்டியிருக்காது; அது, நமக்குத்தான்னு மணி கோஷ்டி எதிர்பார்த்து காத்துக்கிட்டிருக்கு. அறுவர் குழு ஆய்வுக்கு வந்தால், யாருக்கு எந்தெந்த பதவின்னு பேசி முடிவெடுக்கப் போறாங்களாம்,'' என, சித்ரா கூறியதும், ""அப்ப, தோல்வி ஏன் வந்துச்சுன்னு பேசப்போறதில்ல; பதவியை பிரிச்சுக் கொடுக்கத்தான் குழு அமைச்சிருக்காங்களா,'' என, மித்ரா, அப்பாவியாய் கேட்க, நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE