கருணா மூர்த்திகளே!| Uratha sindhanai | Dinamalar

கருணா மூர்த்திகளே!

Updated : ஜூலை 19, 2014 | Added : ஜூலை 19, 2014 | கருத்துகள் (6)
Share
கருணா மூர்த்திகளே!

'வாயில்லா ஜீவன்கள் வதைபடக் கூடாது' என்ற உயர்ந்த நோக்கத்தில், கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கும், ரேக்ளா ரேசுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.தமிழக அரசியல் கட்சித்தலைவர்களும், போட்டி நடத்துபவர்களும், உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தமிழக அரசு சார்பில், இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'மனிதர்களுக்கு மட்டும் தான் அடிப்படை உரிமை உள்ளது என, கூறமுடியாது; விலங்குகளுக்கும் உள்ளது. அந்த உரிமையை மீறி, விலங்குகளை துன்புறுத்த முடியாது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளும், ரேக்ளா ரேஸ் என்று அழைக்கப்படும், மாட்டு வண்டிப் போட்டிகளும் நடத்த தடை விதிக்கப்படுகிறது' என்று, தெளிவாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இத்தகைய போட்டிகள் நடைபெறாமல் தடுக்க, தேவையான கண்காணிப்பு மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ள, விலங்குகள் நல வாரியம் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வாயில்லா ஜீவன்களின் மீது, நீதிபதிகளின் பரிவைப் பார்க்கும்போது, அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு, சிரம் தாழ்த்தி அவர்களது தீர்ப்பை ஏற்கத் தோன்றுகிறது.அதே சமயம், நீதிபதிகளின் பரிவும், கருணையும், ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கும், ரேக்ளா ரேசில் ஓடும் மாடுகளுக்கும் மட்டும் தானா, ஏனைய ஜீவராசிகள் எல்லாம் பாவாத்மாக்களா என்ற, கேள்வியும் மனதில் எழுகிறது. 'ஜல்லிக்கட்டு நடத்தினால், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன; காளைகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன; பார்வையாளர்களும், போட்டியில் பங்கேற்பவர்களும் காயப்படுகின்றனர்' என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மீது, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றுவது, காளைகளின் வாலை முறுக்குவது போன்ற பல சித்ரவதைகளுக்கு, காளைகள் உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

ஜல்லிக்கட்டினால் உயிர்சேதம் ஏற்படுவது, மனிதர்களுக்குத்தானே தவிர, மாடுகளுக்கு அல்ல.இதுவரை நடைபெற்ற எந்த ஜல்லிக்கட்டிலாவது, ஜல்லிக்கட்டுக்காளை கொல்லப்பட்டதாக தகவல் உண்டா? மாடு முட்டி, குடல் சரிந்து, வீரர்கள்தான் விழுப்புண்களும், வீர மரணமும் அடைந்திருக்கிறார்களே தவிர, மாடுகள் மரணமடைந்ததாக வரலாறு இல்லை.ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேசுகளில் பங்கேற்கும் மாடுகள், ஆண்டில் ஒரு சில நாட்கள் தான் ஈடுபடுகின்றன. ஏனைய நாட்களில் அவற்றின் எஜமானர்களால் அவைகளுக்கு ராஜ உபசாரம் தான். போட்டியில் தோற்றால் ஒருவேளை நாலுசாத்து சாத்துவார்களோ என்னமோ? ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் ரேக்ளா ரேஸ் மாடுகள் படும் அவதியைக் கண்டு கண்கலங்கும் நீதிபதிகளுக்கு, வண்டி மாடுகளும், ஏனைய பிராணிகளும் படும் அவதி, தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.டயர் வண்டிகளில் மாடுகளைப் பூட்டி, அந்த வண்டியில் மூட்டை மூட்டையாக பாரத்தை ஏற்றி,
அவை அதை இழுக்க முடியாமல் முக்கி, முனகி வாயில் நுரை தள்ள, கால்கள் தடுமாறும் போது, வண்டி ஓட்டி சவுக்கால் அந்த மாடுகளை விளாசும் காட்சிகளை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டதில்லையோ? சமயங்களில் அவை பாரத்தை இழுக்க முடியாமல் படுத்து விடும்போது, வண்டியோட்டி அவற்றின் வாலை முறுக்க மாட்டார். அவரது பற்களால் கடித்துக் குதறுவார்.
இந்த வண்டி மாடுகள் ஆண்டிற்கு, 364 நாட்களும் அவதிப்படுபவை. மாட்டுப் பொங்கல் அன்று மட்டும் தான் அவைகளுக்கு விடுதலை. அன்றும் வண்டியில் மூட்டைகள் தான் ஏற்றப்பட்டிருக்காதே தவிர, வண்டியோட்டியின் குடும்பமே அந்த வண்டியில் உட்கார்ந்து ஊர்வலம் போகும்.

உச்ச நீதிமன்ற, 'பெஞ்ச்' இந்த வண்டிமாடுகளுக்கும், விமோசனம் வழங்குமா? மாடுகள் வண்டியிழுக்கக் கூடாது என்று தடை விதித்தால், அந்த வண்டியோட்டிகளின் பிழைப்பு நாறிப்போகும்.
அரசும் உரிய நிவாரணம் (கைரிக்ஷாக்களை ஒழிக்க கருணாநிதி சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கியது மாதிரி) அளித்த பிறகே மாடுகளுக்கு விடுதலை வழங்க வேண்டும்.அதேபோல, நாட்டில் பல இடங்களில், 'ஜட்கா வண்டி' என்று அழைக்கப்படும் குதிரை வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கின்றன.எலும்பும், தோலுமாய் சனிக்கிழமை சாகும் கோலத்தில் உள்ள அவை, வண்டியில் அமர்ந்திருக்கும் மனிதர்களை, விதியை நொந்தபடி இழுத்து போகும் காட்சி, ரேக்ளா ரேசை விடவும், ஜல்லிக்கட்டு இம்சையை விடவும் கொடுமையானது. கனம் நீதிபதிகளின் பரிவான பார்வை, இந்த பாவப்பட்ட பரிகளின் மீதும் பட்டு, அவைகளுக்கும் விமோசனம் கிட்ட வேண்டும்.

ஜட்கா வண்டிக்குதிரைகள் ஒரு மாதிரி என்றால், ரேஸ் குதிரைகள் வேறுமாதிரி. ரேஸ் குதிரைகளும், ஜல்லிக்கட்டுக் காளைகளைப் போலத்தான்.ஜல்லிக்கட்டு காளைகளை மனிதர்கள் திமிலைப்பிடித்து அடக்க வேண்டும். ரேஸ் குதிரைகளோ, ஏனைய சக குதிரைகளோடு வேகமாக ஓடி பந்தயத்தில் வெற்றி பெற்று, அதன் உரிமையாளருக்கு கோப்பையையும், பரிசுப் பணத்தையும் பெற்றுத்தர வேண்டும்.அக்குதிரைகளின் மீது அமர்ந்திருக்கும் ஜாக்கி, குதிரை வேகமாக ஓட, அவைகளின் முதுகில் விளாசும் சவுக்கடிகளில் ஒன்று நம் உடலில் பட்டாலும், தோல் பிய்ந்து, சதையும், ரத்தமும் தெளித்து வரும்.ஓடுபாதையில் ஓடும் குதிரை தப்பித்தவறி தடுக்கி விழுந்து தொலைத்து, காலை ஒடித்துக் கொண்டால், அது எவ்வளவு கோடி மதிப்புள்ள குதிரையானாலும், அதற்கு, 'ட்ரீட்மென்ட்' கிடையாது. நெற்றிப்பொட்டில் துப்பாக்கியால் சுட்டு கொலை தான். ஜல்லிக்கட்டு காளைக்கு காட்டும் அடிப்படை உரிமை, பந்தயத்தில் ஓடும் ரேஸ் குதிரைகளுக்கும் பொருந்தும் அல்லவா? குதிரை பந்தயங்களையும் தடை செய்ய, உச்ச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?

காவல் துறைகளில் துப்பறியும் நாய்கள் படும்பாடுகளை, விலங்கு கள் நல வாரியமும், மேனகாவும் எப்படி இதுவரை கண்டு கொள்ளாமல் இருந்தனர்?உச்ச நீதிமன்றம் அந்த துப்பறியும் நாய்களுக்கும், விடுதலை பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோர்ட்டார் அவர்களே!அன்றாடம் எத்தனை எத்தனை கோடி கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் உணவுக்காக கொல்லப்படுகின்றன? ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், ரேக்ளா ரேசில் ஓடும் மாடுகளுக்கும் உள்ள அடிப்படை உரிமை, இறைச்சிக்காகக் கொல்லப்படும், கோழிகளுக்கும், ஆடுகளுக்கும், மாடுகளுக்கும், ஒட்டகங்களுக்கும், மீன்களுக்கும் உண்டா, இல்லையா? அவைகளும் உயிர்வாழ உரிமை உண்டா, இல்லையா?உச்ச நீதிமன்ற கருணைமூர்த்திகளின் கடைக்கண்பார்வை இவ்வெளிய உயிர்களை ரட்சிக்குமா? ரட்சித்து காப்பாற்றி உயிர்பிச்சை வழங்குமா?
இ-மெயில்: dmrcni@dinamalar.in

- எஸ்.ராமசுப்ரமணியன்
-எழுத்தாளர் / சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X