சென்னை உயர் நீதிமன்றத்தில், ஊழல் புகார்களுக்கு ஆளான ஒருவருக்கு, கூடுதல் நீதிபதியாக, பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட விவகாரம், இரண்டாவது நாளாக, மீண்டும், பார்லிமென்ட்டில் எதிரொலித்தது.
ராஜ்யசபா கூடியதும், கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கோரி, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் இறங்கினர். இதையடுத்து, சபை, 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது. லோக்சபாவில், இதே விவகாரம் குறித்து விவாதிக்க, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, அனுமதிக்கும்படி, அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் தம்பித்துரை, 'நோட்டீஸ்' வழங்கியிருந்தார்.
ஒத்திவைப்பு தீர்மானத்தை அனுமதிக்கும்படி கேட்டு, தம்பித்துரை பேசியதாவது: ஊழல் நீதிபதிக்கு, பணி நீட்டிப்பு வழங்கும்படி, தி.மு.க., தன்னை அணுகியதாக, முன்னாள் சட்ட அமைச்சர் கூறியுள்ளது பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர், இதுகுறித்து, மிரட்டியும் உள்ளார். இவ்வளவு தூரம், உண்மை வெளியாகியுள்ள நிலையில், மிரட்டல் விடுத்த, அந்த அமைச்சர் யார் என்பதை, சபைக்கு அறிவித்தாக வேண்டும். நீதித்துறை நியமனங்களில், எப்படி, தி.மு.க., இவ்வளவு தூரம், குறுக்கீடு செய்தது என்பதை, மத்திய அரசு, வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு, தம்பித்துரை பேசினார்.
சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: இது, மிக முக்கியமான விவகாரம். சட்ட அமைச்சர் என்ற வகையில், இந்த பிரச்னைக்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. சட்டத்துறை விவகாரம் என்றாலுமே, இப்போது பொது விவாதத்திற்கு, விஷயம் வந்துவிட்டது. எனவே, விளக்கம் அளிப்பதில், தவறு ஏதும் இருக்க போவதில்லை. நீதிபதிகளை தேர்வு செய்வதற்கு பரிந்துரைக்கும், 'கொலீஜியம்' அமைப்பு, 2003 பிப்ரவரியில் கூடி விவாதித்த போது, அந்த சர்ச்சைக்குரிய நீதிபதிக்கு, 'பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டாம்' என, கூறிவிட்டது. இருப்பினும், பிரதமர் அலுவலகத்திலிருந்து, 'மீண்டும் ஏன் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது' என கேட்டு, தகவல் வந்தது. அப்போதும், தனது கருத்தில், கொலீஜியம் அமைப்பு உறுதியாக இருந்தது. ஆனாலும், அதன் பிறகு, அந்த நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதெல்லாம், பழைய விஷயங்கள். பணி நீட்டிக்கப்பட்ட அந்த நீதிபதி, தற்போது உயிருடன் இல்லை. மற்றவர்களும் ஓய்வுபெற்ற நீதிபதிகளாகி விட்டனர். சாந்திபூஷண் வழக்கில், சுப்ரீம் கோர்ட் சொன்னது போல, காலச் சக்கரத்தை எதிர் திசையில் திருப்பிட இயலாது. அ.தி.மு.க., எம்.பி.,க்கள், இந்த விவகாரத்தை கிளப்புவது, வரவேற்கத்தக்கதே. அப்போது தான், நீதிபதிகள் நியமனத்தில், இனிமேல், மிகுந்த கவனத்துடன் இருக்க முடியும். நீதிபதிகள் நியமனத்திற்கு என்றே, தேசிய நீதி கமிஷன் அமைக்க, மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். ஆனாலும், மிரட்டல் விடுத்த, தி.மு.க., அமைச்சர் யார் என்பதை அறிவிக்க வேண்டுமென, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், அமளியில் ஈடுபடவே, அடுத்தடுத்து இரண்டு முறை, லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
- நமது டில்லி நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE