மொபட்டிலேயே சிவன்மலை கோயிலுக்கு போயிட்டு வந்த சித்ராவும், மித்ராவும், ஜூஸ் கடையை பார்த்ததும், ஓரம்கட்டினர்.
ரெண்டு ஆப்பிள் ஜூஸ் ஆர்டர் கொடுத்த மித்ரா, "எலக்ஷன் "டியூட்டி' பார்க்க வந்த, ஓய்வு பெற்ற ஆபீஸருங்க... கார்ப்பரேஷன விட்டு போக பிடிக்காம, டேரா போட்டுட்டாங்கனு பேசிக்கிறாங்க...,'' என்று பேச்சை துவக்கினாள்.
"அது சரி... ரிட்டையர்டு ஆனவங்களுக்கு எலக்ஷன் டியூட்டி எதுக்கு போட்டாங்க? வேறு ஆட்களே இல்லையா?,'' என்று யதார்த்தமாக கேட்டாள் சித்ரா.
"கார்ப்பரேஷன்னு வந்துட்டாலே, தனி சட்டம் தானே? "ரிட்டையர்டு' ஆன உதவி கமிஷனரை கூப்பிட்டுத்தான் எலக்ஷன் கணக்கு பார்த்திருக்காங்க. ஏலெட்டு எலக்ஷன் பார்த்தவரு; அவருக்குத்தான் "கணக்கு' சரியா பார்க்கத் தெரியும்னு சொல்லி, "ரிட்டையர்டு' ஆனவரை கூப்பிட்டிருக்காங்க. "எலக்ஷன்' முடிஞ்ச பிறகும், அவர் போகாம இருக்காராம். அவரோட "அட்வைஸ்'படித்தான் எல்லாமே நடக்குது,'' என்றாள் மித்ரா.
"நீ என்ன, புதுசா பேசுறே? கார்ப்பரேஷன்ல இருக்கற பல "செக்ஷன்'கள்ல இப்படித்தான்,
சாதனை விளக்க பிரசாரமே, சோதனையா இருக்கு:
"ரிட்டையர்டு சீனியர்'கள் கை இன்னும் ஓங்கித்தான் இருக்குது. ரூலிங் பார்ட்டி கவுன்சிலருங்களே புலம்புறாங்க...'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, "சாதனை விளக்க பிரசாரமே, சோதனையா இருக்குதுனு ரூலிங் பார்ட்டி ஆளுங்க புலம்பிட்டு இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
"ஏன்... என்னாச்சு,'' என மித்ரா கேட்க, ""கட்சியில முக்கியமா இருக்கிற எல்லாருமே ஏதாவது ஒரு பதவியில இருக்காங்க. எல்லாரும் செலவு செய்யட்டுமேனு முடிவு பண்ணிட்டாங்க. அதனால, சாதனை விளக்க பிரசாரத்தை, ஒவ்வொரு அணியும் நடத்தணும்னு கண்டிஷன் போட்டுட்டாங்க. தப்பிக்க முடியாதுங்கறதுனால, ஒவ்வொரு அணியும்,"சிம்பிளா' பிரசாரத்தை முடிச்சிட்டு இருக்காங்க. இளைஞரணியில இருக்கிற, லாரி கம்பெனியை சேர்ந்த "நாட்டாமை' ஒருத்தரு, செஸ் போட்டியில இருந்து தெருமுனை பிரசாரம் வரை, பணத்தை வாரி இறைச்சி செலவு பண்ணியிருக்காரு. அவரும் காரணம் இல்லாம செலவு செய்வாரா, என்ன? 45வது வார்டுக்கு இடைத்தேர்தல் வருதுல்ல; கவுன்சிலர் பதவியை கைப்பத்தணும்னு ஆசைப்பட்டு செலவழிக்கிறாரு,'' என்று முடித்தாள் சித்ரா.
தப்பிய தி.மு.க.,வினர்:
"ஆளுங்கட்சி மேட்டர் ஓ.கே., தி.மு.க.,வுல களையெடுக்குறாங்களே... நம்மூர்ல யாரையும் களையெடுக்கலையா?,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
"லோக்சபா தேர்தல்ல, தி.மு.க., மூன்றாவது இடத்துக்கு போயிருந்தாலும், எதிர்பார்த்ததை விட, அதிகமான ஓட்டு வாங்கியிருக்காங்க. தேர்தல் பிரசாரம் செஞ்சப்ப, வேட்பாளர் "வீக்'னு சொன்னாங்க. ஓட்டு எண்ணிக்கை அன்னைக்கு அசந்துட்டாங்க. கூட்டணி பலத்தால, தே.மு.தி.க., ரெண்டாவது இடத்துக்கு வந்துருக்கு. இல்லைன்னா, தி.மு.க.,வுக்குதான் ரெண்டாவது இடம் கெடைச்சிருக்கும்னு, கூட்டல், கழித்தல் கணக்கு சொல்லி, நடவடிக்கையில இருந்து தப்பிச்சுட்டாங்க,'' என, மடமடவென கொட்டித்தீர்த்தாள் சித்ரா.
"போலீஸ்காரங்களையே ஏமாத்துன கதை தெரியுமா, உங்களுக்கு,'' என மித்ரா கேட்டவாறே, சித்ராவிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காமல், அவளே தொடர்ந்தாள். "அரசு வேலை வாங்கித்தர்றதா சொல்லி, பல்லடத்துல, ஒருத்தரு, தன்னோட உறவுக்காரப் பெண்ணிடமும், பிரண்ட்ஸ்கிட்டயும் பணம் வசூலிச்சு ஏமாத்தியிருக்காரு. போலீஸ் ஸ்டேஷனுக்கு தினமும் ஏகப்பட்ட புகார் வருது. அதை விசாரிக்கிற போலீஸ்காரங்களும், ஏமாந்து போயிருக்காங்க,'' என்றாள்.
"அது யாரு? அப்படி ஏமாந்தது,'' என, கேள்வி எழுப்பினாள் சித்ரா.
"பல்லடம் போலீஸ் ஸ்டேஷன்ல ரெண்டு பேரு, தங்களுக்கு டிரான்ஸ்பர் வாங்கித் தரச் சொல்லி, அதே நபர்கிட்ட பணம் கொடுத்திருக்காங்க. இதோ, அதோன்னு "டபாய்த்த' அந்த பேர்வழி, கடைசியில டிரான்ஸ்பரும் வாங்கித்தரல; வாங்குன பணத்தையும் திருப்பித்தரல. போலீஸ்காரங்க, நொந்துபோயி இருக்காங்க. மோசடி ஆசாமி மீது தொடர்ச்சியா ஏகப்பட்ட புகார் வந்து, கைது செஞ்சிட்டாங்க. இப்ப, பணத்தை எப்படி திரும்ப வாங்குறதுன்னு தெரியுமா முழிச்சிக்கிட்டு இருக்காங்க,'' என்று மித்ரா சொல்லி முடிப்பதற்கும், ஜூஸ் கிளாஸ் காலியாவதற்கும் சரியாக இருந்தது.
சித்ரா, மொபட்டை ஸ்டார்ட் செய்தாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE