புதுடில்லி: 'நீதிபதி நியமன விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மூவர், வளைந்து கொடுத்தனர்' என, 'பிரஸ் கவுன்சில்' தலைவரும், சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்ததற்கு, முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதி மறுப்பு தெரிவித்திருந்தார். அவரிடம் நேற்று, ஆறு கேள்விகளை கேட்டு, பதிலளிக்குமாறு கட்ஜு வற்புறுத்தியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிய, மார்க்கண்டேய கட்ஜு, 2004 நவம்பரில், கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய, தமிழகத்தை சேர்ந்த ஒருவர் குறித்து சில சந்தேகங்களை எழுப்பி, விசாரணை நடத்துமாறு சுப்ரீம் கோர்ட்டுக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, அந்த நீதிபதியின் முந்தைய செயல்பாடுகள் குறித்து, ஐ.பி., எனப்படும் மத்திய அரசின் உளவுப்பிரிவினர் ரகசியமாக விசாரணை நடத்தி, அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் அளித்தனர். அதில், அந்த தமிழக நீதிபதி மீதான புகார்கள் உறுதி செய்யப்பட்டன. எனினும், அந்த நீதிபதியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக, மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கியது, முந்தைய மன்மோகன் சிங் அரசு. அதற்கு, மன்மோகன் சிங் அரசுக்கு ஆதரவு கொடுத்த, தி.மு.க., அளித்த நெருக்கடி தான் காரணம் என, கட்ஜு தன் இணையதள பக்கத்தில் எழுதியிருந்தார். அதில், 'நீதிபதி விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஆர்.சி.லஹோதி உட்பட மூன்று நீதிபதிகள், மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்தனர்' எனவும் தெரிவித்திருந்தார்.
அதற்கு, நேற்று முன்தினம், சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, கே.ஜி.பாலகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். அதுபோல், மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி, ஆர்.சி.லஹோதியும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர்கள் இருவரும், 'இப்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருக்கு இந்த நேரத்தில், இந்த தகவலை தெரிவிக்க வேண்டிய தேவையில்லை' என, கூறியிருந்தனர். நீதிபதி லஹோதி, ''நான் எதற்காகவும் வளைந்து கொடுக்கவில்லை,'' என்று கூறியிருந்தார்.
அவர்களுக்கு பதிலளித்து, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நேற்று தன் இணையதள பக்கத்தில் எழுதி, லஹோதியிடம் சில கேள்விகளை கேட்டுள்ளதாவது:
* சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குழு பரிந்துரைக்கு மாறாக, பிற இரண்டு நீதிபதிகளின் பரிந்துரைக்கு எதிராக, நீதிபதி லஹோதி, சர்ச்சைக்குரிய அந்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கினாரா, இல்லையா...
* ஐ.பி., விசாரணை அறிக்கையில், அந்த சர்ச்சைக்குரிய நீதிபதி, ஊழல்வாதி தான் என்பது தெரிவிக்கப்பட்ட பிறகும், நீதிபதி லஹோதி ஏன், கூடுதலாக ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கினார்...
* சர்ச்சைக்குரிய நீதிபதியின் முறைகேடுகள் குறித்து சென்னையிலிருந்த நான், லஹோதிக்கு போன் செய்தேனா, இல்லையா...
* இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, கடிதம் அனுப்பினேனா, இல்லையா...
* என் பரிந்துரையின் படி தானே, நீதிபதி லஹோதி, அந்த நீதிபதி குறித்து விசாரிக்க உத்தரவிட்டார்...
* அறிக்கையில் அந்த நீதிபதி ஊழல்வாதி என்பது உறுதியானதும், நான் டில்லி சென்று, லஹோதியை சந்தித்து, அந்த நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என கேட்டேனா, இல்லையா... இவ்வாறு, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
சர்ச்சைகள் இவருக்கு சகஜம்:
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு, 2006 முதல் 2011 வரை, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி வகித்தார். அப்போது, பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடி தீர்ப்புகளை பிறப்பித்தார். 'பிரஸ் கவுன்சில்' எனப்படும், பத்திரிகை மற்றும் ஊடகங்களின் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவராக, 2011 முதல் பணியாற்றும் நீதிபதி கட்ஜு, இந்த ஆண்டு, அக்டோபர் 4ல், அந்த பொறுப்பில் இருந்து ஓய்வுபெறுகிறார்.
