ரோட்டுக்கடைக்கு தினசரி வாடகை... கேட்டு வாங்குறது பல...கை!| Dinamalar

ரோட்டுக்கடைக்கு தினசரி வாடகை... கேட்டு வாங்குறது பல...கை!

Added : ஜூன் 24, 2014
Share
தோழியின் திருமண வரவேற்பில், நீண்ட வரிசையில் பரிசோடு நின்று கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். இசைக்கச்சேரியில், 'காசு பணம் துட்டு...மணி மணி...!' என்று 'கானா' பாடிக் கொண்டிருக்க, குட்டீஸ்கள் சிலர் ஆடிக்கொண்டிருந்தனர். ''எல்லாமே காசு, பணம்தான்...அதுலயும் கோயம்புத்தூர்னாலே, ஆபீசர்கள் சத்தமில்லாம சம்பாதிக்கிற இடமாயிருச்சு,'' என்று வருத்தமான குரலோடு
ரோட்டுக்கடைக்கு தினசரி வாடகை... கேட்டு வாங்குறது பல...கை!

தோழியின் திருமண வரவேற்பில், நீண்ட வரிசையில் பரிசோடு நின்று கொண்டிருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். இசைக்கச்சேரியில், 'காசு பணம் துட்டு...மணி மணி...!' என்று 'கானா' பாடிக் கொண்டிருக்க, குட்டீஸ்கள் சிலர் ஆடிக்கொண்டிருந்தனர்.


''எல்லாமே காசு, பணம்தான்...அதுலயும் கோயம்புத்தூர்னாலே, ஆபீசர்கள் சத்தமில்லாம சம்பாதிக்கிற இடமாயிருச்சு,'' என்று வருத்தமான குரலோடு பேசினாள் சித்ரா.


''ஜாலியான 'மூடு'ல நீ ஏன் இவ்ளோ 'சீரியஸ்' ஆகுற?,'' என்றாள் மித்ரா.


''அப்புறம் என்னடி? நல்லவுங்க, நேர்மையானவுங்க யாரும் இந்த ஊர்ல நிம்மதியா வேலை பாக்க முடியாது போலிருக்கே; நம்ம கார்ப்பரேஷன் கமிஷனர் மேடம், இப்பதான் எந்த அரசியல் தலையீடும் இல்லைன்னு, கொஞ்சம் 'ஆக்டிவ்'வா இறங்கி, அதிரடி பண்ண ஆரம்பிச்சாங்க; அதுக்குள்ள அவரால பாதிக்கப்பட்ட 'லஞ்ச ஆபீசர்கள்' எல்லாம் 'சிண்டிகேட்' போட்டு, அவரைத் தூக்குறதுக்கு வழி தேடிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.


''யாரு இந்த வேலையப் பண்றது?,''ஆபீசர்ஸ் கூட்டணி:

''சஸ்பெண்ட் ஆன ரெண்டு இன்ஜினியர்கள்தான்...'பழைய மேயராவது திட்டிட்டு இருந்தாரு; இவுங்க எடுத்த எடுப்புல, 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்களே. இப்பிடியே விட்டா, நம்ம பொழப்பு நடக்காது; அதனால, இவரை எப்பிடியாவது தூக்கணும்'னு கூடிப்பேசிருக்காங்க; உள்ள இருக்கிற ஆளுங்ககிட்ட, 'அவுங்க தப்பு பண்ணுனது மாதிரி ஏதாவது பைல் பிடிங்க'ன்னு சொல்லி இருக்கிறதா தகவல்; என்ன நடக்கப்போகுதுன்னு தெரியலை,''


''இந்த ஆபீசர்ஸ் கூட்டணியே அப்பிடித்தான்; டி.எம்.கே., பீரியட்ல, அப்ப இருந்த மினிஸ்டர் பையன் பாரிக்காக, தெற்கு மண்டல ஆபீசை எந்த அனுமதியுமே வாங்காம, இஷ்டத்துக்கு கார்ப்பரேஷன் நிதியை எடுத்து பெருசாக் கட்டுன இன்ஜினியரு மேல 'என்கொயரி' நடந்துச்சு; ஆக்சுவலா, அ.தி.மு.க., ஆட்சியில இதைத் தோண்டி துருவியிருந்தா, பல பேரு மேல கேசு போட்ருக்கலாம்; ஆனா, இன்ஜினியர் மேல கூட நடவடிக்கை எடுக்காம புரமோஷன் கொடுத்திருக்காங்க; அவரும் இந்த மாச கடைசியில 'ரிட்டயர்டு' ஆகப்போறாரு. அப்புறம் எப்பிடி உருப்படும் கார்ப்பரேஷன்?,'' என்று கொதித்தாள் மித்ரா.


