பொது செய்தி

தமிழ்நாடு

வாலி... நீ... வாழி...! கவிஞர் வாலியின் முதலாம் நினைவு நாள்

Added : ஜூலை 18, 2014 | கருத்துகள் (14)
Advertisement
வாலி... நீ... வாழி...! கவிஞர் வாலியின் முதலாம் நினைவு நாள்

அறைவாசலில் ஏ.ஆர்.ரஹ்மா னைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி விட்டோம் நானும் கவிஞர் பழநிபாரதியும். நடந்தது இதுதான். வாரம் ஒருமுறை வந்து சந்திக்க வேண்டும் என்பது எனக்கும் பழநிபாரதிக்கும் கவிஞர் வாலி இட்டிருந்த கட்டளை. மாலை 6.30 மணிக்கு வாலி வீட்டு வரவேற்பறையில் காபியுடன் தொடங்குகிற எங்கள் கவிதா மண்டலம் ஒத்திவைக்கப்படும் போது மணி 9.30 யை தாண்டியிருக்கும். இரவு 8 மணி இடைவேளையில் மூவருக்கும் உணவு. ஒரு நாள் இரவு மணி 9.30 நெருங்கும்போது "சாயந்திரமே என்னய பார்க்க வாரேன்னான். ஒரு விளம்பர பாடல். விளம்பர பாட்டுல்லாம் எழுதமாட்டேன்னேன். வேண்டாம்னேன் கேட்கல. நாந்தான் எழுதனும்ங்கிறான். சாயந்திரம் வேண்டாம். இன்னைக்கு கவிஞர்கள வரச் சொல்லி இருக்கேன். 9.30க்கு மேல வான்னேன். இப்ப வந்துருவான்” என்றார் வாலி.யாரு? என்றேன்.


'இப்ப பாரும்' என்றார் வாலி.


வாசல் கதவைத் திறக்கும் ஒலி. உதவியாளர் மைத்துனர் சாமிநாதன் முன்னால் வர அருகில் யாரோ வருவது நிழலாடியது, கவனித்தோம். (இப்போது முதல் வரியைப் படியுங்கள்.) உலகமே தேடிக்கொண்டிருக்கிற ஒரு இசையமைப்பாளர். அவரை ஒப்பிடும்போது எங்கள் நேரம் மிகமிக சாதாரணமானது.


வாலியிடம் வியந்த பண்புகள்:

"இன்று ஏ.ஆர்.ரஹ்மான் வரப்போகிறார். நாம் நாளை சந்திக்கலாம். முன்பு திட்டமிட்டது போல் இன்று வேண்டாம்” என்று சாதாரணமாய் வாலி சொன்னாலே சம்மதிக்கப் போகிறோம். ஆனால் ஒருவருக்காக ஒதுக்கிய நேரத்தை எக்காரணங் கொண்டும் மற்றவர்களுக்காக மாற்றவே கூடாதென்பது கவிஞர் வாலியிடம் காணக்கிடைத்த பண்பு. காவியக் கவிஞரிடம் நாங்கள் கண்ட இன்னொரு பண்பு, காலம் தவறாமை, நன்றி பாராட்டல்.


2012ஆம் வருட ஆரம்பம்:

இலங்கை கம்பன் கழக விழா, மத்தியமைச்சர்களுடன் காமராஜர் அரங்கத்தில் கலந்து கொள்ள வேண்டிய விழா. இன்னும் சில முக்கிய விழாக்கள் இருந்தன கவிஞருக்கு. இலங்கை செல்ல பாஸ்போர்ட் எடுக்கும் பணி வேறு நடந்து கொண்டிருந்தது. திடீரென்று குளியலறையில் விழுந்து முதுகில் அடி. வேறு வழியின்றி எல்லா விழாக்களையும் ரத்து செய்தார் வாலி.


வலியிருந்தாலும் வாலி இருப்பேன்:

எங்கள் குடும்பத்தினர் சார்பாக ராமாபுரத்தில் கட்டிய புதுவீட்டினை வாலி திறந்து வைக்கும் விழாவும் பட்டியலில் இருந்தது. வாலி குடியிருந்த கற்பகம் அவென்யூவிலிருந்து ராமாபுரம் கொஞ்சம் தொலைவு. வாலியாலோ முதுகு வலியோடு பயணிக்க இயலாத சூழ்நிலை. வீட்டைத் திறக்க வேண்டிய வாலி வரமுடியாமலாகி விட்டதே என்ன செய்யலாம் என்று கவலையோடு யோசித்துக் கொண்டிருந்த நேரம், திடீரென்று வாசலுக்கு வந்த காரிலிருந்து இறங்கினார் வாலி. மகிழ்ச்சியில் ஓடி வரவேற்றோம். இறங்கும்போதே சொன்னார், "என்னய்யா, நீரு எதிர்பார்க்கலேல்ல. எல்லா விழாவையும் ரத்து செஞ்சிட்டேன்யா. உம்ம விழாவுக்கு வராம என்னால இருக்க முடியலய்யா. எனக்காக நீரு எவ்வளவோ பண்றீரு. அதோட புது வீட்ட நான் திறந்து வைப்பேன்னு பத்திரிக அடிச்ச பிறகு சென்டிமெண்ட்டா வராம இருக்கக்கூடாது. அதான் வந்தேன். வலி எங்கூட இருந்தாலும் வாலி உங்கூட இருப்பேன்” என்று அந்த நேரத்திலும் சொற்சிலம்பம் ஆடியபடி தளர்ந்தவாறு வந்தார்.


கண்ணதாசனை மதித்த மாண்பு:

பெரிய மனிதனா சின்ன மனிதனா என்று பார்க்க மாட்டார். அன்பு காட்டுகிறவர் சாதாரணமானவனாக இருந்தாலும் பதிலுக்கு அன்பில் அவனை திக்குமுக்காட வைப்பதுதான் வாலியின் குணம். வாலியிடம் காணக்கிடைத்த இன்னொரு பண்பு மூத்தவர்களை மனதார மதிப்பது. அதிலும் கண்ணதாசன் போன்றோர் மீது அவருக்கிருந்த மரியாதை அளவிட முடியாதது. 23.11.12 ல் நடந்த 'வாலிப வாலி' நூல் வெளியீட்டு விழாவில் நடனத்துடன் இடம் பெற வைக்க வாலியைப் பற்றி அரவிந்த் சித்தார்தா இசையில் பாடல் ஒன்று நான் எழுதி ஒலிப்பதிவானது. விழாவிற்கு முன்பே பாடலை கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டார் வாலி. போட்டுக் காண்பித்தேன்.

சீனிவாசன்


பொன்னம்மாள்


தவமகனாய்ப் பிறந்தாய்


திருவரங்கம்


தீவுக்குள்ளே


தமிழ்மகனாய் தவழ்ந்தாய்

என்று தொடங்கிய தொகையறா தொடர்ந்த சில வரிகளுக்குப் பின்


கோடிக் கோடி கனவோடு


கோடம்பாக்கம் வந்தாய்.


கண்ணதாசன் கண்ணெதிரே


கொடிநாட்டி வென்றாய்


என்று முடிந்து அதன்பின்


பல்லவி தொடங்கியது.


பாடல் முடிந்ததும்


'அது என்னய்யா கண்ணதாசன் கண்ணெதிரே கொடிநாட்டி வென்றாய்ன்னு எழுதியிருக்கீரு. யாரை யார் ஜெயிக்கிறது. . .? அந்த வரிய மாத்தி வேற எழுதி ரெகார்ட் பண்ணும். அப்பத்தான் இந்த பாட்ட நீர் விழாவில் போட நான் சம்மதிப்பேன்' என்று உறுதியாக கூறி விட்டார்.


கோடிக் கோடி கனவோடு


கோடம்பாக்கம் வந்தாய்


கண்ணதாசன் கொடியோடு


கொடிநாட்டி நின்றாய்'


என்று மாற்றி பதிவு செய்தேன்.


தனக்கு எதிராக கடைவிரித்திருந்த கண்ணதாசன் மீதே இவ்வளவு பக்தி என்றால், மற்ற முன்னோர்கள் மீது வாலி வைத்திருந்த மரியாதையை என்னவென்று சொல்வது. . .!


எதிலும் எப்போதும் முதலிடம்:

கவிஞர் வாலியிடம் எங்களை ஈர்த்த இன்னொரு அம்சம் அவரிடம் பொருளாதாரத்தைப் பெருக்கும் ஆசை பூஜ்யமாக இருந்தது தான். பாட்டுக்கு கறாராக பணம் வாங்க வேண்டும். பணம் பெற்ற பதினைந்தாம் நாள் பாட்டைக் கொடுத்து விட வேண்டும். வாங்கிய பணத்தை வங்கியில் போட்டுச் செலவழிக்க வேண்டும், அவ்வளவுதான். கோடம்பாக்கத்தில் அதிகச் சம்பளம் (ஒரு பாட்டுக்கு ஒன்றரை முதல் இரண்டு லட்சம்) வாங்கிய பாடலாசிரியர் அவர்தான். ஆனால் அங்கே நிலம் வாங்கினால் பிறகு விலை கூடுமே, இங்கே ஒரு வீட்டை வாங்கிப் போட்டால் வாடகை வருமே என்றெல்லாம் துளியும் எண்ணாமல், குடியிருக்கும் ஒரு வீடும், வங்கியிலிருந்து எடுக்கும் பணமும் வாழ்க்கைக்குப் போதும், இசைப்பாடலும், இலக்கியமும் மட்டுமே தமது நோக்கம் என்று வாழ்ந்தவர் அவர்.