* சில ஆண்டுகளுக்கு முன், கருத்தரங்கு ஒன்றில் பேசிய கட்ஜு, '90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்; 80 சதவீத இந்துக்களும், 80 சதவீத முஸ்லிம்களும் மதச்சார்பானவர்கள். ஜாதி, மதத்தின் அடிப்படையில் தான் தேர்தல்கள் நம் நாட்டில் நடைபெறுகிறது. வேட்பாளரின் திறமையைப் பார்த்து தேர்தல் நடைபெறுவதில்லை' என பேசி, சர்ச்சையில் சிக்கினார்.
* அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு குறித்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த கட்ஜு, 'ஏதோ நடக்கக் கூடாதது நடந்துள்ளது' என, கூறி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்திற்குஆளானார்.
* சட்டம் அனுமதி அளித்தால், ஊழல்வாதிகளை தூக்கில் போட்டு விடுவேன் என, ஒரு முறை கூறி, சர்ச்சையை ஏற்படுத்தினார். எனினும், வரலாற்று சிறப்பு மிக்க பல முக்கிய தீர்ப்புகளை கட்ஜு வழங்கியுள்ளார்.
இந்த நேரத்தில் ஏன் இந்த விவகாரம்?
நீதிபதி, மார்க்கண்டேய கட்ஜு கூறியது: நான் வெளியிட்ட தகவல்களை மறுத்து பேசுபவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள், 'இந்த நேரத்தில் ஏன், நான் இந்த தகவல்களை வெளியிட வேண்டும்' என, கேட்டுள்ளனர். ஏராளமான தமிழர்கள், 'பேஸ்புக்' இணையதளத்தில், தங்களுக்கு தெரிந்த தகவல்களை வெளியிடுகின்றனர். அது போல் நானும் எனக்கு தெரிந்த, தமிழகத்தில் நான் சந்தித்த அனுபவத்தை வெளியிட்டேன். இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை. நான் கூறியதில் உள்ள உண்மையை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள், தகவல் தெரிவித்த நேரம் சரியில்லை என கூறுவதும் வியப்பாக உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு:
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் குறித்து, பிரஸ் கவுன்சில் தலைவர், மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்த புகார்கள் குறித்து, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சுப்ரீம் கோர்ட்டில், பொது நலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர், ராஜாராமன் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விவகாரத்தில் மூன்று நீதிபதிகள், மத்திய அரசுக்கு வளைந்து கொடுத்தனர் என, நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். என்னைப் பொறுத்த மட்டில், நீதிபதிகளின் செயல்கள் குறித்து எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது. அவ்வாறு கேட்டால், அது நீதித்துறையை சிறுமைப்படுத்திவிடும்.
சொலி சொராப்ஜி, முன்னாள் அட்டர்னி ஜெனரல்
நீதிபதிகள் குழுவான, 'கொலீஜியம்' முறை மாற்றியமைக்கப்பட வேண்டும்; இது என் தனிப்பட்ட கருத்து. தேசிய நீதித்துறை கமிஷன் என்பதும், கொலீஜியம் போன்றது தான். பரவலாகவும், விரிவாகவும் முடிவுகள் எடுக்கக் கூடியது நீதித்துறை கமிஷன். ஒன்பதாண்டு கழித்து, நீதிபதி, கட்ஜு இந்த விவகாரத்தை எழுப்பியிருக்கத் தேவையில்லை.
அபிஷேக் சிங்வி, காங்கிரஸ் மூத்த தலைவர்
முந்தைய மன்மோகன் சிங் அரசில், நீதித்துறை எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை, நீதிபதி கட்ஜு வெளிப்படுத்தியுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு, காங்கிரசும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் பதிலளிக்க வேண்டும். இது, மிகவும் முக்கியமான பிரச்னை; துரதிருஷ்டவசமானதும் கூட.
முக்தர் அப்பாஸ் நக்வி, பா.ஜ., துணை தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE