'பீ ட்சா', 'ஜிகர்தண்டா' மீதான கொள்ளைப் பிரியத்தை, தமிழ் திரை ரசிகர்களும் ருசிக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை கொண்டு, இதையே அழகிய காவியமாக மாற்றிக் காட்டிய பெருமைக்குரிய இளம் இயக்குனராக வலம் வந்து கொண்டு இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ்.
மதுரையின் அடையாளமாக முன்னிறுத்தப்படும் முரட்டு முகபாவனை அற்று, 'அமுல் பேபி' தோற்றத்திலிருந்து, தமிழ் திரையுலகில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் இணை, துணை, உதவி இயக்குனர் என்ற பார்முலாவை உடைத்து, நேரடியாக இயக்குனர் என களம் இறங்கி, பீட்சாவை பெரும் வெற்றிப்படமாக்கி, திரையுலகையே திரும்பிப்பார்க்க வைத்தவர்.
'சூது கவ்வும்' படத்தில் கவுரவ தோற்றத்தில் முகத்தை காட்ட, அதுவும் வெற்றிக் கோட்டையை எட்டிப் பிடித்தது. மதுரையின் ஸ்பெஷல் சுவை உணவாக கருதப்படும் 'ஜிகர்தண்டா' பெயரில் சில மாதங்களாக மதுரையில் நடந்த படப்பிடிப்புக்களை வெற்றிகரமாக முடித்து விட்டு, திரையில் வெள்ளோட்டமிட காத்திக்கும் தருணத்தில், இவரது அப்பா கஜராஜ் நடித்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தை பார்ப்பதற்காக குடும்பத்தோடு மதுரை தியேட்டருக்கு வந்த போது, இருவரிடம் ஒரு சிறு நேர்காணல்...
கஜராஜிடம்...
கார்த்திக் திரையுலக பிரவேசம் உங்களால் தானா?
சினிமாத்துறையில் அப்பாவின் செல்வாக்கால் நடிப்பு, இயக்கத்திற்கு வந்த பல மகன்கள் உள்ளனர். ஆனால் நான் நடிக்க வாய்ப்பு கிடைத்ததே, என் மகன் மூலமாகத்தான்.
நடிப்பு உங்களுக்கு சரிப்படுகிறதா?
பீட்சாவில் இன்ஸ்பெக்டர் வேடம், சூதுகவ்வும் படத்தில் வக்கீல் வேடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இன்ஸ்பெக்டர் வேடம், முண்டாசுப்பட்டியில் ஊர் தலைவர் இப்படி ஆறு படங்களில் நடித்து விட்டேன். தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். நான் செய்யும் தொழிலுக்கு இடையூறு இல்லாத வகையில் நடிக்கிறேன். சில வேடங்கள் ஒத்துப் போவதால் நடிப்பு சரிப்படும் என நினைக்கிறேன். ரசிகர்களும் பாராட்டுகின்றனர்.
நடிப்பை எங்கு கற்றீர்கள்?
நான் ரஜினி ரசிகன். என் குடும்பத்தில் உள்ள அனைவருமே ரஜினி ரசிகர்கள். ரசிகராக இருந்தாலே நடிப்பு தானாக ஒட்டிக் கொள்ளும். முதலில் நடிகராக்கியதும் மகன் தான். அவனது சில குறும்படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தான். அதனால் சினிமாவில் தயக்கமில்லாமல் நடிக்க முடிந்தது.
கார்த்திக்கின் திரை வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?
மகனை பொறியாளராக்க வேண்டும் என்ற கனவில் தான் படிக்க வைத்தேன். அதுபோல் அவனும் படித்து அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலும் பணிபுரிந்தான். திடீரென வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்குள் வந்த போது, நான் எந்த விதத்திலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. அது அவனது உரிமை, சுதந்திரம். இத்துறையிலும் வென்று காட்டுவான் என்ற நம்பிக்கை இருந்தது. அது வீண்போகவில்லை.
கார்த்திக் சுப்புராஜிடம்...
பிரமிப்பான இயக்கத்தில் எப்படி தைரியமாய் இறங்கினீர்கள்?
துரு, பெட்டிக்கேஸ், வீ, புரோக்கன் காட்ஸ், காட்சிப்பிழை, ரியாக்ட், லாஸ்ட் டிரையின், டார்க் கேம், பிளாக் அண்டு ஒயிட், நீர், தர்மஅடி, ராவணம் இப்படி 14 குறும்படங்களை இயக்கியிருந்தேன். சின்னத்திரை சார்பில் நடந்த 'நாளைய இயக்குனரில்' முதலிடத்தில் தேர்வானபோதே தைரியம் பிறந்து விட்டது. அதனால் தான் 'பீட்சா'வில் பயமின்றி களம் இறங்கினேன்.
விருது பெறுவதற்காக படம் எடுக்கும் ஆசை?
கமர்ஷியலாக எடுக்கும் படங்களும் நன்றாக இருக்கும் போது விருது கிடைத்து விடும். அதனால் விருதுக்காக படம் எடுக்க வேண்டியதில்லை. நல்ல கமர்ஷியல் படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
எந்த மாதிரி கதைகளை கொடுக்க விருப்பம்?
காதல்... காதல்...
ஜிகர்தண்டா பற்றி சொல்லலாமே?
ரசிகர்களுக்கு புதியதொரு விருந்து தருவதற்காகவே உருவாக்கப்பட்ட படம் ஜிகர்தண்டா. பீட்சாவை விட பல மடங்கு சுவைமிக்கதாக இருக்க வேண்டும் என்பதற்காக இதில் அதிக கவனம் செலுத்திஉள்ளேன். ஜிகர்தண்டா நிச்சயம் ரசிகர்களை ஜில்லிட வைக்கும். படம் நன்றாக வந்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப இது இருக்கும். திரையில் பார்க்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள்.
உங்கள் பலமாக எதை கருதுகிறீர்கள்?
எனது 'டீம்' தான் எனது பக்கபலம்.
திரைத்துறையில் மதுரையின் பங்களிப்பு எப்படி?
படப்பிடிப்புக்கு ஏற்ற அருமையான இடங்கள் இங்கு உள்ளன. ஆனால் தொழில்நுட்ப வசதிகள் கோடம்பாக்கம் போல் வரவேண்டும். படிப்படியாக இந்த வளர்ச்சிகள் வளர்கிறது. எல்லாவற்றையும் விட திரைத்துறையில் பலர் இங்கிருந்து சாதனையாளர்களாக வலம் வருவது பெருமைக்குஉரியதாக உள்ளது. அதுமட்டுமல்ல ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் ரசிகர்களும் மதுரையில் தான் இருக்கிறார்கள் என்பது அதை விட பெருமைக்கு உரியது.
நடிகர் கஜராஜிடம் பேச 99440 67371ல் அழுத்தலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE