தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலய திருவிழா, ஜூலை 26 ல் கொடியேற்றத்துடன் துவங்கி, ஆக., 5 ல் நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடியில் 400 ஆண்டுகள் பழமையான பனிமயமாதா ஆலயத்தில், ஆண்டு தோறும் ஜூலை 26 ல், கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கும். இதில் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி ஜூலை 25 ல், சின்ன மாதா கோயிலில் இருந்து காணிக்கை பவனி மாலை 5:00 மணிக்கு துவங்குகிறது. 26 ல் காலை, 7:30 மணிக்கு கூட்டுத்திருப்பலி முடிந்தவுடன், காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. இதில் ஆயர் இவான் அம்புரோஸ் பங்கேற்று, ஜான் கோஸ்தா அன்னைக்கு பொன் மகுடம் சூட்டுகிறார். திருவிழா நாட்களில் தினமும் காலை 4:30 க்கு ஜெபமாலை, 5:00 க்கு முதல் திருப்பலி, 5:45 க்கு இரண்டாம் திருப்பலி, பகல் 12:00 க்கு இரண்டாவது ஜெபமாலை, மாலை 3:00 க்கு மூன்றாவது ஜெபமாலை, மறையுரை ஆசீர், இரவு 7:15 க்கு ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடை பெறும். ஆக., 5 ல் நடக்கும் நிகழ்ச்சியில் மதுரை ஆயர் பீட்டர் பெர்ணான்டோ மற்றும் ஏராளமான பாதிரியார்கள், பங்கு மக்கள் கலந்து கொள்கின்றனர். பனிமய மாதா ஆலயபாதிரியார் லெரின் டிரோஸ் கூறியதாவது: இந்த ஆலயத்தின் 432 வது ஆண்டு திருவிழா நடக்கவுள்ளது. ஜூலை 25 முதல் ஆக., 5 வரை 12 நாட்களும் சிறப்பு திருப்பலி மறையுரை நடக்கவுள்ளது. இது ஜாதி, மத, சமயத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் கொண்டாடும் ஊர்த்திருவிழா. இதில் 22 பங்கு மக்கள் பங்கு கொள்கின்றனர். வெளி நாடுகளில் இருந்தும் திருவிழாவிற்கு பக்தர்கள் வருகை தருவார்கள். கொடியேற்ற தினத்தில் வான்கோ ராணி என்ற பெயரில் அன்னையின் பாடல்கள் அடங்கிய 'சிடி' வெளியிடப்படவுள்ளது. பழைய புலவர்களின் கவிதைகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படவுள்ளது, என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE