புன்னைநல்லூர் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்| Dinamalar

புன்னைநல்லூர் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்

Added : ஜூலை 20, 2014 | கருத்துகள் (2) | |
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ஜனாதிபதிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.தஞ்சை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில், அம்மன், புற்று வடிவில், பக்தர்களுக்கு
புன்னைநல்லூர் கோவிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில், இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, ஜனாதிபதிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலில், அம்மன், புற்று வடிவில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முத்துமாரியம்மன் சன்னதி அருகில், துர்க்கை அம்மனுக்கும், தனி சன்னதி உள்ளது. இரு அம்மனும், அருகே எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது, இக்கோவிலின் தனிச்சிறப்பு. சிறிய அளவில், கிராமக் கோவிலாக இருந்த முத்துமாரியம்மனுக்கு, சோழர் காலத்தில் மூலஸ்தான கோபுரம் மற்றும் ராஜகோபுரத்துடன் பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டது. தற்போது, இந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில், இக்கோவில் உள்ளது. புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலின் மகத்துவத்தை அறிந்த, இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று, கோவிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தார். நேற்று பிற்பகல், 2.05 மணிக்கு, கோவிலுக்குச் சென்ற ஜனாதிபதிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோவில் உள் பிரகாரத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அங்கு தங்கக் கவசத்தில் அருள்பாலித்த முத்துமாரியம்மனை தரிசித்தார். தொடர்ந்து, முத்துமாரியம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு, தான் கொண்டு வந்த சிகப்பு நிற பட்டுப் புடவைகளை காணிக்கையாக வழங்கினார். அந்த புடவைகள், அம்மனுக்கு சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. அம்மனை வணங்கிய பின், 2.40 மணிக்கு, கோவில் உள் பிரகாரத்தை விட்டு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியேறினார். ஜனாதிபதியுடன், தமிழக கவர்னர் ரோசய்யா, முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் கோபால்சாமி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாவட்ட கலெக்டர் சுப்பையன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால் ஆகியோர் வந்திருந்தனர். முன்னதாக, திருச்சியிலிருந்து, தனி ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை விமானப்படை நிலையத்துக்கு வந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை, தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் வரவேற்றனர்.


ஜனாதிபதி வருகை: 4 அடுக்கு பாதுகாப்பு



* ஜனாதிபதி வருகையையொட்டி, தஞ்சை விமானப்படை மைதானம் முதல், புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவில் வரை, நான்கு அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


* தஞ்சை டி.ஐ.ஜி., சஞ்சய் குமார் தலைமையில், 1,000 போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, அரசுத் துறை இணை செயலாளர் அனுஜார்ஜ், உளவுத்துறை டி.ஜி.பி., அம்ரேஸ் பூஜாரி ஆகியோர், அவ்வப்போது கண்காணித்தனர். கோவிலை சுற்றி கேமராக்கள் பொருத்தப்பட்டு, போலீசார் கண்காணித்தனர்.


* கோவில் நுழைவு வாயில் முன், ஜனாதிபதியை வரவேற்க, முன்னாள் மத்திய நிதித்துறை செயலாளர் கோபால்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, அனுமதி வழங்கப்பட்டது.


* ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தஞ்சை விமானப்படை மைதானத்தில் இருந்து புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு, அரசு காரில் (ஸ்கார்பியோ) வந்திறங்கினார். அவரது காரை பின் தொடர்ந்து, பாதுகாப்பு படையினரின் கார்கள் அணிவகுத்து வந்தன.


* ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, நேற்று காலை, 10.30 முதல் மாலை, 3 மணி வரை, பக்தர்கள், கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X