கச்சேரியில், 'பிள்ளையார் பட்டி ஹீரோ நீதான்பா கணேசா' என்று சத்தமாய் பாடிக்கொண்டிருந்தார் பாடகர்.வசூல் சிப்பாய்கள்:

''ஆபீசர்களைப் போலவே, கார்ப்பரேஷன்ல ஆளும்கட்சி கவுன்சிலர்களும் வசூலுக்காக புது கூட்டணி போட்ருக்காங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


''வசூல்ராஜாவே இப்ப இல்லியே. இவுங்க யாரு புதுசா?,'' என்றாள் மித்ரா.


''இவுங்கள்லாம் வசூல் சிப்பாய்கள். 'மூணு வருஷமா, எங்கயுமே வசூல் பண்ண விடாம, அவரே எல்லாம் பண்ணிட்டு இருந்தாரு; இனிமே இருக்கிற ரெண்டு வருஷத்துலயாவது, நாம வசூலைப் போடணும்'னு, 'வறட்சி'யில இருக்கிற ஆளும்கட்சி கவுன்சிலர்கள் சில பேரு கூடிப் பேசிருக்காங்க,'' என்றாள் சித்ரா.


''பேசிருக்காங்களா...? வசூலை ஏற்கனவே ஆரம்பிச்சிட்டாங்க; சிட்டிக்குள்ள இருக்கிற ஒவ்வொரு ரோட்டுக்கடைக்கும் தினமும் 450 ரூபா 'மாமூல்'தர வேண்டியிருக்காம்; ரெகுலர் ஸ்டேஷன் போலீசுக்கு 100, ஜீப்ல வர்ற போலீசுக்கு 100, சேனிட்டரி இன்ஸ்பெக்டருக்கு 100, கவுன்சிலருக்கு 100, கடைசியா 'பேட்ரல்' போலீசுக்கு 50... இதெல்லாம் இல்லாம, 'புட் செக்யூரிட்டி' டிபார்ட்மென்ட்ல இருந்து வந்தா, அவுங்களுக்கு ஒரு அமவுன்ட். இந்த தொகையை தினமும் கொடுக்கணும்னா, 1000 ரூபா லாபம் கிடைக்கணும்; அவ்ளோ லாபம் பாக்கணும்னா, எவ்ளோ 'குவாலிட்டி'யா அந்த பொருள்கள் இருக்கும்னு யோசிச்சுப்பாரு,'' என்றாள் மித்ரா.


''அதனாலதான், கோயம்புத்தூர்ல ரோட்டுக்கடைங்க காளான் போல முளைச்சிட்டே இருக்கு,'' என்று புலம்பினாள் சித்ரா.பான் பராக் கடத்தல்:

''அக்கா! நம்ம ஊருல இருந்த முக்கியமான போலீஸ் ஆபீசர் ஒருத்தர், சமீபத்துல 'டிரான்ஸ்பர்' ஆனாரு தெரியுமா? அநேகமா, 'பான்பராக்' கடத்தல் கேசுல, அவரு 'அரெஸ்ட்' ஆவார்ன்னு பரபரப்பா ஒரு 'டாக்' ஓடிட்டு இருக்கு. பிடிபட்ட 'அக்யூஸ்ட்'டுகளே, 'அவர்தான் எங்களை கடத்தச் சொன்னார்'ன்னு சி.பி.சி.ஐ.டி., போலீஸ்ல வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. ஆனா, அதை விசாரிக்கிற லேடி போலீஸ் ஆபீசர்தான், அவரு பேரைக் கொண்டு வர்றதுக்கு ரொம்பவே பயப்படுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.


''போலீஸ் மேட்டர்ன்னு நீ சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது; ஒரு நகைக்கடைக்காரங்களுக்கு ஆதரவா, சிட்டியில இருக்கிற 'க்ரைம்' போலீசு, ஏக அராஜகம் பண்ணிருக்காங்க; அங்க இருக்கிற எஸ்.ஐ.,ஒருத்தரு, நாலஞ்சு பசங்க மேல பொய்க் கேசு போட்டு, பாடாப்படுத்திருக்காரு; நாலு வயசு குழந்தையெல்லாம் கூப்பிட்டு வந்து, 'எங்க உங்க அப்பான்னு சொல்லு'ன்னு மெரட்டியிருக்காரு. அந்த எஸ்.ஐ.,யும், ரெண்டு போலீசும் செஞ்ச விஷயங்களைப் பத்தி, மனித உரிமை ஆணையத்துக்கு ஆதாரத்தோட புகார் போயிருக்கு,'' என்றாள் சித்ரா.ரேடியோ ஜாக்கியை அழ வைத்த போலீசார்:

''போலீஸ்காரங்க கொஞ்சம் ஓவராத்தான் போறாங்க; போன வாரத்துல, எனக்குத்தெரிஞ்ச ரேடியோ ஜாக்கி பொண்ணு ஒருத்தியை, திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருந்த போலீஸ்காரரு ஒருத்தர், ரொம்ப மோசமாப் பேசி நடுரோட்டுல அழ வச்சிருக்காரு. போலீஸ் ஜீப்பை 'ரிவர்ஸ்'ல எடுக்கிறப்ப, 'நோ பார்க்கிங்' பக்கத்துல நின்ன இந்த பொண்ணோட வண்டியை இடிச்சிட்டாங்க; அதை அந்த பொண்ணு கேட்டதுக்குதான், இப்பிடிப் பேசிருக்காரு. டூட்டிடைம்ல மப்புல இருந்த 'தங்கமான' பேரைக் கொண்ட அந்த போலீஸ்காரர் அப்பிடிப் பேசவும், அங்க கூடுன 'குடிகாரப்பசங்க' எல்லாம் மோசமா பேசிருக்கானுக. படு தைரியமான பொண்ணு...அவளயே குமுறிக் குமுறி அழ வச்சிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''போலீஸ் மேட்டர் போதும்! டி.எம்.கே., சமாச்சாரம் கேள்விப்பட்டியா?,''தி.மு.க.,வில் போட்டா போட்டி:

''என்ன மேட்டரு....20 வருஷமா கட்சியை அழிச்சிட்டேன்...சாரி சாரி, கட்சியை வளத்துட்டேன்; இனிமே, வேற யாரையாவது பார்க்கச் சொல்லுங்க'ன்னு 'மாஜி' சொன்ன விவகாரமா?''


''அதேதான்! இப்ப இருக்கிற ரெண்டு மாவட்டத்தை 4 மாவட்டமா மாத்துறாங்க; சிட்டியில இருக்கிற ரெண்டு மாவட்டத்துக்கு வீரகோபாலு, பழைய டெபுடி மேயர் கார்த்தி, 2 நாச்சிமுத்துன்னு ஏகப்பட்ட போட்டியா இருக்கும் போலிருக்கு. பைந்தமிழ்பாரி, தெற்கு மாநகரம் அல்லது மாவட்டம் கேக்குறாராம். என்ன செய்யப்போகுதோ தலைமை?,'' என்றாள் சித்ரா.


''யாரு பொறுப்புக்கு வந்து என்ன பண்ணப்போறாங்க? எதிர்க்கட்சி வேலையை ஒழுங்காப் பண்ணுனாத்தான் மக்கள் மதிப்பாங்க; டி.எம்.கே., கவர்மென்ட்ல அறிவிச்ச பாலத்தை, இன்னும் கட்டவே ஆரம்பிக்கலை; அப்ப ஆரம்பிச்ச திட்டங்களை முடிக்கவேயில்லை; அதுக்காக, இதுவரை ஒரு போராட்டமாவது நடத்திருப்பாங்களா? கட்சின்னா, சம்பாதிக்கிறதுக்கு மட்டும்தான்னு இருந்தா, அது எப்பிடி வளரும்?,'' என்றாள் மித்ரா.அடுத்த 'மாவட்டம்' அலம்பல்:

''என்னோட ரெக்கமண்டேஷன் இல்லாம, யாருக்கும் பொட்டி தரக்கூடாதுன்னு சொல்லிருக்காராம் புது ஆளு,'' என்று 'டாபிக்' மாறினாள் சித்ரா.


''யாருக்கா அந்த புதியவர்?,'' என்றாள் மித்ரா.


''அடிச்சுப் பிடிச்சு ஜெயிச்சாரே அவருதான்; நான்தான் அடுத்த 'மாவட்டம்', அதனால, என்னோட லெட்டர் இல்லாம யாருக்கும் புதுசா பூத் தர வேணாம்னு ஆவின்ல சொல்லிருக்காராம். பதவி வர்றதுக்கு முன்னயே, இப்பிடின்னா...? பதவி கிடைச்சா எப்பிடியிருக்கும்?,'' என்றாள் சித்ரா.


''ஏற்கனவே, ஏ.டி.எம்.கே., ஆட்சிக்கு வந்தபிறகு, சிட்டிக்குள்ள மட்டும் 32 ஆவின் பூத், கண்ட கண்ட இடத்தையும் ஆக்கிரமிச்சு வச்சிருக்காங்க; இனிமே இவரு வந்து எத்தனை கொடுக்கச் சொல்லுவாரோ?'' என்றாள் மித்ரா.


''ஏன்டி! ஏதோ ஒரு ஸ்கூல் காம்பஸ்ல, ஒரு பொண்ணும், டிரைவரும் காருக்குள்ள தண்ணியடிச்சாங்கன்னு சொன்னியே...அது எந்த ஸ்கூல்டி?,'' என்று கேட்டாள் சித்ரா.


''ஸ்....ஸ்...அது ரகசியம். விடுக்கா, ஒரு பொண்ணுக்காக ஸ்கூல் பேரையே கெடுக்க வேணாம்'' என்று மித்ரா சொல்லவும், அவர்கள் மேடையேறவும் நேரம் சரியாய் இருந்தது.
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X