சென்னை: சட்டசபையில், நேற்று, அமைச்சர் பேச் சை, சபை குறிப்பில் இருந்து நீக்கக் கோரி, அமளியில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர். நடப்பு கூட்டத் தொடரில், இதுபோல், அவர்கள் வெளியேற்றப்படுவது, இது, நான்காவது முறை என்பதால், 'தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும், சபை நடவடிக்கையில், கலந்து கொள்ள இயலாது' என, சபாநாயகர் அறிவித்தார்.
சட்டசபையில், நேற்று, தமிழகத்தின் சில பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்படுவதால், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு, பதில் அளித்து, வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேசினார்.அப்போது அவர், ''வறட்சி, வெள்ளம், 'சுனாமி' போன்ற பேரிடர்களை, கையாள்வதில் தமிழக அரசு, நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. ஆனால், 'சுனாமி' தமிழகத்தைத் தாக்கிய போது, தி.மு.க.,வினர் ஓடி, ஒளிந்து கொண்டனர்,'' என, குறிப்பிட்டார்.
எதிர்ப்பு: இதற்கு, தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அமைச்சரின் பேச்சை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என, சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்தனர். தி.மு.க., மூத்த தலைவர்கள், துரைமுருகன், ஸ்டாலின் எழுந்து நின்று, சபாநாயகரை தொடர்ந்து வலியுறுத்தினர்.அவர்களுக்கு ஆதரவாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், எழுந்து நின்று கோஷமிட்டனர். திராவிட மணி, அன்பழகன், சக்கரபாணி, பெரியகருப்பன், ராமச்சந்திரன் ஆகியோர், சபாநாயகர் இருக்கையை சுற்றி நின்று வாதிட்டனர். ''தி.மு.க., உறுப்பினர்கள், இருக்கைக்கு செல்ல வேண்டும். தொடர்ந்து பேச வாய்ப்பு அளிக்கப்படும்,'' என, சபாநாயகர் தெரிவித்தார்.
மேலும், சபை முன்னவரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், ''விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படும். தி.மு.க., உறுப்பினர்கள், இருக்கைக்குத் திரும்ப வேண்டும்,'' என, வேண்டுகோள் விடுத்தார்.இந்த வேண்டுகோள்களை ஏற்காத, தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள்,' அமைச்சரின் பேச்சை, சபை
குறிப்பில் இருந்து, நீக்க வேண்டும்' என, தொடர்ந்து வலியுறுத்தினர். சில எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் இருக்கை முன், தரையில் அமர்ந்து, கோஷம் எழுப்பினர். அதைத் தொடர்ந்து,
திமு.க., - எம்.எல்.ஏ.,க்களை வெளியேற்றும்படி, சபை காவலர்களுக்கு,
சபாநாயகர் உத்தரவிட்டார். தரையில் அமர்ந்திருந்த, தி.மு.க., -
எம்.எல்.ஏ.,க்களை, குண்டுக் கட்டாகத் தூக்கி, சபை காவலர்கள் வெளியேற்றினர்.
அவர்களைத் தொடர்ந்து, பிற தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும்
வெளியேற்றப்பட்டனர்.
தரையில் அமர்ந்து: சபையில்
இருந்து, 'லாபி' பகுதிக்கு சென்ற தி.மு.க.,வினர். அங்கும் தரையில்
அமர்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து, ''லாபியில் இருந்தும்,
அவர்களை வெளியேற்றுங்கள்,'' என, சபாநாயகர் உத்தரவிட்டார்.'லாபி'யில் அமந்
திருந்து கோஷமிட்ட, எம்.எல்.ஏ., ஒருவரை, தூக்கிச் சென்று, சபைக்கு வெளியே,
காவலர்கள் அனுப்பினர். தி.மு.க.,வினரின் கோஷம், அதைக் கண்டித்து, ஆளும்
கட்சி எம்.எல்.ஏ.,க்களின் கோஷம் என, சட்டசபையில், 10 நிமிடங்களுக்கு மேலாக,
கூச்சல், குழப்பம்நிலவியது. யார், என்ன பேசுகிறார் என்பதே கேட்கவில்லை. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதன்பின் சபையில் நடந்த விவாதம்:
மா.கம்யூ., பாலகிருஷ்ணன்: வருவாய் துறை அமைச்சரின் பேச்சை சபை குறிப்பில் இருந்து நீக்கி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, சபைக்கு அனுமதிக்க வேண்டும்.
சபாநாயகர்: சபையில், ஏதாவது ஒரு அமளியை ஏற்படுத்தி, சபையை நடத்த விடக் கூடாது என, முடிவு செய்து, தி.மு.க.,வினர் சபைக்கு வருகின்றனர். ஒரு பிரச்னை குறித்து பேச வேண்டிய நேரத்தில், தேவையில்லாமல் அமளி செய்து, என் இருக்கையைச் சுற்றிக் கொண்டு, கோஷமிடுகின்றனர். தி.மு.க.,வினரின் செயலை சரி என்கிறீர்களா?
பாலகிருஷ்ணன்: தி.மு.க.,வினர், சபாநாயகர் இருக்கையை சுற்றிக் கொண்டு கோஷமிட்ட
செயல்களை, நியாயப்படுத்தவில்லை. அதே நேரத்தில், அமைச்சர் சொல்லிய கருத்தால், பிரச் னை ஏற்பட்டது. எனவே,
அக்கருத்தை, சபை குறிப்பிலிருந்து நீக்கிவிட்டு, சபைக்குள் அவர்களை அனுமதிக்கலாம்.
சபை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம்: தி.மு. க., -
எம்.எல்.ஏ.,களிடம், 'பேச வாய்ப்பு அளிக்கப்படும்;
இருக்கைக்குசெல்லுங்கள்' என, நான் விடுத்த வேண்டுகோளையும் அவர்கள்
ஏற்கவில்லை.
சபாநாயகர்: அவர்கள், தகாத வார்த்தைகளால் பேசினர்.
எனவே, சபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.இதே
கோரிக்கையை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களும் வலியுறுத்தினர். ஆனால்,
சபாநாயகர் ஏற்கவில்லை.சிறிது நேரம் கழித்து, சபாநாயகர் அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டார்.
அதன் விவரம்:
தி.மு.க., உறுப்பினர்கள்,
வேண்டுமென்றே திட்டமிட்டு, என் உத்தரவை மீறி, என் இருக்கைக்கு அருகில்
வந்து, குழுவாக அமர்ந்து கொண்டு, மறியல் நடத்தும் நோக்கத்துடன், சபை
நடவடிக்கைகளுக்கு, இடையூறு செய்தனர். சட்டசபை விதிகளை,மரபுகளை, துச்சமெனக் கருதி செயல்பட்டனர். சபை முன்னவரை பேச அழைத்தபோது, அவரது பேச்சையும் கேட்க பொறுமையின்றி, கை நீட்டி பேசிக் கொண்டு, அவை நடவடிக்கைகளுக்கு, குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.சபையை நடத்த விடாமல், தொடர்ந்து, திட்டமிட்டு, சபை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால், சபையிலிருந்து சபை காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இக்கூட்டத் தொடரில், நான்காவது முறையாக, தி.மு.க., உறுப்பினர்கள், வெளியேற்றப்பட்டுள்ளனர். பேரவை விதி, 120ன் கீழ், ஒரு உறுப்பினர் இரண்டு முறைக்கு மேல் வெளியேற்றப்பட்டதால், அவர் அந்தக் கூட்டத் தொடர் முழுவதும், அவை நடவடிக்கைகளில், கலந்து கொள்ள இயலாது.தி.மு.க., உறுப்பினர்கள், இரண்டாவது முறையாக வெளியேற்றப்பட்ட போதே, இந்த கூட்டத் தொடர் முழுவதும், சபை நடவடிக்கையில் கலந்து கொள்ள இயலாது என, அறிவித்து இருக்கலாம். ஆனால், அவர்களும், தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அவை நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. எனினும், தொடர்ந்து வேண்டுமென்றே, சபை நடவடிக்கைகளுக்கு, இடையூறு செய்து கொண்டு, நான்காவது முறையும் வெளியேற்றப்பட்டுள்ளதால், தி.மு.க., உறுப்பினர்கள், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும், சபை நடவடிக்கையில், கலந்து கொள்ள இயலாது.இவ்வாறு, சபாநாயகர் தெரிவித்தார்.