பேருக்கு நடக்குது ஆய்வு ; வசூலுக்கில்லை ஓய்வு!| Dinamalar

பேருக்கு நடக்குது ஆய்வு ; வசூலுக்கில்லை ஓய்வு!

Added : ஜூலை 17, 2014
Share
இருள் விலகாத அதிகாலையிலேயே, கோனியம்மன் கோவிலுக்கு எதிரிலுள்ள மாடியின் மீது, இடம் பிடித்து, கோபுர தரிசனத்துக்காக காத்திருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். கும்பாபிஷேகத்துக்காக, ஒளி மழையில் குளித்துக் கொண்டிருந்தது, கோவில் கோபுரம்.''என்னமா குளிருது...ஆனா, எவ்ளோ மக்கள் கூடிருக்காங்க பாரு; ஆளும்கட்சிக்காரங்க தலை,அதிகமாத் தெரியுது...கவனிச்சியா?,'' என்றாள்
பேருக்கு நடக்குது ஆய்வு ; வசூலுக்கில்லை ஓய்வு!

இருள் விலகாத அதிகாலையிலேயே, கோனியம்மன் கோவிலுக்கு எதிரிலுள்ள மாடியின் மீது, இடம் பிடித்து, கோபுர தரிசனத்துக்காக காத்திருந்தார்கள் சித்ராவும், மித்ராவும். கும்பாபிஷேகத்துக்காக, ஒளி மழையில் குளித்துக் கொண்டிருந்தது, கோவில் கோபுரம்.
''என்னமா குளிருது...ஆனா, எவ்ளோ மக்கள் கூடிருக்காங்க பாரு; ஆளும்கட்சிக்காரங்க தலை,
அதிகமாத் தெரியுது...கவனிச்சியா?,'' என்றாள் சித்ரா.
''அவுங்களுக்கும், ஆபீசர்களுக்கும்தான் அதிகமா 'பாஸ்' கொடுத்திருக்காங்க. சிட்டிக்கு 'சென்டர்'ல இருக்கிற ஒரு தலைவரு, 200 பாஸ் வேணும்னு மெரட்டுனாராம். எவ்ளோ கொடுத்தாங்கன்னு தெரியலை!,'' என்றாள் மித்ரா.
''அதை விடு! முக்கியமான விஷயம் கேள்விப்பட்டியா? இன்னிக்கு கும்பாபிஷேகம் நடக்குது; நேத்து ஜம்மு போலீஸ்ட்ட இருந்து நம்ம போலீசுக்கு ஒரு தகவல் வந்திருக்கு; அமர்நாத் யாத்திரைக்கு வந்த கோயம்புத்தூர்க்காரரு ஒருத்தர், திடீர்ன்னு செத்துப்போயிட்டார்ன்னு. மெயில்ல வந்த படத்தைப் பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி. ஏன்னா, ஒன்றரை வருஷத்துக்கு முன்னால, கோனியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு வந்த நன்கொடையில, 80 லட்ச ரூபா ஊழல் நடந்ததா புகார் கிளம்புச்சே. அப்போதுலயிருந்து தலைமறைவாயிருந்த ஒரு அர்ச்சகரை போலீஸ் தேடிட்டே இருந்தாங்க. அந்த போட்டோ அவரோடதுதான். கரெக்டா, கும்பாபிஷேகம் நடக்குற இன்னிக்கு அந்த தகவல், பேப்பர்ல வந்திருக்கு,'' என்றாள் சித்ரா.
''தெய்வம் நின்று கொல்லும்கிறது இது தானோ?,'' என்றாள் மித்ரா.
''இதைப் புரிஞ்சுக்காம, ஆளுக்கு ஆளு ஆட்டம் போடுறாங்க. அறநிலையத்துறைக்கு முக்கியமான பொறுப்புல இருக்கிற ஒரு ஆபீசர், எல்லாரையும் வாய்க்கு வந்தபடி, ஒருமையில பேசுறாராம். கோவிலுக்கு வந்த வசூல்ல, எனக்கு ஒரு லட்ச ரூபா வேணும்னு கேக்குறாராம்,'' என்று சித்ரா பேசிக்கொண்டிருக்கும் போதே, அலைபேசியில் அழைப்பு வர, 'பரிதியா? டேய், நாங்க கீழ வரலை. மேல இருந்தே பாத்துக்கிறோம்,'' என்று பதில் தந்தாள்.
''அக்கா! நம்ம குறிச்சி குளத்துல, தார் ரோடுக்குப் பதிலா, 'பேவர்ஸ் பிளாக்' போடுறதா முடிவு எடுத்திருக்காங்களாம். அதுலயும், டூவீலர்களை 'ஒன் வே'யா அனுமதிக்கப்போறாங்களாம். பாலம் கட்டுன பிறகு, அதையும் நடைபாதையா மாத்துறதா இருக்காங்களாம்,'' என்றாள் மித்ரா.
''எப்பிடியோ, குளத்தைக் காப்பாத்துனா சரி! உக்கடம், அம்மன் குளத்துல வீடுகளைக் கொடுத்தவுடனே, வாலாங்குளத்துல இருக்கிற வீடுகளையெல்லாம் இடிக்கணும்னு, மாவட்ட ஆபீசரம்மாட்ட சிலர் சொன்னதுக்கு, 'அதெல்லாம் உடனே இடிச்சுர முடியாது,'ன்னு சொன்னாங்களாம். இவுங்க என்ன அரசியல்வாதியா? ஆபீசரா?,''
''நம்ம டிஸ்ட்ரிக்ட்ல லேடி ஆபீசர் நிறையா இருக்காங்கன்னு சந்தோஷப்படுறதா? வருத்தப்படுறதான்னு தெரியலை. ஏதாவது, ஊருக்கு நாலு நல்லது செஞ்சு, பேரு வாங்குவாங்கன்னு பார்த்தா, சில பேரைத் தவிர்த்து, எல்லாருமே கடமைக்குதான் வேலை பாக்குறாங்க,''
''ஏன்டி! அப்பிடிச் சொல்ற...?,'' என்றாள் சித்ரா.
''அப்புறம் என்னக்கா? இவுங்க வந்து ஊருக்குள்ள உருப்படியா என்ன வேலை நடந்திருக்கு... சொல்லு! ரூரல் ஏரியாவுல, 'குண்டாஸ்' போடணும்னா, வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,தாசில்தாரு, ஆர்.டி.ஓ., எல்லா ரும் பாத்து, கடைசியா கலெக்டர்தான் கையெழுத்துப் போடணும். கலெக்டரும், அவுங்க கிட்ட 'பைல்' வந்தா, அரைமணி நேரத்துல, ஆர்டர் போட்றாங்களாம்; ஆனா, இதுக்கு இடையில இருக்கிற ஒரு ஆபீசர்க்கு, 'பைல்' போச்சுன்னா, ஒரு வாரம் அங்கேயே தூங்குதாம். அதுக்குள்ள, அக்யூஸ்ட்டுங்க, அடுத்த 'க்ரைம்'ல இறங்கிர்றாங்கன்னு ரூரல் போலீஸ்காரங்க புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.
''போலீஸ்ன்னதும் ஞாபகத்துக்கு வருது; சிட்டிக்கு நடுவுல இருக்கிற ஒரு போலீஸ் ஆபீசரைப் பத்தி பேசிட்டு இருந்தமே...அவரோட பேச்சு, எல்லை மீறிப் போயிட்டு இருக்காம். போலீஸ் டிரைவர்ல இருந்து எஸ்.ஐ., வரைக்கும், எல்லாரையும் வாய்க்கு வந்தபடி திட்டுறாராம். ரயில் கட்டண உயர்வை எதிர்த்து, சில அமைப்புகள் சார்புல, போராட்டம் நடத்துனப்ப, அவுங்களையும் அதே பாணியில பேசிருக்காரு. அவுங்க கேக்கலையாம். 'நான் சொல்றதைத்தான் எல்லாரும் கேக்குறாங்க; இவனுக என்ன இவ்ளோ திமிர் பண்றானுக'ன்னு சொன்னாராம்,''
''அந்த அளவுக்கு இவருக்கு 'பவர்' கொடுக்கிறது யாரு?,''
''யாரும் கிடையாது! அவரே எடுத்துக்கிறாரு. எலக்ஷன் டைம்ல, இங்கயிருந்து மலைக்கு, 10 கோடி ரூபாயை, தன்னோட வண்டியிலயே பத்திரமா கொண்டு போய்ச் சேர்த்ததால, தனக்கு 'சப்போர்ட்' பலமா இருக்கும்கிற தைரியத்துலதான் இப்பிடியெல்லாம் பேசுறாராம்,''
''இது மாதிரிப் பேசுனவுங்க பல பேரு, இருந்த இடம் தெரியாம இருக்காங்க!,''
''அது சரி! பில்டிங் இன்ஜினியர், லேடி டாக்டர் 'கூட்டணி'யைப் பத்தி கண்டு பிடிச்சியா?,'' என்று கேட்டாள் சித்ரா.
''கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல நடக்குற கூத்தைப் பத்திதான சொன்ன...நானும் கேள்விப்பட்டேன்; இப்போ, அந்த இன்ஜினியருக்காக, ஜி.எச்.க்குள்ள 25 லட்ச ரூபா செலவுல, ஒரு ரூம் ரெடியாயிட்டு இருக்காம். அதுல, 'எல்லா' வசதியும் இருக்காம். அந்த ரெண்டு பேர்ல, ஒருத்தரை மாத்தலைன்னா, சீக்கிரமே பிரச்னை பெருசா வெடிக்கும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
''வெடிக்கிறதைப் பத்தி பேசவும்தான், இடிக்கிற ஞாபகம் வருது. கோயம்புத்தூருக்குள்ள உசரமான கட்டடங்கள்ல எல்லாம் 'ஸ்ரக்சுரல்' எப்படியிருக்குன்னு, எல்.பி.ஏ., டவுன் அண்ட் கன்ரி பிளானிங் ஆபீஸ்ல இருந்து நாலு நாலு பேரு, ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''ஆமா! ஏதோ அவிநாசி ரோட்டுல, ஆய்வு பண்ணிட்டு இருக்காங்கன்னு எனக்கும் தகவல் வந்துச்சு,''என்றாள் மித்ரா.
''அதெல்லாம் சும்மா 'ஐ வாஷ்' வேலை...முப்பதடி கூட அகலமில்லாத ரயில்வே ஸ்டேஷன் எதிர் சந்துல, பல பில்டிங், 15 மீட்டருக்கு மேலதான் இருக்கு. காந்திபுரம் வீதிகள்ல, பெரிய கடை வீதியில... எல்லாமே பெரிய பெரிய கட்டடமாத்தான், 'வயலட்' பண்ணி கட்டிருக்காங்க. அங்கெல்லாம் பார்க்காம, 'பக்கா'வா, அனுமதி வாங்கி கட்டுன கட்டடங்களை அளக்கிறது, ஏமாத்து வேலைதான?,'' என்றாள் சித்ரா.
''கரெக்ட்தான்க்கா! எல்.பி.ஏ., ஆபீஸ்லயும், டவுன் அண்ட் கன்ரி பிளானிங்லயும் புரோக்கர்கள் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்குது. பொள்ளாச்சியைச் சேர்ந்த ஆளும்கட்சி எக்ஸ் எம்.பி., ஒருத்தர்தான் மெயின் புரோக்கராம்,'' என்றாள் மித்ரா.
''கட்டடம்னாலே காசுதான...கார்ப்பரேஷன் டவுன் பிளானிங் ஆபீசர் போஸ்டிங்குக்கு, பல ஊர்கள்ல இருக்கிற பல பேரு 'டிரை' பண்றாங்களாம். தஞ்சாவூர்க்காரர் ஒருத்தரு, 'பெரிய அமவுன்ட்' கொடுத்து, டிரான்ஸ்பர் வாங்கிட்டாரு; கோயம்புத்தூர்ல வீடு பாத்துட்டு இருக்கார்ன்னு சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.
''வீடு பாக்கிறதாச் சொல்லவும்தான், ஞாபகம் வருது; ஹவுசிங் போர்டுல, வாடகை வீடு பிடிக்கிறதுக்கு ஒரே அடிதடியா இருக்கு தெரியுமா? ஆனா, சமூக சேவகர்ங்கிற பேர்ல, வீடு வாங்குன அரசியல்வாதிங்க பல பேரு, பல வருஷமா வாடகை கட்டாம, உள் வாடகைக்கு விட்டு சம்பாதிச்சிட்டு இருக்காங்க. பாவம்... வீடு இல்லாத அரசு ஊழியர்கள் பல பேரு, வீடு கிடைக்காம அல்லாடுறாங்க,'' என்றாள் மித்ரா.
''அந்த பட்டியல்ல ஒரு எக்ஸ்எம்.எல்.ஏ.,ஒருத்தரும் இருக்காரு; வாக்காளர் பட்டியல்ல, அவரு வேற இடத்துலதான் இருக்கார்ன்னு 'கன்பார்ம்' ஆயிடுச்சு. ஆனா, ஹவுசிங் போர்டு வீட்டை காலி பண்ண மாட்டேங்கிறாரு,'' என்று சித்ரா சொல்லும்போதே, மந்திரங்கள் ஒலிக்கத்துவங்க, இருவரும் கரங்களைக் கூப்பி, கண்களை மூடி, பக்திப்பரவசத்தில் மூழ்கினார்கள்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X