மங்கலம் தரும் மதுரை குங்குமம்..!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மங்கலம் தரும் மதுரை குங்குமம்..!

Added : ஜூலை 14, 2014
Share
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்காசி விசாலாட்சி கருணை முகத்தில்கலங்கரை காட்டும் குங்குமம்கண்ணகியோடு மதுரை நகரில்தணலாய் எழுந்த குங்குமம்-- என கவியரசர் கண்ணதாசன் 'குங்குமம்' படத்தில் எழுதிய பாடல் வரிகள், மதுரை குங்குமத்திற்கு 1963 ம் ஆண்டில் கிடைத்த ஐ.எஸ்.ஓ., சான்று. ஆன்மிகம், அறிவியல், அழகு என்ற இந்த முப்பரிமாணத்தின் ஒரே குறியீடு

குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
காசி விசாலாட்சி கருணை முகத்தில்
கலங்கரை காட்டும் குங்குமம்
கண்ணகியோடு மதுரை நகரில்
தணலாய் எழுந்த குங்குமம்
-- என கவியரசர் கண்ணதாசன் 'குங்குமம்' படத்தில் எழுதிய பாடல் வரிகள், மதுரை
குங்குமத்திற்கு 1963 ம் ஆண்டில் கிடைத்த ஐ.எஸ்.ஓ., சான்று.

ஆன்மிகம், அறிவியல், அழகு என்ற இந்த முப்பரிமாணத்தின் ஒரே குறியீடு குங்குமம். கடவுளையும், கணவனையும் குங்குமமாக சிருஷ்டித்துக் கொள்பவர்கள் ஏராளம். நுாற்றாண்டுகளாய் குடும்பங்களோடு சம்பிரதாயமாக சங்கமித்திருக்கும் சாஸ்திரம். ஆன்மீகத்தில் பிரதான இடம் பெறும் இதற்கு, அழகு சாதன வரிசையிலும் முதலிடம் தான்.நெற்றிப் பொட்டில், எந்த பொட்டு வடிவத்தில் இருந்தாலும், உலக நாகரிகத்திற்கு இந்திய கலாசாரத்தை, ஒளிவு மறைவின்றி நேருக்கு நேராய் அடையாளப்படுத்தும் நிலைக்கண்ணாடி. புன்னகையே என்ன விலை என 'உம்மூஞ்சிகளாய்' திரிபவரையும் தேவதைகளாக மாற்றும் மந்திரம் குங்குமம்.பிரதான பிரசாதம்கருணையின் வடிவாய் காட்சி தரும் எல்லா கடவுள்களின் நெற்றி முதல் திருவடிபாதங்கள் வரை ஆளுமை செய்யும் இவை அம்மன் கோயில் பிரசாதங்களில் பிரதானம். உலகெல்லாம் மதுரையின் ஆன்மிக சான்றாக திகழும் மீனாட்சி அம்மன் கோயிலின் புகழ் பரப்பும், நறுமண வாஸ்து. மதுரை மல்லி எப்படி கொண்டாடப்படுகிறதோ அது போல் மீனாட்சி கோயில் குங்குமம், திருப்பதி லட்டு போல் மேன்மையாக கருதப்படுகிறது.

கிடைப்பதே புனிதம்: மீனாட்சி கோயிலில் அம்மன் அருள் பெற காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பக்தரும், வேண்டுதல்களின் வினைபயனாய், கிடைக்கும் ஆசியை மஞ்சள், குங்குமம் வடிவில் பெற்றுச் செல்வதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். கோயில், புதுமண்டபத்தை சுற்றியுள்ள கடைகளின் பெரும் வியாபாரமும் மஞ்சள், குங்குமம், தாலி, வளையல் தான். இந்த வியாபாரத்தை நம்பி நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. நகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் இந்த குங்குமம் கிடைத்தாலும், கோயிலில் இருந்து பெற்றுச் செல்வதை தான் உள்ளூர் வெளியூர் பக்தர்கள் புனிதமாக நினைக்கின்றனர்

குடிசை தொழில் தயாரிப்பு : சென்னை, திருச்சி என ஒரு சில நகரங்களில் இருந்து கம்பெனி தயாரிப்புகளாக குங்குமம் மதுரையில் விற்பனை செய்யப்பட்டாலும், மதுரை தயாரிப்புகளுக்குத் தான் அதிக வரவேற்பு. உள்ளூர் வாடிக்கையாளர்கள் எது நல்ல குங்குமம் என்ற நுட்பங்களை தெரிந்து வைத்திருப்பதால், அவர்கள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் குங்குமம் வாங்கிவிடுவது இல்லை. தங்களுக்கு என ஒரு சில கடைகளை தேர்வு செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் வீடுகளிலே குடிசைத் தொழிலாக தயார் செய்து கடையில் விற்கிறார்கள். பிரபல கம்பெனி தயாரிப்புகளின் விலைகளை விட இது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

வளர்ந்து வந்த பாதை : இரண்டு கலர்களில் குங்குமம் கிடைக்கிறது. ஒன்று சிவப்பு மற்றொன்று அரக்கு (மெரூன்). 1960 ஆண்டு வரையிலான காலகட்டம் வரை குங்குமம் என்றால் அது சிவப்பு கலராக மட்டுமே கிடைத்தது. அதன் பின் தான் மெரூன் கலர் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும் தாழம்பூ வாசனை 1975 ம் ஆண்டுக்கு பின் தான் பிரபலமானது. தற்போது குங்குமம் என்றால் அது தாழம்பூ குங்குமம் என்ற அளவிற்கு மக்கள் மனங்களில் இடம் பெற்றுள்ளது. சில கம்பெனி தயாரிப்பு குங்குமத்தில் மெரூன் கலரில் 'டார்க்' கறுப்பு போல் இருப்பதை அறிமுகம் செய்துள்ளனர்.

தயாரிப்பு முறைகளில் வேறுபாடு : குங்குமம் தயாரிப்பில் ஈடுபடுவோர் ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு 'பார்முலா'வை வைத்துள்ளனர். அதை ரகசியமாகவும் வைத்திருக்கின்றனர். எது என்னவாக இருந்தாலும் இந்த தயாரிப்புகளில் குண்டு மஞ்சள், படிகாரம் இடம்பெற்றுவிடுகிறது. வெண்காரம், பச்சரிசி, சந்தனம், சுண்ணாம்பு, எலுமிச்சை, நல்லெண்ணெய் என பல வகையான பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஓராண்டு வரை இவை கெட்டுப்போவது இல்லை. மருத்துவ குணம் வாய்ந்த கிருமிநாசினி பொருட்கள் இதில் இடம் பெற்றாலும், நீண்ட நாட்கள் வைத்திருந்தாலும், ஈரப்பதம் பட்டால் விரைவில் கெட்டுப்போகும்.

கலப்படம் அலர்ஜி : குங்குமத்தை மனதால் நேசித்தாலும், சிலருக்கு அது அலர்ஜியாக உள்ளது. சிலர் கெமிக்கல் பொருட்களால் இதை தயாரிக்கின்றனர். இது தான் அலர்ஜியின் காரணி. தோல் அரிப்பு ஏற்படுவதுடன், அந்த இடம் கறுத்து விடுகிறது. ஸ்டிக்கர் பொட்டின் தேவை அதிகரிப்பின் காரணங்களில் இதுவும் ஒன்று. சிவப்பு கலர் பாறை பொடிகளும் கலப்படத்தின் ஒரு மூலப்பொருளாக உள்ளது. குங்குமத்தின் வாசனை மற்றும் அதை பேப்பரில் தேய்க்கும் போது வெளித்தெரியும் மஞ்சள் நிறம் இவற்றை தவிர்த்து வேறு எந்த வகையிலும் கலப்பட சரக்கு என்பதை கண்டுபிடிக்க முடியாது.

வீடுகளிலும் தயார் செய்யலாம் : தேவையான பொருட்கள்: குண்டுமஞ்சள் 100 கிராம் வெண்காரம் 10 கிராம், படிகாரம் 10 கிராம், நல்லெண்ணெய் தேவையான அளவு, எலுமிச்சை சாறு அரை மூடி.
வெண்காரம், படிகம் இரண்டையும் உடைத்து தனித்தனியாக மிக்சியில் பொடியாக்க வேண்டும். அதன் பின் மிக்சியில் இரண்டையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். அதன் நிறம் பழுப்பு நிறமாக ஈரப்பசையுடன் இருக்கும். மஞ்சளை நறுக்கி பொடித்து சல்லடையில் சலித்து எடுக்கவும். எலுமிச்சை சாறுடன் அரைத்து வைத்த வெண்காரம், படிகத்தை கலந்து வைக்கவும். இந்த கரைசலுடன் மஞ்சள் பொடியை கலந்து பிளாஸ்டிக் பேப்பர் அல்லது பிளாஸ்டிக் தட்டில் பரப்பி உலரவிடவும். நன்கு உலர்ந்த பின் செங்கல் நிறத்துாளில் இருக்கும். அதில் சிறிது சிறிதாக நல்லெண்ணெய் சேர்த்து பிசிறி விடும் போது, மஞ்சள் வாசனையுடன் டார்க் மெரூன் நிறத்தில் குங்குமம் கிடைக்கும். நல்லெண்ணெய் அதிகம் சேர்த்தால் மஞ்சள் வாசத்திற்கு பதில் நல்லெண்ணெய் வாசம் வரும். தாழம்பூ, மல்லிகை வாசனை தேவையெனில் இதன் எசன்ஸ்களை இரண்டு மூன்று துளி சேர்த்தல் விரும்பும் வாசனை கிடைத்து விடும்.

அறிவியலும், ஆன்மிகமும் : ஹிப்நாட்டிச சக்தியை முடியடிக்கும் சக்தி குங்குமத்திற்கு உண்டு. நெற்றியில் குங்குமம் வைப்பதால் நரம்புகளின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும். குங்குமத்தின் மீது சூரிய ஒளிபடுவதால், அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாக்கும். இது பெண்களுக்கு நல்லது. புருவத்தின் மத்தி, சக்தி குவியும் இடம். சுழுமுனை, ஞானக்கண் என அழைக்கப்படுகிறது. இது அறிவுக்கு அப்பாற்பட்டு இன்னொரு நுண்ணறிவை எட்ட வைக்கும். உடல் ஆற்றலை வெளிப்படுத்தும் ஏழு சக்கரங்களில் ஒன்றான ஆக்ஞை நெற்றிப் பொட்டில் தான் உள்ளது. ஒருவரின் ஞானம், பேரறிவு வெளிப்பட காரணமாக அமைவதும் இந்த ஆக்ஞை சக்கரம் தான். இதை துாண்டிவிடும் பணியை குங்குமம் செய்யும், என இப்படி இதற்கு பல விளக்கங்கள் தரப்படுகின்றன. வடமாநிலங்களில் செந்துாரத்தை விட குங்குமத்தை தான் ஆண்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

பர்சில் குங்குமம் : இந்திரா சவுந்தரராஜன், எழுத்தாளர்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அர்ச்சனையில் அம்மன் பாதத்தில் இருந்து கிடைக்கும் குங்குமத்தை நெற்றியில் வைத்தாலே, ஒரு தைரியம், சந்தோஷம் பிறக்கும். குங்குமத்தை எங்கு சென்றாலும் என் பர்சில் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். ஆன்மிகத்தின் அடிப்படையில் மட்டுமல்லாது அறிவியல் அடிப்படையில் நெற்றிப் பொட்டில் வைப்பதால் பல நன்மைகள் உள்ளன. திருஷ்டியை முறியடிக்கும் தன்மை கொண்ட இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் முகப் பொலிவை, கொடுக்கும் ஆற்றல் கொண்டது.

கவலை ரேகைகள் விலகும் : சவுலனி, குடும்பத் தலைவி: குழந்தை பருவம் முதல் குங்குமம் பயன்படுத்துகிறேன். மனதில் கவலை, கோபம், துயரம் என எது இருந்தாலும், குங்குமம் வைத்து வெளியே கிளம்பும் போது அந்த 'ரேகைகள்' எதுவும் முகத்தில் இருக்காது. தெய்வ சக்தி குடியிருக்கும் நெற்றியில் மோதிர விரலால் குங்குமம் வைப்பதிலும் மனதில் ஒரு சக்தி பிறக்கிறது. முகலட்சணத்திற்கான ஐஸ்வரியமாகவும் கருதி குடும்பத்தில் எல்லோரும் குங்குமம் வைக்கிறோம்.

குங்குமச் சிமிழ் : குங்குமத்தை டப்பாக்கள், பிளாஸ்டிக் கவர்கள், பேப்பரில் வைத்திருப்பதை விட, மரத்திலான குங்குமச்சிமிழில் வைத்திருப்பது சிறப்பாக கருதப்படுகிறது. திருமணத்திற்காக வாங்கும் குங்குமச்சிமிழில் மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு வைத்து கொடுப்பது வழக்கம். மரத்தில் உள்ள குங்குமச்சிமிழ் ஈரத்தன்மைக்கு எதிரானது. அதனால் மரக்குங்குமச்சிமிழில் வைத்திருக்கும் குங்குமம் நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் இவை ஸ்பெஷல்.

மஞ்சள் குங்குமம் : கணேஷ் பாபு, சபரி கணேஷ் குங்குமம்: குடும்பமாக இத்தொழிலை செய்கிறோம். அம்மா குப்பம்மாள் தான் எனக்கு இதன் தயாரிப்பு முறைகள் குறித்து கற்றுத்தந்தார். தயாரிப்பு, பேக்கிங் இவற்றை அம்மாவும், மனைவி ஆனந்தியும் கவனிக்கின்றனர். நான் விற்பனை செய்கிறேன். மஞ்சளின் விலைக்கு தகுந்தவாறு இதன் விலை குறையும், கூடும். இரண்டு ரூபாய் பாக்கெட்டு முதல் ஒரு கிலோ பாக்கெட் வரை தயாரிக்கிறோம். அர்ச்னைகளுக்கு சிவப்பு குங்குமம் அதிகம் விரும்பப்படுகிறது. மஞ்சள் குங்குமம் (மெரூன் கலர்) அதிகம் தயாரிக்கிறோம், என்கிறார்.

வெளிநாடுகளில் குங்குமம் : பாண்டியராஜ், பெரிய காமாச்சி செட்டியார் சன்ஸ்: மூன்று தலைமுறைகளாக மீனாட்சி அம்மன் கோயிலில், மஞ்சள், குங்குமம் விற்பனை செய்கிறோம். இதன் விற்பனை சீசன் என்பது சபரிமலை சீசன் தான். சாதாரண நாட்களில் கோயிலில் உள்ள கடைகளில் விற்பனை ஆவதை விட பல மடங்கு கூடும். அப்போது அனைத்து கடைகளிலும் சேர்த்து நாள் ஒன்றிற்கு ஆயிரம் கிலோவிற்கு அதிகமான தேவை இருக்கும். வெளிநாட்டிற்கு அனுப்புவதற்காக என சிலர் கேட்டு வாங்குவார்கள். அவ்வாறு அனுப்புவதை நன்றாக பேக்கிங் செய்து கொடுக்கிறோம். தாழம்பூ குங்குமம் கிலோ ரூ.400.

தாழம்பூ குங்குமம் : ரமேஷ், காயத்ரி ஸ்டோர்ஸ்: மீனாட்சி அம்மன் கோயிலில் கடை வைத்திருக்கிறோம். எங்களது ஸ்பெஷல் தாழம்பூ குங்குமம் தான். வீட்டிலே தயார் செய்து விடுகிறோம். சிறுரக டப்பாக்களில் பேக்கிங் செய்கிறோம். இதற்கான மூலப்பொருட்கள் 'ரெடிமேட்' வடிவில் கிடைத்தாலும், நாங்கள் எங்களது கைப்பக்குவத்தில் தனித்தனியாக பொருட்களை வாங்கி பக்குவப்படுத்தி தயார் செய்கிறோம். விரும்பும் மற்ற கடைகளுக்கும் விற்பனை செய்கிறோம். கலர் கலர் வடிவங்களில் ஸ்டிக்கர் பொட்டுகள் வந்தாலும், இதன் விற்பனையில் எந்த குறைவும் இல்லை.

அழகின் மறுவடிவம் : கீதா, குடும்பத்தலைவி: எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் இன்று வரை குங்குமம் இல்லாமல் இருந்ததே இல்லை. துாங்கும் போது கூட. 'அம்பர்' வைத்து குங்குமம் வைத்தால் உதிராமல் அப்படியே இருக்கும். எங்கள் வீட்டில் நான் மட்டுமல்ல, என் கணவர் உமா மகேஸ்வரனும் குங்குமத்துடன் இருப்பார்.அவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்ணாடி முன் நின்று சந்தனம் குங்குமம் வைத்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X