போலீஸ்காரங்க கொடுக்குறாங்க துட்டு வாங்குறாங்க திட்டு!| Dinamalar

போலீஸ்காரங்க கொடுக்குறாங்க துட்டு வாங்குறாங்க திட்டு!

Added : ஜூலை 22, 2014
Share
''ஏய்! எங்கடி இருக்க...எனக்கு இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை முடிஞ்சது. வெளியதான் நிக்கிறேன். பசி உசிரு போகுது. சீக்கிரம் வா...!,'' என்று அலைபேசியில் மித்ராவுக்கு அன்புக்கட்டளை போட்டாள் சித்ரா. அடுத்த பத்தாவது நிமிடத்தில், 'டியோ'வில் பறந்து வந்து, ஆஜரானாள் மித்ரா. ''அம்மாடி...! வந்துட்டியா...? நீ வரலேன்னா, இந்த ஏரியாவுல இருக்கிற 'மெஸ்'க்கு நானே தனியா
போலீஸ்காரங்க கொடுக்குறாங்க துட்டு வாங்குறாங்க திட்டு!

''ஏய்! எங்கடி இருக்க...எனக்கு


இன்கம்டாக்ஸ் ஆபீஸ்ல வேலை முடிஞ்சது. வெளியதான் நிக்கிறேன். பசி உசிரு போகுது. சீக்கிரம் வா...!,'' என்று அலைபேசியில் மித்ராவுக்கு அன்புக்கட்டளை போட்டாள் சித்ரா. அடுத்த பத்தாவது நிமிடத்தில், 'டியோ'வில் பறந்து வந்து, ஆஜரானாள் மித்ரா.


''அம்மாடி...! வந்துட்டியா...?


நீ வரலேன்னா, இந்த ஏரியாவுல இருக்கிற 'மெஸ்'க்கு நானே தனியா சாப்பிடப்போயிரலாம்னு நெனைச்சேன்...!'' என்றாள் சித்ரா.


''அடேங்கப்பா! அந்த மெஸ்சுல சாப்பிடுற அளவுக்கு, வசதியாயிட்டயா?,'' என்றாள் மித்ரா.


''என்னடி சொல்ற? மெஸ்சுல சாப்பிடுறதுக்கு வசதி வேற வேணுமா?,''


''ஆமாக்கா! அதுதான், கோயம்புத்தூர்ல லஞ்சத்துல கொழிக்கிற ஆபீசர்கள் 'லஞ்ச்' சாப்பிடுற இடம்; பாக்கிறதுக்கு ரொம்ப சின்னதா இருந்தாலும், 'ரேட்' எல்லாம் ஃபைவ் ஸ்டார் ரேஞ்சுலதான் இருக்கும். அங்கதான், பல விஷயங்களுக்கு பேரம், டீலிங் எல்லாம் நடக்குதாம்; என்னோட காலேஜ்ல படிச்ச பசங்க, நாலு பேரு, விபரம் தெரியாம, அங்க போய் சாப்பிட்டு மெரண்டுட்டானுக; அங்க சாப்பிட்ட மீன் முள்ளுல பர்ஸ் கிழிஞ்சதுமாதிரி, 'பேஸ்புக்'லயும், 'வாட்ஸ் அப்'லயும் படம் போட்ருக்கானுக. விலைப்பட்டியலே போடாம, பர்சைக் காலி பண்ணதுக்காக, கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போடப்போறானுகளாம்,''


''அது சரி! 'வளர்'ற பசங்க, 'மதி'யோட மோதுறானுக. இதே ஊர்லதான், சாந்தி சோஷியல் டிரஸ்ட் சார்புல, 25 ரூபாய்க்குக் கொடுத்த சூப்பர் சாப்பாடை, மறுபடியும் 20 ரூபாய்ன்னு குறைச்சு இருக்காங்க; ஆனா, சிட்டிக்குள்ள சின்னச் சின்ன ஓட்டல்ல எல்லாம் தாறுமாறா 'ரேட்' வச்சிருக்காங்க. சரி... நம்ம ரேஞ்சுக்குத் தகுந்தது மாதிரி, வேற ஏதாவது ஓட்டலுக்கு வண்டியை விடு,'' என்று சொல்லி விட்டு, வண்டியில் பின்னால் ஏறினாள் சித்ரா.


லட்சுமி மில்ஸ் சந்திப்பிலுள்ள ஓட்டலுக்குப் போய், 'ஆர்டர்' கொடுத்து விட்டுக் காத்திருக்கும் போது, பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.


''அக்கா! ஆவின் பூத் பேர்ல ஊரெல்லாம் ஆக்கிரமிப்புன்னு அடிக்கடி நியூஸ் பாத்திருப்பியே; ஒவ்வொரு கடைக்கும் எல்லாச் செலவும் போக, ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபா நிக்குதாம்; அதுல, ரெண்டாயிரம் ரூபா, ஆவின் முக்கியப் பொறுப்புல இருக்கிற ஒரு அரசியல்வாதிக்கும், அதிகாரிக்கும் 'மாமூலா' போகுதாம். கார்ப்பரேஷன், ஹைவேஸ் இடத்துல வைக்கிறதுக்கு, அந்தந்த ஆபீசர்களுக்கு தனியா கவனிக்கணுமாம்,''


''இப்பிடி எல்லாரும் வாங்குறதாலதான், அவுங்க எல்லாம் 'சி.எம்.க்கே வேணும்னாலும் பெட்டிஷன் போடுங்க; எங்களை யாரும் அசைக்க முடியாது'ன்னு சவால் விடுறாங்க!,''


''நீ சொல்றது கரெக்ட்தான்க்கா! டி.எம்.கே., பீரியட்ல, செம்மொழி மாநாட்டை ஒட்டி, மதுக்கரை மார்க்கெட் ரோட்ல, அழகான பூங்கா அமைச்சாங்க. இந்த ஆட்சியில, அந்தப் பூங்காவுக்கு முன்னால ஆக்கிரமிச்சு, ஆவின் பூத் போட்ருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''ஆக்கிரமிப்புன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது; கவுண்டம்பாளையத்துல ஜீவா நகர்ல இருக்கிற ஆக்கிரமிப்பு வீடுகளை 'சர்வே' பண்றதுக்காக, கார்ப்பரேஷன்காரங்க போயிருக்காங்க; அந்த ஏரியா ஆளும்கட்சி கவுன்சிலரு, 'யாரைக்கேட்டு 'சர்வே' எடுக்குறீங்க. ஒழுங்கா திரும்பிப் போயிருங்க. இல்லேன்னா நடக்கிறதே வேற'ன்னு மெரட்டிருக்காரு. அவுங்களும், உடனே வந்துட்டாங்களாம். இது எப்பிடி இருக்கு?,''


''மேயர் பொறுப்புல, 'பவர்ஃபுல்'லா ஆள் இல்லாததால, கொஞ்ச நாளா ஆளும்கட்சி கவுன்சிலர்கள் சிலரோட ஆட்டம் ஜாஸ்தியாயிருச்சுன்னு கார்ப்பரேஷன் ஆபீசர்கள் புலம்புறாங்க,''


''கார்ப்பரேஷன்னு சொன்னதும் ஞாபகம் வருது. அன்னிக்கு நம்ம பேசுனது மாதிரி, தஞ்சாவூர்ல இருந்தவரு, பெரிய 'அமவுன்ட்'டைக் கொடுத்து, 'டவுன் பிளானிங்'ல முக்கியப் பொறுப்பை 'வாங்கிட்டு' வந்துட்டாரு. அநேகமா, சீக்கிரமே வசூல் வேட்டைய ஆரம்பிச்சிருவார்ன்னு நினைக்கிறேன்,''


''எனக்கென்னவோ, அப்பிடித் தகவல் இல்லை; கமிஷனர், டெபுடி கமிஷனர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காங்க, வசூல் பண்ணுனா மாட்டிக்குவாரே. அதனால, அடக்கி வாசிப்பார்ன்னுதான் சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.


''அப்பிடி இருந்தா, எல்லாருக்கும் நல்லதுதான்; கார்ப்பரேஷன் கதைய விடு...எல்.பி.ஏ.,வுல முக்கிய போஸ்ட்டிங்குக்கு 'பொறுப்பா' வர்றதுக்கு, 30 லட்சம், 40 லட்சம்னு பேரம் ஓடுனதுல, 'மதி'யுள்ள ஒரு ஆபீசர், ஏலத்துல ஜெயிச்சு, போஸ்ட்டிங் வாங்கிட்டு வந்துட்டாரு. அவருக்கு வலது கரமா இருந்தவரும், சிவகங்கையில இருந்து சீக்கிரமே திரும்ப வரப்போறாராம்,'' என்றாள் மித்ரா.


''அடடே! அந்த கூட்டணியா?


இவரு 'பொறுப்புல' இருந்தப்பதான, பங்கஜ் குமார் பன்சால் வந்து, ஆபீஸ்ல 'ரெய்டு' விட்டு, 19 பேரையும் கூண்டோடு மாத்துனாரு. அப்புறம் எப்பிடி திரும்பவும், அவரை இங்க போடுறாங்க?,'' என்று கொந்தளித்தாள் சித்ரா.


''பணம் பத்தும் செய்யும்னு சும்மாவா சொன்னாங்க! அதை விடுக்கா...! ஜி.எச்.,ல ஒரு டாக்டர் அனுப்புன பெட்டிஷனை வச்சு, டைரக்டர் ஆபீசுல இருந்து, நாலு பெரிய ஆபீசர்கள் வந்து விசாரணை நடத்திட்டுப் போயிருக்காங்க. அந்த பெட்டிஷன்ல, ஒருத்தர் ரெண்டு பேர் மேல இல்லை; 32 பேரு மேல, புகார் பண்ணிருக்காராம். எல்லாமே 'எக்குத்தப்பான' கம்பிளைன்டாம். மத்த டாக்டர்களெல்லாம் கொந்தளிச்சுட்டு இருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''அதே ஜி.எச்.,க்கு வர்ற போலீஸ்காரங்க கொந்தளிக்கிற விஷயம் உனக்குத் தெரியுமா? தெரியுமா? தெரியுமா?,'' என்று சித்ரா கேட்க,


'என்னக்கா! எக்கோ கொடுக்குற' என்றாள் மித்ரா.


''நான் கொடுக்கலைடி...! இது போலீஸ்காரங்க புலம்பலோட எக்கோ... ஜி.எச்.ல மெடிக்கல் ரிக்கார்டு எல்லாம் பாத்துக்கிற ஒரு ஆசாமி இருக்காராம்; பழம் கெடைக்கலைன்னு கோவிச்சுட்டுப் போன சாமி பேரைக் கொண்ட அவரு, பணம் கெடைக்கலைன்னா, ஒரு ரிக்கார்டையும் நகர்த்த மாட்டாராம்; கேஸ்க்கு வர்ற போலீஸ்காரங்ககிட்ட, 'வூண்ட் சர்ட்டிபிகேட்', போலீஸ்க்குத் தேவையான மெடிக்கல் ரிக்கார்டு கொடுக்கிறதுக்கு, மெரட்டி, மெரட்டி காசு வாங்குறாராம். ஒரு நாளைக்கு மூவாயிரம் ரூபாயாவது தேத்திருவாராம்!,'' என்றாள் சித்ரா.


''போலீஸ்ட்டயே லஞ்சமா? நம்பவே முடியலையே!,'' என்றாள் மித்ரா.


''நானும் நம்பலைதான்டி! ஆனா, அந்த ஆபீசர்தான், 15 வருஷமா, அதே 'சீட்'ல இருக்காராம்; போலீஸ்காரங்ககிட்ட காசு பறிக்கிறது மட்டுமில்லாம, வாய்க்கு வந்தபடி திட்டுவாராம். வேற வழியில்லாம, காசைக் கொடுத்துட்டு, திட்டையும், ரிக்கார்டையும் வாங்கிட்டுப் போறோம்னு பல போலீஸ்காரங்க தகவல் சொல்றாங்க,' என்றாள் சித்ரா.


''அக்கா! குனியமுத்தூர்ல சிறப்புப் பிரிவுல இருக்கிற ஒரு காக்கிச்சட்டை, டூவீலர் திருடுற கும்பலோட கூட்டணி வச்சிட்டு, வலுவா சம்பாதிக்குதாம்; ஒரு குறிப்பிட்ட கும்பலுக்கு, உளவுத்துறையில பேசுற விஷயத்தை எல்லாம் 'லீக் அவுட்' பண்ணி அல்லது 'ரிக்கார்டு' பண்ணி, அப்பிடியே போட்டுக் கொடுக்குறதுதான் அவரோட வேலையாம்,'' என்று மித்ரா சொல்லும்போதே, 'ஆர்டர்' கொடுத்த உணவு வந்தது.


''அம்மா... தாயே! கொஞ்ச நேரத்துக்கு சைலன்ஸ்சா இருக்கியா? வயிற்றுக்கு உணவில்லாத போதுதான், இனி செவிக்கு உணவு!,'' என்று சொல்லி விட்டு, ரவா ரோஸ்ட்டை நொறுக்க ஆரம்பித்தாள் சித்ரா.
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X