களக்காடு-முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு; காப்பக கள இயக்குநர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

களக்காடு-முண்டந்துறை காப்பகத்தில் புலிகள் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு; காப்பக கள இயக்குநர் தகவல்

Added : ஜூலை 09, 2014
Share
திருநெல்வேலி : முண்டந்துறை காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக களஇயக்குநர் மிட்டா பானர்ஜி தெரிவித்தார்.நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் பாபநாசம் அருகே சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடிஅமாவாசை வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். வரும் 14ல் கொடியேற்றமும், 26ல் அமாவாசை விழாவும்

திருநெல்வேலி : முண்டந்துறை காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக களஇயக்குநர் மிட்டா பானர்ஜி தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில் பாபநாசம் அருகே சொரிமுத்தையனார் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆடிஅமாவாசை வழிபாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். வரும் 14ல் கொடியேற்றமும், 26ல் அமாவாசை விழாவும் நடக்கிறது. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளதால், புலிகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு பாதிப்பு வராமல் தடுப்பதற்காகவும், சூழல் விதிமுறைகளை பாதுகாப்பது தொடர்பாகவும் புலிகள் காப்பக கள இயக்குநர் மிட்டா பானர்ஜி சில விதிமுறைகளை தெரிவித்தார். அவர் கூறுகையில், புலிகள் காப்பக பகுதியில் தற்போதும் புலிகள் கணக்கெடுப்பு நடக்கிறது. இதற்காக 60 இடங்களில் 120 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கணக்கெடுப்பு வரும் செப்டம்பர் முதல் வாரம் நிறைவடைகிறது. 2012 கணக்கெடுப்பில் 10 புலிகள் இருந்தன. 2013ல் ஒரு புலி அதிகரித்தது. 2014ல் தற்போது 12 புலிகள் இருப்பது தெரியவந்தது. அமாவாசை தினத்தன்று சொரிமுத்தையனார் கோயிலுக்கு கடந்த ஆண்டு ஒன்றரை லட்சம் பேர் வந்துள்ளார்கள். 4 ஆயிரம் கூடாரங்கள் அமைத்திருந்தனர். எனவே இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இந்த முறையும் மதுபானம், சிகரெட், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் போன்றவற்றை அங்கு கொண்டுசெல்ல அனுமதி கிடையாது. பாணதீர்த்த அருவிக்கு படகில் செல்லவும் இந்த முறை தடைவிதிக்கப்பட்டுள்ளது. புலிகள் காப்பக பகுதியின் மேம்பாட்டிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்புதர வேண்டும் என கேட்டுக்கொண்டார். பேட்டியின் போது, துணை இயக்குநர்கள் களக்காடு பிள்ளைநாயகம், அம்பாசமுத்திரம் காஞ்சனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X