கலை உலகவாதிகள் காவியக் கவிஞரிடம் கற்க வேண்டிய ஒரு அம்சம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து இயக்கத்தினர்களோடும் பழகிய அவர் பண்புதான். அவர் பாடல்களுக்குள்தான் அரசியல் இருக்குமே தவிர அவருக்குள் ஒரு நாள் அரசியல் இருந்ததே கிடையாது என்பது அவரை புரிந்தவர்களுக்குப் புரியும். ஆண்டவனே நீங்கள் கட்சியில் சேர்ந்து ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுங்கள் என்று எம்.ஜி.ஆர். சொன்னபோதே சிரித்துக் கொண்டே தவிர்த்தவர் ஆயிற்றே. வாலியை மனந்திறந்து வாழ்த்துவதற்குப் பதில் மறைந்திருந்து தாக்கியவர்களும் உண்டு. அவரை நேரில் பார்த்து நிஜத்தை தெரிந்து கொள்ளாதவர்கள் தான் அவர்கள். ஒன்று மட்டும் உறுதி. வாலியின் பெயரை என் போன்றவர்களுக்குள் வலம் வரச் செய்வது அவர் மடியிலிருந்த பாட்டுக்கள் மட்டுமல்ல அவர் மனதிலிருந்த பண்புகளும்தான். இந்த முதல் நினைவு நாளில் அந்த மனிதர் போன பாதையை மறந்து போகாத மனம் ததும்ப கண்ணீர் துளிகளோடு தொடர்கிறோம் அவரது காலடிகளை.

- நெல்லை ஜெயந்தா, கவிஞர், 99406 97959.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
19-ஜூலை-201401:51:02 IST Report Abuse
ஏடு கொண்டலு எங்கேயோ கேட்டது. யாரோ ஒருவர், வாலியை மட்டம் தட்டும் நோக்கத்துடன் அவரிடம், "அதென்னய்யா பேரு, வாலி?" என்று கேட்டாராம். வாலி அதற்கு, "இராமாயணத்திலே வாலி போர் செய்யும்போது, தன்னுடன் போரிடுவோரின் பாதி வலிமையை அவரிடமிருந்து பெறவல்லவன். நானும் என்னுடன் பேசுவோரின் இலக்கிய அறிவில் பாதியை அவரிடமிருந்து பெறவேண்டும் என்ற எண்ணத்தில் வைத்துக் கொண்ட புனைபெயர் இது." என்று பதிலளித்தார். கேட்டவர் சும்மா விடாமல், "நீ அப்படி ஒன்றும் இலக்கிய அறிவைப் பெற்றதாகத் தெரியவில்லையே" என்றார். வாலி சும்மா இருப்பாரா? "நான் பேசுவோரிடம் அது இருந்தால் தானே அதில் பாதி எனக்கு வர?" என்றாராம். கவிஞர்களிலே பிஞ்சென்றும் மூப்பென்றும் கிடையாது. அவர்களிடம் வாயைக் கொடுத்தால் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியது தான்...
Rate this:
Share this comment
Cancel
Nagarajan - chennai,இந்தியா
19-ஜூலை-201401:10:38 IST Report Abuse
Nagarajan கோச்சடையன் பாடல் வாலி யாராலும் இது போல் ஒரு கவிதை இப்பொழுது எழுத முடியாது. ஆதி அந்தம் ஆடி வந்த ஜோதி இந்த அழகன் வானம் தாண்டி வையம் கொண்ட ஏகன் போன்ற மலர்தான் இவள் அல்லவா
Rate this:
Share this comment
Cancel
ilicha vaayan - chennai,இந்தியா
18-ஜூலை-201423:51:34 IST Report Abuse
ilicha vaayan வாலியை நன்கு பாராட்டியவர் எம் ஜி ஆர் அவர்கள் தான். ஆனால் வாலி அவர்கள் கருணாநிதிக்கு தனது நன்றியைக் காட்டினார். அரசியல் தவிர்த்து பார்த்தல் வாலி மிக சிறந்த கவி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X