சினிமா ஆசையை அடக்கிய இலக்கியம்- மணிகண்டன்

Updated : ஜூலை 22, 2014 | Added : ஜூலை 22, 2014 | கருத்துகள் (1)
Advertisement
கவிதை எழுதும் கம்ப்யூட்டர் கரங்கள் இவருடையவை. ஆம், உண்மையில் இவர் ஒரு தொழில் ரீதியான கம்ப்யூட்டர் பொறியாளர். 32 வயது இளைஞராக இருந்தும், தமிழ் இலக்கியத்தின் ஆழமான வாசிப்பாளி. 'ஏசி' அறைக்குள் தானுண்டு, தன் கம்ப்யூட்டர் உண்டு இருக்காமல், ஒரு எழுத்தாளராக ஜொலிக்கிறார். கவிதைத் தொகுப்பு, சிறுகதை, கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டவர். இலக்கியம் மட்டுமல்லாமல், www.nisaptham.com வலைப்பூ
சினிமா ஆசையை அடக்கிய இலக்கியம்- மணிகண்டன்

கவிதை எழுதும் கம்ப்யூட்டர் கரங்கள் இவருடையவை. ஆம், உண்மையில் இவர் ஒரு தொழில் ரீதியான கம்ப்யூட்டர் பொறியாளர். 32 வயது இளைஞராக இருந்தும், தமிழ் இலக்கியத்தின் ஆழமான வாசிப்பாளி. 'ஏசி' அறைக்குள் தானுண்டு, தன் கம்ப்யூட்டர் உண்டு இருக்காமல், ஒரு எழுத்தாளராக ஜொலிக்கிறார். கவிதைத் தொகுப்பு, சிறுகதை, கட்டுரை தொகுப்புகளை வெளியிட்டவர். இலக்கியம் மட்டுமல்லாமல், www.nisaptham.com வலைப்பூ மூலம் சமூக, அரசியல் விமர்சனங்களையும் எழுதி வருபவர்.


இவருடன் நமது சந்திப்பு.

பெங்களூருவாசியான உங்களது இளமைப் பருவம்...?
பிறந்து வளர்ந்தது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்திற்கு அருகில் இருக்கும் கரட்டடிபாளையம் என்ற கிராமம். அம்மா அப்பா இருவருமே அரசுப்பணியாளர்களாக இருந்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் படிப்பு. தமிழ் வழிக்கல்வி. அங்கிருந்த தமிழாசிரியர்களையும், தலைமையாசிரியர் இனியன். கோவிந்தராஜனையும் மறக்கவே முடியாது. பொறியியல் கல்வியை சேலத்திலும், எம்.டெக் படிப்பை வேலூரிலும் முடித்துவிட்டு சில ஆண்டுகள் ஐதராபாத்தில் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு வேலை நிமித்தமாக பெங்களூருவாசி. என்றாலும் அடிக்கடி ஊருக்குச் சென்று வருவதன் மூலமாக வேரை இழந்துவிடாமல் இருக்கிறேன்.
ஒரு ஐ.டி. இன்ஜினியருக்குள் கவிஞர் உருவானது எப்படி?
எம்.டெக்., புராஜக்ட் செய்வதற்காக, சென்னையில் ஒரு ஆண்டு இருந்த போதுதான் இலக்கியம் அறிமுகமானது. முதலில் சினிமாக் கவிஞர்களைத் தேடிச் சென்று பார்த்து வருவேன். எப்படியும் சினிமாவில் பாட்டு எழுதிவிட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஒவ்வொரு சனி, ஞாயிறுகளிலும் இந்த பயணம் இருக்கும். நிறைய பாடலாசிரியர்களைச் சந்தித்தேன். அலைந்து திரிந்தேன் என்றும் சொல்லலாம். ஒரு கோடை காலத்தின் மதியத்தில் அப்படித் திரிந்து கொண்டிருந்த போது, எதேச்சையாக கவிஞர். தமிழச்சி தங்க பாண்டியனின் புத்தக விழா ஒன்றில் மனுஷ்ய புத்திரனைச் சந்தித்தேன். அவர்தான் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். அவர் வழியாக நல்ல கவிதைகள் அறிமுகமாயின. இலக்கிய ஆர்வம் வந்த பிறகு, சினிமா ஆசை அடங்கி விட்டது. இதனால் சினிமாக் கனவை விட்டுவிட்டு கவிதைகள்எழுதுவதோடு நிறுத்திக் கொண்டேன். 'கண்ணாடியில் நகரும் வெயில்' தொகுப்புதான், எனது முதல் கவிதைத் தொகுப்பு. எழுத்தாளர் சுஜாதா கடைசியாக வெளியிட்ட புத்தகமும் அது தான். சமீபமாக கவிதைகள் எழுதுவதில்லை. உரைநடை எழுதுவது தான் விருப்பமாக இருக்கிறது.


இளம் எழுத்தாளர்கள்குறைவதேன்?

தமிழ் இலக்கிய உலகில், இளம் எழுத்தாளர்கள்குறைந்து வருகின்றனரே...?
கவிதை, சிறுகதை, நாவல் என எல்லாவற்றிலுமே இளைஞர்கள் தீவிரமாக எழுதுகின்றனர். ஆனால் வெகுஜன ஊடகங்களில், அவர்களை அதிகமாகத் தெரிவதில்லை. இன்னும் ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் சென்றால், அவர்களின் பெயர் பரவலாகத் தெரிய ஆரம்பிக்கும் என நம்புகிறேன்.
பணிப்பளுவுக்கு இடையே எப்படி எழுத முடிகிறது...
ஐ.டி.,யில் பணிபுரிவதால் வேலைப்பளு அதிகம் தான். எப்படியும் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் அலுவலகத்திற்காக செலவிட வேண்டி இருக்கிறது. இருப்பினும் மீதி பன்னிரெண்டு மணி நேரங்கள் இருக்கிறதே. அதில் இரண்டு மணி நேரங்களையாவது மகனுக்காக ஒதுக்கிவிடுகிறேன். அவனுக்கு ஐந்து வயதாகிறது. அவனுக்கு நிறைய கதைகள் சொல்கிறேன். இப்பொழுது அவனும் கதை சொல்லப் பழகியிருக்கிறான். அவனுக்கு ஒதுக்கியது போக இரண்டு மணி நேரம், தேர்ந்தெடுத்த புத்தகங்களாக வாசிக்கிறேன். பிறகு கொஞ்சமாகத் தூங்குகிறேன். அதிகபட்சம் ஐந்து அல்லது ஆறு மணி நேர தூக்கம் தான். இவற்றிற்கிடையே எழுதுவதையும் செய்கிறேன். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் இரண்டு பக்கங்களாவது எழுதாவிட்டால் தூக்கம் வராது. எழுத்தும் வாசிப்பும் ஒருவித போதையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள், நான்எழுதுவதற்கான சூழலை உருவாக்கித் தருகிறார்கள். அதனால் சந்தோஷமாக எழுத முடிகிறது.


வாசிக்கும் பழக்கம் குறைகிறதா?

வாசிக்கும் பழக்கம் தமிழில் குறைந்து வருகிறதா? "ஆம்' என்றால் ஏன்?
சரியாகத் தெரியவில்லை. புத்தகங்களின் விற்பனையைப் பார்க்கும் போது வாசிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதாக தெரிகிறது. புத்தகக் கண்காட்சிகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. இணையம் வழியாக வாசிப்பவர்களும் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப் படிக்கத் தெரிந்த மக்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், புத்தகம் வாசிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றுதான் நினைக்கிறேன்.
நீங்கள் பெற்ற விருதுகள்...
www.nisaptham.com தளத்திற்காக சென்ற ஆண்டு சுஜாதா இணைய விருது கொடுத்தார்கள். மற்றபடி வாசகர்களும், ஊடகங்களும் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள், என்பதே மகிழ்ச்சிக்குரிய விஷயம். என்னளவில் அதுவே பெரிய விருதுதான். முழுமையான ஈடுபாட்டோடு எழுதிக் கொண்டிருந்தால் போதும். சரியான நேரத்தில் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறேன்.
நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் பற்றி...
இரண்டு கவிதைத் தொகுப்புகள், 'கண்ணாடியில் நகரும் வெயில்', 'என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி' வெளிவந்திருக்கின்றன. ஒரு கட்டுரைத் தொகுப்பும் வெளி வந்திருக்கிறது 'சைபர் சாத்தான்கள்'. சைபர் கிரைம் பற்றி சாமானிய மனிதர்களுக்கு புரியும் படியான எளிய கட்டுரைகள் அடங்கியத் தொகுப்பு இது. இந்த வருடம் ஒரு சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தது. 'லிண்ட்சே லோஹன் தீ/ணி மாரியப்பன்' என்ற தலைப்பில்.
தொடர்புக்கு போன்: 096633 03156

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
05-ஆக-201407:57:37 IST Report Abuse
Vaduvooraan இளைய தலை முறை எழுத்தாளர்கள் மத்தியில் கவனிக்கப் படவேண்டிய பாசாங்குகள் அற்ற ஒரு எழுத்தாளர். சுஜாதா போலவே எதையுமே எளிதாகவும் சுவாரசியமாகவும் வழங்குகிறார். இவர் பற்றிய தகவல்களை அனைத்து வாசகர்களும் அறியும் வண்ணம் நேர்காணலை வெளியிட்ட தினமலருக்கு பாராட்டுகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X