திருநெல்வேலி
: நெல்லையில் மாநகராட்சி பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து
கட்டப்பட்ட பங்களா வீட்டிற்கு ஐகோர்ட் உத்தரவின் பேரில் அதிகாரிகள் சீல்
வைத்தனர்.
திருநெல்வேலி மாநகராட்சி 17வது வார்டு, ரஹ்மத்நகர் 54வது
தெருவில், மாநகராட்சி, பூங்காவிற்காக ஐந்தரை சென்ட் நிலம் ஒதுக்கியது. அந்த
இடத்தில் ஒரு தனிநபர் ஆக்கிரமித்து பங்களா டைப்பில் வீடு கட்டிவந்தார்.
இதுகுறித்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தும் அதிகாரிகள்
கண்டுகொள்ளவில்லை. எனவே அதே பகுதியில் குடியிருக்கும் வக்கீல் மோகன்
தன்ராஜ், மதுரை ஐகோர்ட் பெஞ்சில் வழக்கு தொடர்ந்தார். அந்த கட்டடம்
ஆக்கிரமிப்பாக இருக்கும் பட்சத்தில் சீல் வைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
நேற்று மாநகராட்சி உதவி கமிஷனர் பெருமாள் தலைமையில் அதிகாரிகள், மாடியுடன்
கூடிய சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட அந்த கட்டடத்திற்கு
சீல் வைத்தனர். அந்த வீட்டை எல்.ஐ.சி., ஏஜன்ட் நாராயணமூர்த்தி என்பவர்
கட்டிவந்தார். கடந்த எட்டு மாதங்களாக மாநகராட்சியிடம் எந்த அனுமதியும்
பெறாமல் கட்டடம் கட்டப்பட்டது, நெல்லை மாநகராட்சி அதிகாரிகளின்
செயல்பாடுகள் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE