""கோழிக்கறியும், கொத்து புரோட்டாவும் உள்ள தள்ளுறவங்களுக்கு, இட்லியும், சாம்பாரும் கொடுத்து, சாச்சுப்புட்டாங்களே,''னு சொல்லிக் கொண்டே, கையில் இருந்த, "டீ'யை, உறிஞ்சினாள் சித்ரா.
""என்னடி, தலையும் இல்லாம; வாலும் இல்லாம, கோழிக்கறி, இட்லினு புதிர் போடுற; தெளிவாத்தான் சொல்லேன்,''னு சீண்டினாள் மித்ரா.
""திருப்பூர்ல மிகப்பெரிய சங்கம் ஒண்ணு இருக்கு. அந்த சங்கத்துல, ஒரு மாசம் விட்டு ஒரு மாசம், கூட்டம் நடக்கும். கூட்டம் முடிஞ்சப்பறம், தடபுடலா அசைவ விருந்து நடக்கும்; ஒவ்வொரு மீட்டிங்கிற்கும், ஒரு மெம்பர், விருந்துக்கு "ஸ்பான்ஸர்' செய்யணும். வழக்கமா, சிக்கன், மீன், மட்டன்னு நான்-வெஜ் அயிட்டங்களோட, விருந்து படுஅமர்க்களமா நடந்துட்டு இருந்துச்சு. சங்க தேர்தலுக்கு அப்புறம், இந்த மெனுல சின்ன மாறுதல் வந்துடுச்சு,'' என்று அங்கலாய்த்தாள் சித்ரா.
""அப்படி, என்ன பெரிசா மாறுதல் செஞ்சுட்டாங்க,'' என, சோபாவில் அமர்ந்தபடி, கேள்வி எழுப்பினாள், மித்ரா.
""சங்க செயற்குழு உறுப்பினர்கள்ல 10 பேரு புதுசு. இவங்களோட "ஸ்பான்ஸர்' வர்றப்ப, "பியூர் வெஜிடேரியன்' ஓட்டலா பார்த்து, பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணிடுறா. கொஞ்ச நாளைக்கு
முன்னாடி கூட செயற்குழு கூட்டம் கூடியிருக்கு. புது நிர்வாகிங்க, "ஸ்பான்ஸர்'னு சொல்லிட்டாங்க. அவங்களும் "ட்ரீட்' வெச்சிருக்காங்க. சூப், சப்பாத்தி, புரோட்டா, இட்லி, தோசைன்னு எல்லாமே வெஜ் அயிட்டம். நாக்கு அசைவத்த தேடுனாலும், விருந்துல பங்கெடுக்காம விட்டா, குத்தமாயிடுமேனு, வெஜிடேரியன் உணவை உள்ள தள்ளிட்டு, ஹரே ராமானுட்டு வந்துட்டாங்க. கறி விருந்து வெச்சா பில்லு லகரத்தை தொட்டுடுது; வெஜிடேரியன்னா சில ஆயிரத்தோடு, பாக்கெட் பழுக்கமா தப்பிக்குதுன்னு, சைவப்பிரியர்கள் சொன்னாங்க,'' என்றாள் சித்ரா.
""அதெல்லாம் சரி, அரசு போக்குவரத்து கழக அதிகாரிக செஞ்ச நூதன மோசடியை கேட்டீங்கன்னா... நீங்க ஆடிப்போயிடுவீங்க,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஏன், என்னாச்சு...'' என, சித்ரா படபடக்க, ""திருப்பூரை சேர்ந்த ஒருத்தரு, தகவல் உ<ரிமை சட்டத்துல, அரசு பஸ்களோட கட்டண விவரங்களை கேட்டாரு. நாலு மாசம் இழுத்தடிச்சு, பதில் கொடுத்திருக்காங்க. அந்த பதிலை படிச்சதும், ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். திருப்பூர்ல மொத்தம் 127 பஸ் ஓடுது. அதுல, 120 பஸ் எல்.எஸ்.எஸ்., ஆறு பஸ் எக்ஸ்பிரஸ். ஒன்னே ஒன்னு சாதாரண பஸ். அதுவும், சிட்டிக்கு வெளியே ஓடுது. சிட்டிக்குள்ள சாதாரண பஸ்சே இல்ல. சாதாரண பஸ்சுல கட்டணம் 3 ரூபா; எல்.எஸ்.எஸ்., பஸ்சுல 4 ரூபாய்ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, எல்லா பஸ்சும் சாதாரண பஸ்சா தான் ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் கூடுதலா வசூலிச்சு, மோசடி பண்றது வெளிச்சத்துக்கு வந்துருக்கு,'' என, மடமடவென கொட்டித்தீர்த்தாள் மித்ரா.
""கலெக்டர் ஆபீஸ் நுழைவாயில்ல, ஏகத்துக்கும் செலவு செஞ்சு "டிஸ்பிளே' வச்சாங்களே... படம் காட்டுறாங்களா...?'' என, அடுத்த தகவலுக்கு மாறினாள் சித்ரா.
""மழைநீர் சேகரிப்பு விளம்பரத்துக்கு வச்சாங்களே... அதுவா? குடிநீர் வடிகால் வாரியம் சார்புல மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விளம்பரம் செய்ற மாதிரி, "டிஸ்பிளே' போர்டு வச்சாங்க... ஒருநாள் விடாம, வருஷம் பூரா, செயல்படுற மாதிரி "செட்' பண்ணியிருக்கோம். கலெக்டர் ஆபீசுக்கு வர்ற மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்னு பெருமையா சொல்லிட்டு இருந்தாங்க... ஆனா, எதுவுமே தெரியாம, "பிளாக் போர்டு' மாதிரி நிக்குது,' என்றாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE